ரமலான் சிந்தனைகள் - 9

இஸ்லாம் - ஆபிரகாமின் மார்க்கம்?

குர்-ஆனில் இப்ராஹீம் (வேதாகமத்தில் ஆபிரகாம்) மிகவும் முக்கியமான ஒரு நபராக, மோசேக்கு அடுத்து அதிகம் குறிப்பிடப்படும் ஒரு நபராக இருக்கிறார். இஸ்லாம் கூறும் ஆபிரகாமை, அல்லாஹ் தனக்கு நெருங்கிய நண்பராக (கலீலுல்லாஹ்) ஏற்படுத்திக் கொண்டார் என்று குர்-ஆன் (4:125) கூறுகிறது.  ஆபிரகாமின் மார்க்கம் தூய மார்க்கம், அது இஸ்லாம் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள். குர்-ஆனின் படி, முஹம்மதுவின் வருகையை ஆபிரகாம் முன்னறிவித்ததாகவும், ஆபிரகாமின் மார்க்கத்தைப் பின்பற்றும்படி முஹம்மதுவிடம் அல்லாஹ் சொன்னார் என்றும் முஸ்லீம்கள் நம்புகிறார்கள். ஆபிரகாமின் பிள்ளைகளான ஈசாக்கு, இஸ்மவேல் இருவர் பற்றியும் குர்-ஆனில் சொல்லப்பட்டிருந்தாலும், ஆபிரகாம் தன் மகனை பலியிட அழைத்துச் சென்றபோது எந்த மகனைக் கூட்டிச் சென்றார் என்ற விவரம் குர்-ஆனில் இல்லை. யாக்கோபும் கூட ஆபிரகாமின் மகன் என்பதாக குர்-ஆன் போகிற போக்கில் சொல்கிறது.  அதுமட்டுமல்ல, வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிற ஆபிரகாமின் கதைக்கும், குர்-ஆனின் ஆபிரகாமின் கதைக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. மிக முக்கியமாக, குர்-ஆன் கூறும் ஆபிரகாமின் முக்கியப் பணி மற்றும் செய்தி என்னவெனில், அல்லாஹ்வை தொழுது, அவருக்குப் பயந்து இருக்க வேண்டும் என்பதே. ஆபிரகாமுடன் தேவன் செய்த உடன்படிக்கை பற்றியோ, ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்றுப் பண்ணின வாக்குத் தத்தம் பற்றியோ குர்-ஆனில் எவ்வித குறிப்பும் கிடையாது.

பரிசுத்த வேதாகமத்தின்படி, ஆபிரகாம் ”விசுவாசிகளின் தகப்பன்” என்று அழைக்கப்படுகிறார். குர்-ஆன் சொல்வது போல அல்லாஹ் கொடுத்த கட்டளைகளுக்குப் பயந்து கீழ்ப்படிந்ததினால் அல்ல, வாக்குத்தத்தம் பண்ணின தேவன் உண்மையுள்ளவர் என்று நம்பி, அவரை ஆபிரகாம் விசுவாசித்ததினாலேயே அவர் விசுவாசிகளின் தகப்பன் ஆனார் என்று வேதம் கூறுகிறது (ரோமர் 4). அவரைப் போல தேவனை விசுவாசிக்கும்படி வேதாகமம்  நம்மை அழைக்கிறது. விசுவாசத்துடன்தன் மகனைப் பலியிடச் சென்ற ஆபிரகாமை தேவன் தடுத்து நிறுத்தினார். இஸ்லாமிலும், யூத மார்க்கத்திலும், மற்றும் கிறிஸ்தவத்திலும் இது முக்கியமான சம்பவமாக கருதப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய முஸ்லீம்களின் பக்ரீத் பண்டிகை பற்றி பின்பு சொல்கிறேன்.  ஆபிரகாமைத் தடுத்து நிறுத்தின தேவன் தன் ஒரே பேறான குமாரனாகிய இயேசுவை நமக்கான பாவ பரிகார பலியாக மரிக்கும்படி ஒப்புக் கொடுத்திருக்கிறார். முஸ்லீம்கள் பரிகார பலி என்பதை நம்புவதில்லை. ஆபிரகாம் சென்ற இடங்களில் எல்லாம் பலிபீடம் கட்டி தேவனை தொழுது கொண்டான், அது மட்டுமல்ல அழிந்து போக இருந்தவர்களுக்காக ஜெபிக்கவும் செய்தான் என வேதத்தில் வாசிக்கிறோம்.  ஆபிரகாம் தன் தந்தைக்காக செய்த ஜெபம் கேட்கப்படவில்லை என குர்-ஆன் கூறுகிறது. ஆனால், வேதாகமத்தில் ஆபிரகாமின் ஜெபம் எப்படியெல்லாம் கேட்கப்பட்டது என்பதைப் பல இடங்களில் நாம் வாசிக்கிறோம்.

ஆபிரகாமைப் போல தேவன் மேல் விசுவாசம் வைக்க அழைக்கப்பட்டிருக்கிற கிறிஸ்தவர்களாகிய நாம், அவரைப் போல செல்லுமிடங்களில் எல்லாம் நாம் காணும் மனிதர்களுக்காக, முக்கியமாக இந்நாட்களில் நோன்பிருக்கும் முஸ்லீம்களுக்காக ஜெபிப்போம். அவர்களும் இயேசுவைக் காணும் நாள் வெகுதொலைவில் இல்லை.

- அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 2nd May 2020

Source: http://arputhaa.blogspot.com/2020/05/9.html


2020 ரமலான் சிந்தனைகள் பக்கம்

சகோ. அற்புதராஜ் சாமுவேல் பக்கம்