ரமலான் சிந்தனைகள் - 23: உங்கள் தலைவிதியை அல்லாஹ் தீர்மானிப்பான் - இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்)...?

முஸ்லீம்கள் எல்லாமே அல்லாஹ்வின் சித்தத்தின் படி, அல்லாஹ் நாடினால் மட்டுமே நடக்கிறது என்று நம்புகிறார்கள். ஆகவேதான் அவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்யத்துவங்கும்போது, அல்லது அது பற்றி பேசும்போது இன்ஷா அல்லாஹ் என்று சொல்கிறார்கள். இதைச் சொல்லும் குர்-ஆன் வசனங்கள் பல உண்டு (3:73,74; 5:54; 14:27; 57:21; 62:4). மேலும், ஒருவரை சரியான வழியில் நடக்கச் செய்வதும், வழிதவறச் செய்வதும் (தவறான வழியில் நடத்துவதும்) கூட அல்லாஹ்தான் என்று குர்-ஆன் 6:39,125; 14:4; 16:93; 35:8 சொல்கிறது. அது மட்டுமல்ல, அல்லாஹ் தவறான வழியில் நடத்துபவர்களை வேறு எவரும் சரியான வழியில் நடத்த முடியாது என்றும், அல்லாஹ் சரியாக வழிநடத்துபவர்களை எவரும் தவறாக வழிநடத்த முடியாது என்று குர்-ஆன் 7:186; 13:33; 17:97; 18:17; 39:37 ஆகிய வசனங்கள் கூறுகிறது.

அல்லாஹ்வால் முன்குறிக்கப்படுதல் தொடர்பான இறையியல் பிரச்சனை பற்றியோ, மனிதனுடைய சுயாதீனத்தன்மை பற்றிய தத்துவார்த்த பிரச்சனை பற்றியோ குர்-ஆன் பேசுவதில்லை. குர்-ஆன் 37:96 சொல்வது போல, “"உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்." நீங்கள் செய்யும் எல்லாவற்றிற்கும் காரணம் அல்லாஹ்தான். ஆயினும், அல்லாஹ்வை எவரும் கேள்வி கேட்க முடியாது. அல்லாஹ் எவருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று முஸ்லீம்கள் நம்புகின்றனர். ஏனெனில், எல்லாவற்றையும் அல்லாஹ் முன்குறித்தே படைத்திருக்கின்றான் என குர்-ஆன் 54:49 கூறுகிறது. ஆகையால், குர்-ஆனின் கூற்றுப்படி ஒருவர் நல்லவராக இருப்பதும் கெட்டவராக இருப்பதும், நல்லதோ கெட்டதோ எதுவும் அல்லாஹ்வின் முன்குறித்தலின் படியேயன்றி, மனிதன் சுயமாக எதையும் செய்வதில்லை என முஸ்லீம்கள் நம்புகின்றனர். அல்லாஹ் நாடினால்... என்று சொல்லும் முஸ்லீம்கள், அல்லாஹ் என்ன நினைக்கிறார் என்பதையோ, அல்லாஹ்வுக்கு விருப்பமானதா என்றோ உறுதியாக எதையும் சொல்ல முடியாது. ஏனெனில், இஸ்லாமின்படி, மனிதனுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையேயான உறவு அன்பை அடிப்படையாகக் கொண்ட இருவழிப்பாதை அல்ல, மாறாக பயத்தை மையமாகக் கொண்ட ஒருவழிப்பாதை.

தேவனுடைய சித்தம் பற்றி பரிசுத்த வேதாகமம் சொல்வதற்கும், அல்லாஹ்வின் சித்தம் பற்றி குர்-ஆன் சொல்வதற்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள். மனிதன் தன் சுயாதீனத்தை தவறாகப் பயன்படுத்தி தேவனை விட்டுவிலகிச் சென்றாலும், அன்பின் தேவன் திரும்பவும் மனிதனை மீட்டு உறவை புதுப்பித்துக் கொள்ள அவருக்கு உள்ள விருப்பததை நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம். வாழ்க்கையில் அனுபவிக்கிறோம். துன்மார்க்கனின் மரணத்தைக் காட்டிலும், “அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம்” என்று தேவன் கூறுகிறார்.   “ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும்” நான் உனக்கு முன் வைக்கிறேன், நீ தெரிந்து கொள் என்று தேவன் சொல்வதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம் (யாத்திராகமம் 30:15,19).  வேதாகமத்தின் தேவன் எதையும் கட்டாயப்படுத்துவதில்லை. அவர் கண்ணியமானவர். தேவனுடைய கட்டளைகள் எல்லாம் “அன்பு செய்தல்” என்ற கற்பனையில் அடங்கியிருக்கிறது என்று இயேசு சொன்னார். மேலும்,  “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” என்று  யோவான் 14:15ல் இயேசு சொல்லி இருக்கிறார்.  ஆச்சரியமான அன்பு!

சர்வ சிருஷ்டிகளையும் படைத்த தேவனின் உண்மையான விருப்பம், பயத்துடன் வாழ்வது அல்ல, “அப்பா, பிதாவே!” என்று அன்புடனும் உரிமையுடனும் அவருடன் நெருங்கிய மகிழ்ச்சியான வாழ்வைப் பெறுவதுதான் என்பதை முஸ்லீம்கள் அறிந்துகொள்ளவும், அதை அவர்களிடம் எடுத்துச் சொல்ல வாய்ப்புகள் கிடைக்கவும் ஜெபிப்போம்.

- அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 16th May 2020

Source: http://arputhaa.blogspot.com/2020/05/23.html