ரமலான் சிந்தனைகள் 27: இஸ்லாமிய சொர்க்கம் மற்றும் நரகம்

எல்லா மனிதர்களுமே நரகத்திற்கு வந்தாக வேண்டும் என்று குர்-ஆன் 19:71 சொல்வதை நாம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, குர்-ஆன் கூறும் சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி இன்று காணலாம். குர்-ஆனைப் பொறுத்வரையில், சொர்க்கத்தைப் பற்றி வரும் வசனங்களைப் பார்க்கிலும், நரகத்தைப் பற்றி குறிப்பிடும் வசனங்கள் மிக அதிகம். நரகத்தைக் குறிப்பிட குர்-ஆன் அதிகம் பயன்படுத்தும் பதம் “நெருப்பு” (an-Nar) ஆகும். நரகத்தின் நெருப்பானது, உலகத்தில் உள்ள அக்கினியைக் காட்டிலும் 70 மடங்கு அதிக வெப்பமானதாக இருக்கும் என இஸ்லாமிய பாரம்பரிய நூல்கள் கூறுகின்றன. குர்-ஆன் 15:44ன் படி, மனிதர்கள் செய்த குற்றங்களுக்குத் தக்கதாக அவ்ர்கள் செல்லும் வகையில் ஏழு வாசல்கள் அல்லது நிலைகள் நரகத்தில் இருப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். முதலாவது நிலையானது முஸ்லீம்களுக்கும், இரண்டாவது நிலையானது கிறிஸ்தவர்களுக்கும், மூன்றாவது நிலையானது யூதர்களுக்கும், நான்காவது நிலையானது பெர்சியர்களுக்கும் (அல்லது ஜோராஸ்ட்ரியர்கள்), ஐந்தாவது நிலையானது மந்திரவாதிகள் மற்றும் பல தெய்வங்களை வணங்குகிறவர்களும், ஆறாவது நிலையானது சிலை வணங்கிகளுக்கும், மற்றும் கடைசியும் மிகவும் பயங்கரமான ஏழாவது நிலையானது மாய்மாலக்காரர்களுக்கான மிகக் கொடூரமான தண்டனை வழங்கும் இடமாக இருக்கும் என இஸ்லாம் கூறுகிறது (குர்-ஆன் 70:15-18; 104:4-7; 4:10; 54:48; 74:42).

நரகத்தைப்ப் பற்றியும் நரகத்தில் மனிதனுக்குக் கொடுக்கப்படும் தண்டனைகள் பற்றியும் குர்-ஆன் கூறும் விவரங்கள் மிகவும் பயங்கரமான திகில் படத்தைக் காட்டிலும் கொடுமையானதாகவும், வாசிப்பவர் மனதில் ஒரு பயத்தை உண்டு பண்ணுவதாகவும் இருக்கிறதைக் காணலாம்.  பல நடைமுறைக் காரணங்களுக்காக நான் அவைகளை எல்லாம் விளக்காமல், இருப்பதிலேயே குறைந்த தண்டனை ஒன்றே ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். நரக அக்கினியில் தோல் கருகி மனிதர்கள் வேதனைப் படும்போது, அவர்கள் தொடர்ந்து அந்த வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பதற்காக அவர்களுக்கு புதுத் தோல்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் என குர்-ஆன் 4:56 சொல்கிறது. தோல் இருக்கும் வரைதான் நீங்கள் தொடுதல் உணர்ச்சியையும், வலியையும் உணரமுடியும் என்பது அறிவியல். அல்லாஹ் அளிக்கும் நரக தண்டனை பற்றி அதிகம் அறிய விரும்பினால் பின்வரும் குர்-ஆன் வசனங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள் (குர்-ஆன் 4:56; 14:17, 50; 22:19-22;25:14; 37:62-67; 56:42-44; 67:7,8; 69:30-32, 36; 78:25, 30). குர்-ஆன் கூறுவதை விட பலமடங்கு கொடிய நரக  தண்டனைகளை இஸ்லாமிய பாரம்பரிய நூல்கள் சொல்கின்றன. நரக தண்டனைக்குக் காரணம் அல்லாஹ் அனுப்பிய தூதரை நிராகரித்ததுதான் என குர்-ஆன் 35:37; 67:8-11 கூறுகிறது.

குர்-ஆனின் படி, முதல் நிலை நரகத்தில் இருக்கும் முஸ்லீம்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும்  அனைவரும் நரகத்திலேயே காலம் தள்ள வேண்டியது தான். முஸ்லீம்களுக்கு அல்லது அல்லாஹ் விரும்புபவர்களுக்குக் கொடுக்கும் இஸ்லாமிய சொர்க்கம் பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  முஸ்லீம்கள் மட்டுமே செல்லக் கூடிய இஸ்லாமிய சொர்க்கத்திலும் எட்டு நிலைகள் இருப்பதாக குர்-ஆன் கூறுவதாக அறிஞர்கள் சொல்கின்றனர். இஸ்லாம் கூறும் நரகத்திற்கு நேர் எதிரானதாக இஸ்லாமிய சொர்க்கம் இருப்பதை குறிப்புகளில் இருந்து அறியலாம். குர்-ஆனின் படி, சொர்க்கம் என்பது குளிர்ந்த நீரோடைகளுடன் கூடிய பலவித வசதிகளுடன் கூடிய உல்லாசபுரி ஆகும் (வாசிக்க: குர்-ஆன் 47:15; 56:35-37; 55:72-75; 38:52; 56:22-23; 55:58; 78:33; 44:54). இஸ்லாம் கூறும் சொர்க்கமானது, வனாந்திர பூமியான அரேபியாவில் இருக்கும் ஒரு ஆண் அடைய விரும்பு சிற்றின்ப சுகங்களை அள்ளி வழங்கும் ஒரு இடமாக, முடிவிலாத சிற்றின்ப பரவசத்தைப் பெறுகிற இடமாக காட்டப்பட்டிருப்பதைக் காணலாம்.

 இஸ்லாமிய சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி வாசிக்கையில், அவை குர்-ஆன் சொல்லும் செய்தியைக் கேட்கிறவர்கள் மனதில் ஒரு பயங்கரத்தை உண்டு பண்ணி குர்-ஆனைக் கேட்பவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பயமுறுத்துவதை, அல்லது இனிவரும் வாழ்வில் அவர்கள் அடையப் போகிற உல்லாசங்களை நினைத்து இஸ்லாமை நாட வேண்டும் என்பதையும் குறிப்பதை நாம் அறிய முடியும். இஸ்லாமிய சொர்க்கம் என்பது சிற்றின்ப உலகமே அன்றி, அங்கே அல்லாஹ் இல்லை என்பதைக் கவனித்தீர்களா. பரிசுத்த்த வேதாகமத்தில், நாம் பரலோக ராஜ்ஜியத்தைப் பற்றி மிகவும் அதிகமாகவும் நரகத்தைச் பற்றி சில வசனங்களையும் நாம் வாசிக்கிறோம். ஆண்டவராகிய இயேசு தன் ஊழிய நாட்களில் பரலோக ராஜ்ஜியத்தைப் பற்றியே பேசினார் என்பதை நாம் நற்செய்தி நூல்களில் காண்கிறோம். பயத்துக்கு அல்ல, மனிதன் மேல் தேவன் காட்டும் அன்பு மட்டுமே பிரதானமாக சொல்லப்படுவதை நாம் வேதத்தில் காண்கிறோம். அது மட்டுமல்ல, பரலோகத்தின் மேன்மை, இன்பம் அல்லது சுகம் என்பது சிற்றின்பங்களை அனுபவிப்பது அல்ல, சர்வ வல்ல தேவனுக்கு முன்பாக நாம் நிற்பது என்பதை வெளிப்படுத்தல் 21, 22 அதிகாரங்களில் வாசிக்கிறோம். அதன் முன் சுவையை நாம் இந்த உலகத்திலேயே பெற்றனுபவிக்க தேவன் நமக்கு அருளியிருக்கிறார். உலக சிற்றின்பங்கள் நித்திய சந்தோசத்தைத் தர முடியாது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவை சலித்துப் போய்விடும். ஆனால், தேவனுடைய பிரசன்னமானது எவ்வளவு ஆச்சரியம்! அதை வார்த்தைகளால் விவரிக்கவும் முடியாது. தேவ சமூகத்தில் எப்பொழுதும் இருக்கும் தேவ தூதர்களே அதைக் கண்டு ஓயாமல் “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று சொல்கிறார்களே! உண்மையில், தேவனுடைய பிரசன்னத்தை இழப்பது அல்லது தேவனுடைய சமூகத்தை விட்டு விலக்கப்பட்டு இருப்பது தான் நரக அனுபவமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். தேவன் இல்லாத இடத்தில் ஒரு மனிதன் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?

இஸ்லாமிய உலகம் பலவித பிரச்சனைகளை உள்ளேயும் வெளியேயும் சந்தித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் என்ன என்று நாம் அறிந்திருக்கிறோம். அவர்கள் சத்தியத்தை, சமாதான கர்த்தரை அறிந்து, உண்மையான மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெற நாம் ஜெபிப்போம். தேவனும் அதையே விரும்புகிறார்.

- அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 20th May 2020

Source: http://arputhaa.blogspot.com/2020/05/27.html


2020 ரமலான் சிந்தனைகள் பக்கம்

சகோ. அற்புதராஜ் சாமுவேல் பக்கம்