ரமலான் சிந்தனைகள் - 25: அல்லாஹ் தரும் கூலி

"Thawab" என்ற அரபி வார்த்தை அல்லாஹ் ஒரு மனிதன் செய்யும் செயலுக்கு அளிக்கும் கூலி அல்லது வெகுமதியைக் குறிப்பிடப் பயன்படுத்துகிறது. குர்-ஆன் நெடுகிலும் வருகிற இவ்வார்த்தையானது, இவ்வுலகத்திலும், அதிலும் குறிப்பாக மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையிலும் அல்லாஹ் கொடுக்கும் வெகுமதி மற்றும் தண்டனை இரண்டையும் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், ஹிஜ்ரிக்குப் பின்பு வருகிற குர்-ஆன் அத்தியாயங்களில், இந்த வார்த்தை “தண்டனை” ஐக் குறிக்கிறதாக அறிஞர்கள் கருதுகின்றனர். குர்-ஆனில், பல தண்டனைக் கதைகள் இருப்பதை அறிவீர்களா! அவை, அல்லாஹ் உலகிற்கு அனுப்பினதாக குர்-ஆன் கூறும் நபிமார்களின் கதைகளுடன் தொடர்புடையவை. அல்லாஹ் 124000 நபிமார்களை உலகிற்கு அனுப்பினார் என இஸ்லாமிய பாரம்பரிய நூல்கள் சொன்னாலும், குர்-ஆனில் 28 நபிமார்களின் பெயர்களே இருக்கிறது. அதிலும், 25 பேர் பரிசுத்த வேதாகமத்தில்  வருகிற நபர்களைக் குறிப்பதாக வருகிறது எனப்படுகிறது. குர்-ஆனின் அத்தியாயம் 26ல் மட்டும் ஏழு “தண்டனைக் கதைகள்” வருகின்றன. அவை, மூஸா, இப்ராஹீம், நூஹ், ஹூத், லூத், ஸாலிஹ் மற்றும் ஷுஐப் ஆகியவர்களைப் பற்றிய கதைகளைக் கூறுகின்றன. இதுபோக, தண்டனைக் கதைகளை குர்-ஆனில் பல இடங்களில் காணலாம். அவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே சொல்லப்பட்டதை அப்படியேவோ அல்லது சிறு மாற்றத்துடனோ திரும்பச் சுருக்கமாக சொல்வதாக இருக்கின்றன.

இத்தண்டனைக் கதைகளின் சாராம்சம் இதுதான்: அல்லாஹ் தன் நபியை மக்களிடையே அனுப்புகிறார். அந்நபி தன் மக்களை அல்லாஹ்வுக்கு அஞ்சும்படியும், கீழ்ப்படியவும் அழைக்கிறார். ஆனால், அந்நபியை நம்பாத மக்கள் அவரை நிராகரித்து அவமதிக்கின்றனர். உடனே, அல்லாஹ் அம்மக்களை அழித்து, தன் நபியைக் காப்பாற்றிவிடுகிறார். இதற்கு விதிவிலக்காக குர்-ஆனில் சொல்லப்பட்டிருப்பது, யூனுஸ் (வேதாகமத்தில், யோனா) கதை மட்டுமே. குர்-ஆன் 37:139-148ன்  படி, யூனுஸின் மக்கள் அவருடைய செய்தியை ஏற்றுக் கொண்டு தண்டனைக்கு தப்பிவிடுகிறார்கள். இத்தண்டனைக் கதைகள் மூலமாக, குர்-ஆன் ஓதுகிற, கேட்கிற, மற்றும் வாசிக்கிறவர்களுக்கு சொல்லப்படும் செய்தி என்னவெனில், முஹம்மது மூலமாக சொல்லப்படுவதற்கு செவிகொடுக்காத ஜனங்களுக்கும் “தண்டனைக் கதைகளில்” வரும் மக்களுக்கு என்ன நடந்ததோ அதுவே செய்யப்படும் என்பதே. இஸ்லாமிய மார்க்கத்தில் “பயம்” முக்கிய பங்கு வகிப்பதை நாம் முன்னமே வாசித்திருக்கிறோம்.

குர்-ஆன் மற்றும் பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிற தீர்க்கதரிசிகளைப் பற்றிய சம்பவங்களில் இருந்து நாம் பல காரியங்களையும், இரண்டிற்குமிடையேயான வித்தியாசங்களையும் விளங்கிக் கொள்ளலாம். வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிற படிப்படியான வெளிப்படுத்தல் என்பதற்கு முற்றிலும் எதிரிடையான ஒன்றை குர்-ஆனில் காண்கிறோம். அல்லாஹ்வின் செய்தியை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அழிக்கப்படுவதுடன் அக்கதை முடிந்து, முஹம்மது காலத்திலிருந்து அது வெறும் எச்சரிக்கையாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அத்துடன், மறைமுகமாக அல்லது நேரிடையாக இஸ்லாம் கூறும் செய்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு மிரட்டல் அல்லது எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ஏனெனில், இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் அல்லாஹ்வால் அனுப்பப்படும் நபிகள் “எச்சரிக்கை செய்பவர்களே.” ஆனால், பரிசுத்த வேதாகமத்தில் மனிதர்கள் மீது தேவன் கொண்டிருக்கும் அன்பையும், மனிதனை இரட்சிக்கும் இறைத்திட்டத்தின் படிப்படியான நிறைவேறுதலையும் நாம் காண்கிறோம். வேதாகமம், தேவனை விட்டு விலகிச் சென்ற மனிதனுக்கு மீட்பையும், அம்மீட்பை இலவசமாக அருளுகின்ற மீட்பரையும் பற்றிச் சொல்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் சொல்வது போல, “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்” (ரோமர் 6:23).

வேதாகமம் கூறும் நித்திய ஜீவ மார்க்கத்திற்கு  முஸ்லீம்கள் அனைவரும் வந்து சேர ஜெபிப்போம். “நித்திய ஜீவனை அளிப்பேன்” என்று வாக்குப்பண்ணின தேவனை பற்றி முஸ்லீம்கள் அறிந்து கொள்ள "திறந்த வாசல்” (வாய்ப்புகள்) உண்டாகவும் ஜெபிப்போம்.

- அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 18th May 2020

Source: http://arputhaa.blogspot.com/2020/05/25.html


2020 ரமலான் சிந்தனைகள் பக்கம்

சகோ. அற்புதராஜ் சாமுவேல் பக்கம்