அல்லாஹ்வும் இயேசுவும் கடவுள்களா? முஸ்லிம்களின் விளக்கமும் அல்லாஹ்வின் இறையியல் பிழையும் - குர்‍ஆன் 9:31- பாகம் 2

சில நாட்களுக்கு முன்பு “அல்லாஹ்வும் இயேசுவும் கடவுள்களா ?”என்ற ஒரு கட்டுரையை குர்ஆனின் 9 :31ம் வசனத்தின் அடிப்படையில் எழுதி இருந்தேன். 

அதன் தொடுப்பு: அல்லாஹ்வும் இயேசுவும் கடவுள்களா? முஸ்லிம்கள் ஏன் குர்‍ஆன் 9:31ஐ தவறாக மொழியாக்கம் செய்கிறார்கள்?

இந்த‌ கட்டுரைக்கு முஸ்லிம் சகோதரர்கள் பதில் கொடுத்துள்ளார்கள் என்று ஒரு கிறிஸ்தவ சகோதரர் எனக்கு மெயில் அனுப்பி இருந்தார்(இந்த மெயில் பல கைகள்மாறி கடைசியாக‌ என்னிடம் வந்தது).  இந்த மெயிலில், முஸ்லிம்கள் கொடுத்த பதிலையும் அவர் இணைத்திருந்தார். அந்த பதிலை இப்பொழுது கீழே படிப்போம், அதன் பிறகு அவர்கள் கொடுத்த பதிலின் உண்மை நிலை என்ன என்பதை காண்போம். உண்மையாகவே முஸ்லிம் சகோதரர்கள் குர்‍ஆன் 9:31 பற்றி நான் அளித்த விளக்கத்திற்கு பதில் கொடுத்தார்களா இல்லையா என்பதை காண்போம். 

வாசகர்கள் முதலாவதாக என்னுடைய மேற்கண்ட கட்டுரையை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  இப்போது நாம் முஸ்லிம்களின் பதிலை ஆய்வு செய்வோம்.


1) முஸ்லிம்களின் பதில் - படவிளக்கம்

முஸ்லிம்கள் கீழ்கண்ட பதிலை கொடுத்துள்ளார்கள்.

Arabic grammar தெரியாததால் வந்த விளைவு...

அஹ்பா*ர*ஹும் , வருஹ்பா*ன*ஹும் அர்பாபன் மின் தூனில்லா*ஹி* வல் மஸீ*ஹ* ப்ன மர்யம்

இங்கே செயற்படுபொருளாக, தெய்வங்களாக எடுத்துகொள்ளப்பட்டோர் உள்ளனர். இதில் அனைவருமே ஃபத்ஹா செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது

உதாரணமாக ருஹ்பான, அஹ்பார, அல்மஸீஹ

ஆனால் மின் தூனி என்பதற்கு பின் "அல்லாஹி" என மட்டுமே கஸ்ரா செய்து முடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அல்லாஹ்வையல்லாமல்,   மார்க்கமேதைகளையும், பாதிரிகளைஎயும், மர்யமின் மகன் மசீஹையும் தெய்வங்களாக எடுத்துகொண்டுவிட்டனர்.

மசீஹ என்பது ருஹ்பான உடன் இணையுமே தவிர, அல்லாஹ் என்பதுடன் இணையாது.

சாதாரண அரபு இலக்கணம் படித்தாலே இது தெரிந்துவிடும்.

----------------

وَاِذْ تَقُوْلُ لِلَّذِىْۤ *اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِ وَاَنْعَمْتَ عَلَيْهِ* اَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللّٰهَ وَتُخْفِىْ فِىْ نَفْسِكَ مَا اللّٰهُ مُبْدِيْهِ وَتَخْشَى النَّاسَ ‌ وَاللّٰهُ اَحَقُّ اَنْ تَخْشٰٮهُ  فَلَمَّا قَضٰى زَيْدٌ مِّنْهَا وَطَرًا زَوَّجْنٰكَهَا لِكَىْ لَا يَكُوْنَ عَلَى الْمُؤْمِنِيْنَ حَرَجٌ فِىْۤ اَزْوَاجِ اَدْعِيَآٮِٕهِمْ اِذَا قَضَوْا مِنْهُنَّ وَطَرًا  وَكَانَ اَمْرُ اللّٰهِ مَفْعُوْلًا‏ 

(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.

(அல்குர்ஆன் : 33:37)

இந்த வசனத்தில் *வ* என்கிற அரபு இடைச்சொல் வருகின்றது அதற்க்காக அல்லாஹ்வும் நபியும் ஜைதுக்கு அருள் புரிந்தனர் என்று எடுத்து கொள்ள முடியுமா ?

*வ* என்கிற இடைச்சொல் இரு வேரு பண்புகளை கொண்ட நபர்களுக்கு ஒரே வினைச்சொல்லில் இணைக்கப்பட்டாலும் வெவ்வேறு பொருளையே தரும்…

*اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ*  يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا‏ 

இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.

(அல்குர்ஆன் : 33:56)

---------------------

மேற்கண்ட பதிலில் முஸ்லிம்கள் சொல்லவருவது இவைகளைத்தான்:

  1. குர்ஆன் 9:31-ல் எந்த ஒரு தவறும் இல்லை.
  2. அரபி மொழியின் இலக்கணம் தெரியாததால் தான் குர்ஆன் 9:31ஐ கிறிஸ்தவர்கள் தவறாக புரிந்து கொண்டார்கள்.
  3. குர்ஆன் 9:31-ல் செயற்படுபொருளாக, தெய்வங்களாக எடுத்துகொள்ளப்பட்டோர்  அனைவருமே ‘ஃபத்ஹா’ செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது (உதாரணம்: - ருஹ்பான, அஹ்பார, அல்மஸீஹ).
  4. ‘மின் தூனி’ என்பதற்கு பின் "அல்லாஹி" என மட்டுமே ‘கஸ்ரா’ செய்து முடிக்கப்பட்டுள்ளது.
  5. ‘மசீஹ’ என்பது ‘ருஹ்பான’ உடன் இணையுமே தவிர, அல்லாஹ் என்பதுடன் இணையாது, எனவே, குர்‍ஆன் 9:31ல் எந்த தவறும் இல்லை. 
  6. இதற்கு ஆதாரமாக குர்‍ஆன் 33:37 & 33:56 வசனங்களை மேற்கோள் காட்டியுள்ளார்கள்.

இதுவரை படித்த பாயிண்டுகள் தமிழில் எழுதப்பட்டது போலத்தான் தெரிகிறது, ஆனால் தமிழ் இல்லை என்று சிலர் எண்ணக்கூடும். மேற்கண்ட பதிலில் அரபி வார்த்தைகள் இருப்பதினால் சிலருக்கு உடனே புரியாது. எனவே, முஸ்லிம்களின் பதிலை ஒரு படமாக‌ கீழே கொடுத்துள்ளேன்.

“ரபீக்கள், துறவிகள் மற்றும் மஸீஹ” இந்த வார்த்தைகள் அனைத்தும் "அ" என்று முடிகின்றன (அதாவது அரபியில் ர, ன & ஹ என்று முடிகின்றன), ஆனால் அல்லாஹ் என்ற வார்த்தை மட்டும் "இ" என்று முடிகின்றது (அதாவது அரபியில் ஹி என்று முடிகின்றது).

அரபி இலக்கணத்தின் படி, இப்படி ஒரு வாக்கியம் அமையுமானால், “மஸீஹ” என்ற வார்த்தையானது அல்லாஹ்விற்கு அடுத்தபடியாக வந்திருந்தாலும், அது முந்தைய பிரிவோடு (ரபீக்கள், துறவிகள்) சேர்ந்துவிடும் என்று நம் முஸ்லிம் சகோதரர் விளக்கம் கொடுத்துள்ளார்.

முஸ்லிம் சகோதரர் கொடுத்த பதிலை இதுவரை எல்லோருக்கும் புரியும் வண்ணம் படம் போட்டு விளக்க முயற்சித்துள்ளேன்.  

இப்போது நம் பதிலைக் காண்போம்.

2) இந்த அரபி இலக்கண விதிப்படியுள்ள வாக்கியங்களின் சான்றுகள்

அரபி மொழியில் ஒரு குறிப்பிட்ட இலக்கணத்தின்படி தான் குர்‍ஆன் 9:31 வசனம் அமைந்துள்ளது என்று முஸ்லிம்கள் விளக்கமளித்துள்ளார்கள். இது உண்மையானால், எனக்கு கீழ்கண்ட ஐந்து ஆதாரங்களை / சான்றுகளை எடுத்துக்காட்டவேண்டும். அப்போது நாம் 'அரபி மொழியில் இப்படிப்பட்ட இலக்கணம் உண்டு' என்று நம்பமுடியும், அப்படி அவர்களால்  நிருபங்களை காட்ட‌முடியவில்லையென்றால்,

  • குர்‍ஆன்  9:31வது வசனம் இயேசுவும் அல்லாஹ்வும் இறைவன்கள் என்றுச் சொல்கிறது என்று ஒப்புக்கொள்ளவேண்டும்

அல்லது

  • குர்‍ஆனை இறக்கிய அல்லாஹ்விற்கு ஒரு சரியான இலக்கணத்தில் ஒரு சிறிய வாக்கியத்தை அமைக்கத் தெரியவில்லை என்று பொருளாகிவிடும்.

நான் கேட்கும் ஆதாரங்களில் நியாயம் உள்ளதா இல்லையா என்பதை இதை படிப்பவர்கள் சரி பார்க்கட்டும்.

இப்போது நாம் எதிர்பார்க்கும் சான்றுகளை பட்டியலிடுவோம்:

சான்று 1:  அரபி மொழியில் உள்ள மத சார்ப்பற்ற இலக்கண புத்தகத்திலிருந்து சான்றுகள்:

முஸ்லிம்கள் ஒரு புதிய இலக்கண விதியை நமக்கு சொல்லியுள்ளார்கள். அதாவது 'ஃபத்ஹா' மற்றும் 'கஸ்ரா' என்ற குறியீடுகளால் முடியும் வார்த்தைகள் பற்றி அவர்கள் சொன்ன பதிலை நாம் மேலே படித்தோம். 

இந்த விவரத்தை முஸ்லிம்கள் எந்த அரபி இலக்கண புத்தகத்திலிருந்து எடுத்து  நமக்குச் சொல்கிறார்கள் என்று சொல்வார்களா? அந்த புத்தகத்தின் பெயர் என்ன? அதன் ஆசிரியர் யார்? போன்ற விவரங்களை முஸ்லிம்கள் தரமுடியுமா? முக்கியமாக, இது மத சார்புள்ள புத்தகமாக இருக்கக்கூடாது. அரபு மொழியில் இலக்கணமாக இருக்கவேண்டும். இலக்கணத்திற்கு மதமில்லை என்று நான் நம்புகிறேன்.

ஒரு மொழியின் இலக்கண விதியென்றால் அது மொழி சார்ந்ததாக இருக்கவேண்டும், மதம் சார்ந்ததாக இருக்கக்கூடாது. குர்‍ஆன் ஒரு இலக்கிய புத்தகம் என்றுச் சொன்னால், அதற்கென்று தனி இலக்கணம் இருக்காது.  அரபி மொழியில் பழங்காலத்திலிருந்து இன்று வரையுள்ள இலக்கியங்கள், புத்தகங்களுக்கு என்ன இலக்கண விதிகள் உள்ளனவோ, அதே விதிகள் குர்‍ஆனுக்கும் பொருந்தும், இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.  

ஒரு எடுத்துக்காட்டு:

இன்று ஒரு அரபி எழுத்தாளர் ஒரு புத்தகத்தை எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதில் சில இலக்கண தவறுகள் உள்ளது என்று அரபி மொழி பேராசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். உடனே அந்த புத்தகத்தின் ஆசிரியர், தன் தவறை ஒப்புக்கொள்ளாமல், அதற்கு பதிலாக‌ 'இல்லை இல்லை, இது ஒரு புதிய அரபு இலக்கணம், இதனை அனைவரும் ஏற்கத்தான் வேண்டும்' என்றுச் சொன்னால், அரபி மொழி ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இல்லை அல்லவா! அதே போலத்தான், குர்‍ஆன் 9:31ன் இலக்கண அமைப்பும் உள்ளது. 

மதசார்பற்ற இலக்கண புத்தகத்திலிருந்து முஸ்லிம்கள் சொல்லும் விதியைப் பற்றிய விவரங்களை சான்றுகளாக சமர்ப்பிப்பார்களா?

சான்று 2: அரபி மொழியில் உள்ள இஸ்லாமிய இலக்கண புத்தகத்திலிருந்து சான்றுகள்:

என்னுடைய முதல் பாயிண்டில், 'மத்சார்பற்ற அரபி மொழி இலக்கண புத்தகத்திலிருந்து சான்றுகளை காட்டுங்கள் என்று கேட்டேன்', இப்போது , மதசார்புள்ள இலக்கண புத்தகங்களிலிருந்து சான்றுகளை கொடுங்கள் என்று கேட்கிறேன். 

முஸ்லிம்கள் தவறுதலாகவும் எந்த சான்றுகளையும் விட்டுவிடக்கூடாது. எனவே, முஸ்லிம்கள் அனைத்துவிதமான சான்றுகளை  சேகரித்து, 'குர்‍ஆனின் இலக்கண பிழையிலிருந்து அதனை காக்கும்படி அவர்களுக்கு உதவி புரிகின்றேன்' நான்.

இஸ்லாமியர்கள் எழுதிய இலக்கண புத்தகத்திலிருந்தும் முஸ்லிம்கள் எடுத்துக்காட்டுக்களை சான்றுகளாக காட்டட்டும். அதனை நாம் மதசார்ப்பற்ற இலக்கண  விதிகளோடு ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்வோம். உண்மையாகவே முஸ்லிம் அறிஞர்கள் உண்மையைச் சொல்கிறார்களா? இல்லையா? என்பது இதன் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

சான்று 3: குர்‍ஆம் 9:31ஐ போன்று வாக்கிய அமைப்பு, விதியுள்ள இதர குர்‍ஆன் வசனங்களை சான்றுகளாக‌ காட்டமுடியுமா?

குர்‍ஆனின் 9:31 வசனத்தைப்போலவே அமைப்பு உள்ள மற்றும் பொருள் மாறுபடுகின்ற வேறு வசனங்களை குர்‍ஆனிலிருந்து முஸ்லிம்கள் ஆதாரமாக காட்டமுடியுமா?   குர்‍ஆனில் 6236 வசனங்கள் உள்ளன, அவைகளில் பல ஆயிர சிறு வாக்கியங்கள் உள்ளன. அவைகளில் முஸ்லிம்கள் எடுத்துக்காட்டிய புதிய இலக்கண விதியைப்போன்று அமைந்துள்ள வேறு வாக்கியத்தை முஸ்லிம்கள் காட்டமுடியுமா?  

முஸ்லிம்கள் அளித்த இலக்கண விதி பதிலில் இரண்டு வேறு  குர்‍ஆன் வசனங்களை மேற்கோள் காட்டியுள்ளார்கள், அவை : குர்‍ஆன் 33:37 மற்றும் 33:56 ஆகும்.  ஆனால், இந்த இரண்டு வசனங்களின் வாக்கிய மற்றும் இலக்கண அமைப்பிற்கும், குர்‍ஆன் 9:31ம் வசனத்தின் வாக்கிய இலக்கண அமைப்பிற்கும் சம்மந்தமில்லை. எனவே தான் நான் வேறு  வசனங்களை குர்‍ஆனிலிருந்து  காட்ட‌ முடியுமா? என்று கேட்கிறேன்.  மேற்கண்ட வசனங்கள் பற்றி (33:37 மற்றும் 33:56) இதே கட்டுரையில் நாம் பிறகு ஆய்வு செய்யப்போகிறோம். 

இன்னொரு விவரமும் நான் சொல்லிக்கொள்கிறேன். ஒரு வாக்கிய அமைப்பைப்போன்று அதாவது குர்‍ஆன் 9:31ம் வசனத்தின் வாக்கிய அமைப்பு, இலக்கண விதிபோன்று வேறு வசனங்கள் கட்டாயம் குர்‍ஆனில் இருக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை (இருந்தால் என்ன தவறு!). இப்படி இருக்கவேண்டிய  கட்டாயமும் இல்லை என்பதையும் நான் அறிவேன். குர்‍ஆனில் தேடிப்பார்த்து, இருந்தால் ஆதாரமாக காட்டமுடியுமா? என்று நான் முஸ்லிம்களிடம் வேண்டுகிறேன் அவ்வளவு தான்.  9:31 போன்ற வாக்கியங்கள் குர்‍ஆனில் இல்லையென்றால் பிரச்சனை இல்லை, நமக்கு இலக்கண புத்தகங்களில் மற்றும் இதர புத்தகங்களிலாவது சான்றுகள் நிச்சயம் இருக்கவேண்டும் என்பது தான் எதிர்ப்பார்ப்பு.

சான்று 4: குர்‍ஆம் 9:31ஐ போன்று வாக்கிய அமைப்பு, விதியுள்ள வாக்கியங்களை சன்னி பிரிவின் ஆறு முக்கியமான ஹதீஸ் தொகுப்புக்களிலிருந்து சான்றுகளை காட்டமுடியுமா? 

'ஹதீஸ் தொகுப்புக்களிலிருந்து குர்‍ஆன் 9:31ஐ போன்று வாக்கிய அமைப்பு மற்றும் இலக்கண விதியுள்ள' வசனங்களை (ஹதீஸ்களை) முஸ்லிம்கள் தேடிக்கண்டுபிடித்து காட்டமுடியுமா?

சன்னி பிரிவு ஹதீஸ் தொகுப்புக்களாகிய புகாரி, முஸ்லிம், நஸயி, அபூ தாவுத், திர்மிதி மற்றும் இப்னு மாஜா போன்ற நூல்களில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான வசனங்கள்(ஹதீஸ்கள்) உள்ளன. முஹம்மது பேசியவைகள், சஹாபாக்கள் பேசியவைகள், இதர மக்கள் பேசியவைகள் என்று பல  விவரங்கள் உள்ளன.  

குறைந்த பட்சம், இந்த ஹதீஸ் தொகுப்புக்களில் ஒரு வாக்கியமாவது நாம் ஆய்வு செய்யும் இலக்கண விதியின் படி இருக்கவேண்டும் (கட்டாயமில்லை, ஆனால் எதிர்ப்பார்ப்பதில் தவறில்லை அல்லவா!). நான் சொல்வது புரிகின்றதா? அதாவது ஒரு மொழியின் இலக்கணத்தில் 100 விதிகள் உள்ளன என்று  வைத்துக்கொண்டால், பல நூல்களில் தேடிப்பார்த்தால் ஒரு இலக்கண விதிக்காக‌ நிச்சயம் சில வாக்கியங்களாவது கிடைக்காதா என்ன? நிச்சயம் கிடைக்கும்.

சான்று 5: குர்‍ஆம் 9:31ஐ போன்று வாக்கிய அமைப்பு, விதியுள்ள வாக்கியங்களை 'இன்று வரை நம்மிடமுள்ள அரபு புத்தகங்களில், ஷியா மற்றும் சன்னி பிரிவு தஃப்ஸீர்களிலிருந்து, இணைய தளங்களில், செய்தித் தளங்களில், பள்ளிக்கூட புத்தகங்களில், புதினங்களில்' தேடிப்பார்த்து சான்றுகளை முஸ்லிம்கள் கொடுப்பார்களா?  

இன்றைய காலக்கட்டத்தில் ஒரு வாக்கியத்தை கூகுளில் தேடினால், இணையத்தில் உள்ள பெரும்பான்மையான பக்கங்களில் அது தேடி கொடுத்துவிடுகிறது. எனவே, முஸ்லிம்கள் அரபு புத்தகங்களிலும், செய்தித்தாள்களிலும் மேலும் அனைத்து இஸ்லாமிய‌ புத்தகங்களிலும் தேடிப்பார்த்து 9:31க்கு இணையான இலக்கண விதியுள்ள வாக்கிய சான்றுகளை கொடுக்கமுடியுமா?

எனக்கு எந்த புத்தகம் அல்லது எந்த தளம் என்றுச் சொல்லுங்கள், நான் அதனை  படித்து  தெரிந்துக்கொள்கிறேன். 

முஸ்லிம்கள் குர்‍ஆனின் பிழையை சரி செய்துக்கொள்ள, அதற்கு சான்றுகளை சேகரிக்க, அனேக பாயிண்டுகளை (வழிகளை) தேடிக்கொடுத்துள்ளேன். இனி முஸ்லிம்கள் நான் மேலே சொன்ன ஐந்து சான்றுகளை தேடிக்கண்டுபிடித்து கொடுப்பது அவர்களின் கடமை ஆகும்.

நாம் ஏன் தேடிக்கொடுக்கவேண்டும்? என்று முஸ்லிம்கள் கேட்கக்கூடாது. ஏனென்றால், ஒரு மொழியில் ஒரு குறிப்பிட்ட இலக்கண  விதி உள்ளது என்று நீங்கள் சொன்னால், உலகில் அதன் படி எழுதப்பட்ட வாக்கியம் குர்‍ஆனில் அதுவும் ஒரே வசனத்தில் மட்டுமா கிடைக்கும்? உலகில் வேறு எந்த ஒரு புத்தகத்திலும் அவ்விலக்கணத்தின் படி எழுதப்பட்ட வாக்கியங்கள் இருக்கவே இருக்காதா என்ன? சிந்தித்துப்  பாருங்கள்.

குர்‍ஆன் 9:31ஐ போன்று வேறு ஒரு வாக்கியம் உலகில் இல்லை!

முஸ்லிம்கள் சொன்ன இலக்கண விதிக்கு சான்றுகளை கொடுக்கும் படி நான் ஐந்து வழிகளைச் சொல்லி முஸ்லிம்களுக்கு உதவியுள்ளேன், அதாவது:

  1. மதசார்ப்பற்ற இலக்கண நூல்களிலிருந்து சான்றுகள், 
  2. மத சார்ப்புள்ள அறிஞர்கள் எழுதிய இலக்கண நூல்களிலிருந்து சான்றுகள், 
  3. குர்‍ஆனிலிருந்து இதர சான்று வசனங்கள், 
  4. ஹதீஸ்களிலிருந்து சான்று வசனங்கள், மற்றும் 
  5. உலகமனைத்திலும் உள்ள அரபி நூல்களிலிருந்து சான்றுகள்.

ஒரே ஒரு வாக்கியம் தான் உலகில் இந்த குறிப்பிட்ட இலக்கண விதிப்படி உள்ளது, அதுவும் குர்‍ஆன் 9:31ல் மட்டுமே உள்ளது என்று முஸ்லிம்கள் சொல்வார்களால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று பொருள். குர்‍ஆனில் அல்லாஹ் செய்த பிழையை சரி செய்ய முஸ்லிம்கள் செய்த தில்லுமுல்லு தான், இந்த புதிய இலக்கண விதி என்று பொருள். என்னுடைய இந்த வாக்கியம் தவறு என்று யாராவது சவால் விடமுடியுமா?

முஸ்லிம்கள் மேற்கண்ட இலக்கண விதிப்படியுள்ள வாக்கியங்களை தேடிக்கொள்ளட்டும், சரி, வாருங்கள் அடுத்த தலைப்பிற்கு தாவுவோம்.

3) முஸ்லிம்களின் மேற்கோள்கள்: குர்‍ஆன் 33:37 & 33:56ன் ஆய்வு

முஸ்லிம்கள் கூறிய புதிய இலக்கண விதிக்கு நிருபனமாக இரண்டு மேற்கோள்களை குர்‍ஆனிலிருந்து கொடுத்தார்கள் :குர்‍ஆன் 33:37 & 33:56.

ஆனால், குர்‍ஆன் 9:31 வசனத்தின் இலக்கண வாக்கிய அமைப்பிற்கும், குர்‍ஆன் 33:37 மற்றும் 56ம் வசனங்களின் வாக்கிய அமைப்பிற்கும் எந்த ஒரு ஒற்றுமையும் இல்லை. இவ்விரு வசனங்களை அவர்கள் ஏன் மேற்கோள் காட்டினார்கள் என்று எனக்கு புரியாத புதிராக உள்ளது. பதில் சொல்கிறோம் என்றுச் சொல்லி மக்களை குழப்புவதில் முஸ்லிம்கள் வல்லவர்களாக இருக்கிறார்கள்.

சரி, அவர்களின் அறியாமையை இப்போது ஆய்வு செய்வோம் (அறியாமை என்று தெரிந்துவிட்ட பிறகும் அதனை ஆய்வு செய்யவேண்டுமா? என்று கேள்வி கேட்காதீர்கள், அறியாமையில் உள்ளவர்களின் அறியாமையை அவர்களுக்கு எடுத்துக்காட்டினால் தானே, அடுத்த முறை முஸ்லிம்கள் அறியாமல் எதையும் செய்யமாட்டார்கள்).

முஸ்லிம்களின் பதில்:  குர்‍ஆன் 33:37 

33:37. (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.

இந்த வசனத்தில் *வ* என்கிற அரபு இடைச்சொல் வருகின்றது அதற்காக அல்லாஹ்வும் நபியும் ஜைதுக்கு அருள் புரிந்தனர் என்று எடுத்து கொள்ள முடியுமா?

இந்த வசனத்தை மேற்கோள் காட்டிவிட்டு, அவர்கள் நம்மிடம் கேள்வியை கேட்டுள்ளார்கள்.

ஜைது மீது அல்லாஹ்வும் அருள் புரிந்தான்  மற்றும் முஹம்மதுவும் அருள் புரிந்தார் என்று இந்த வசனம் தெளிவாகச் சொல்கிறது. ஆனால், முஸ்லிம்கள் சொல்வதைப் பார்த்தால், 'குர்‍ஆன் ஒன்றைச் சொல்லும், ஆனால் நாம் வேறு ஒன்றை கற்பனை செய்துக் கொள்ளவேண்டும்' என்று சொல்கிறார்கள். இது என்ன நியாயம்?

  • அல்லாஹ் ஒரு வகையில் அருள் புரிவான், மனிதன் வேறு வகையில் அருள் புரிவான். இவ்விருவரின் அருளுக்கு வித்தியாசமிருக்கும், ஆனால், அருள் அருள் தானே.
  • அல்லாஹ் கோபம் கொள்வான், மனிதனும் கோபம் கொள்வான். இவ்விரு கோபத்தின் வெளிப்பாடுகள் வித்தியாசமாக இருக்கும், ஆனால், 'கோபம்' என்பது ஒன்று தானே!

அல்லாஹ் நன்மை செய்தான், முஹம்மதுவும் நன்மை செய்தார் என்றுச் சொன்னால், இதனை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்? அல்லாஹ் நன்மைச் செய்தான், முஹம்மது செய்தது நன்மை அல்ல, அது வேறு ஒன்று என்று சொல்லவருகின்றீர்களா?

உங்கள் இறைவேதத்தின் வார்த்தைகளை புரிந்துக்கொள்வதிலேயே உங்களுக்கே பிரச்சனை உள்ளது போலத் தோன்றுகிறது.

9:31ம் வசனத்தைப் பற்றிய என்னுடைய விமர்சனம்:  'வ' என்ற இடைச்சொல் வரும் போது, எப்படி, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நீங்கள் பெயர்ச்சொல்லை மாற்றுவீர்கள் என்பது தான். இதனை விளக்க முஸ்லிம்கள் 33:37ம் வசனத்தை காட்டியது அறியாமையாகும். ஏனென்றால், 9:31ல்  மக்கள் நல்லவற்றைச் செய்வதை விட்டுவிட்டு, தீயதை பிடித்துக்கொண்டார்கள் என்று வருகிறது. இதனை மாற்றி முஸ்லிம் அறிஞர்கள், "நல்ல பட்டியலிருந்து " ஒரு பெயரை எடுத்து "தீய பட்டியலில்" சேர்த்துவிட்டார்கள். கேள்வி கேட்டால், இது தான் அரபு இலக்கணம் என்கிறீர்கள்.

சரி உங்கள் வழிக்கே வருகிறேன், குர்‍ஆன் 33:37ம் வசனத்தில் ஒரு நல்லதும் ஒரு தீயதும் 'வ' என்ற இடைச்சொல்லால்  குறிக்கப்பட்டுள்ளதா?

  • அல்லாஹ் ஜைது மீது அருள் புரிந்தது நல்லதா கெட்டதா?
  • முஹம்மது ஜைது மீது அருள் புரிந்தது நல்லதா கெட்டதா?

குர்‍ஆன் 33:37ம் வசனத்தை அரபி மூலத்தில் எடுத்துக்கொண்டாலும், அது 9:31ம் வசனத்தின் வாக்கிய அமைப்பிற்கு சம்மந்தமே இல்லாமல் இருக்கிறது.

குர்‍ஆன் 33:37எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்துமற்றும்நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ . . .

குர்‍ஆன் 9:31

சரியான மொழியாக்கம் (அரபி மூலத்தின் படி)

அவர்கள் அல்லாஹ்வையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் விட்டும்மற்றும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்.

குர்‍ஆன் 9:31

முஸ்லிம்களின்  தவறான‌ மொழியாக்கம்

அவர்கள் அல்லாஹ்வை விட்டும்மற்றும்தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்;

முஸ்லிம்கள் மஸீஹ் என்ற வார்த்தையை பாஸிடிவ் இடத்திலிருந்து நெகடிவ் இடத்திற்கு இடம் மாற்றி மொழியாக்கம் செய்துள்ளார்கள். 9:31க்கு இணையான வசனத்தை மேற்கோள் காட்டுகின்றேன் என்றுச் சொல்லி, 33:37ஐ காட்டினார்கள், அதில் இரண்டுமே பாஸிடிவ் (அருள்) தான். முஸ்லிம்கள் எடுத்துக்காட்டிய வசனம் (33:37), நம்முடைய ஆய்வு வசனமாகிய 9:31க்கு  சம்மந்தமில்லாத எடுத்துக்காட்டு ஆகும்.

அடுத்ததாக, முஸ்லிம்கள் குர்‍ஆன் 33:56 எடுத்துக்காட்டினார்கள், இதிலும் அதே தவறைத்தான் செய்துள்ளார்கள்.

முஸ்லிம்களின் பதில்:

33:56. இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.

*வ* என்கிற இடைச்சொல் இரு வேரு பண்புகளை கொண்ட நபர்களுக்கு ஒரே வினைச்சொல்லில் இணைக்கப்பட்டாலும் வெவ்வேறு பொருளையே தரும்…

இந்த வசனத்தை மேற்கோள் காட்டி முஸ்லிம்கள் இன்னும் ஒரு பெரிய தவறையை செய்துள்ளார்கள்.

குர்‍ஆன் 33:56ல், அல்லாஹ் தனியாக முஹம்மது மீது அருள் புரிகின்றான், அதே போல, மலக்குகளும் அருளை தேடுகின்றனர் என்று தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்கள். ஆனால், உண்மையில் அரபி மொழியில், 'அல்லாஹ்வும் மற்றும் மலக்குகளும் முஹம்மது மீது அருள் புரிகின்றனர்' என்று உள்ளது.

Source: http://corpus.quran.com/wordbyword.jsp?chapter=33&verse=56

மலக்குகள் கூட அல்லாஹ்வுக்கு சமமாக அருள் புரிகின்றார்கள் என்று இந்த வாக்கியம் அமைந்துள்ளது. ஆனால் தமிழில் 'அல்லாஹ் அருள் புரிவது போலவும், மலக்குகள் அருளை தேடுவது போலவும்' மொழியாக்கம் செய்து, குர்‍ஆனின் இன்னொரு பிழையை சரி செய்ய முயன்றுள்ளனர் முஸ்லிம்கள். மேற்கண்ட அரபி மூலத்தின் படி "யுஸல்லூன" என்ற வார்த்தை ஒருமுறை தான் வருகிறது. அல்லாஹ்வும் மலக்குகளும் அருள் புரிகின்றனர் என்று மொழியாக்கம் செய்வது தான் சரியான மொழியாக்கமாக இருக்கும். 

முஹம்மதுவிற்காக ஜெபிக்கும் அல்லாஹ்வும் மலக்குகளும்:

இந்த வசனத்தில் மொழியாக்க வீரர்கள் மறைத்த இன்னொரு விவரமும் உண்டு. அரபி மூலத்தின் படி அல்லாஹ்வும் மலக்குகளும் முஹம்மதுவிற்காக 'வேண்டுதல்/ஜெபம் (யுஸல்லூனா)' செய்கிறார்கள் என்று உள்ளது.

என்ன? அல்லாஹ் வேண்டுதல் செய்கிறானா? யாரிடம் செய்கிறான்? இறைவன் ஒருவனே என்றால், அவன் ஜெபம் செய்யும் போது யாரிடம் செய்வான்?

என்ற கேள்விகள் வரும் என்பதால், 'ஜெபம்/வேண்டுதல்' என்று உள்ளதை 'அருள்' என்று மொழியாக்கம் செய்து நம் எல்லோருக்கும் அல்வா கொடுத்துள்ளார்கள் முஸ்லிம்கள்.

சிலருக்கு இது ஒரு புது விவரமாக இருக்கும். அல்லாஹ் ஜெபம் செய்வானா? என்று கேட்பவர்கள் கீழ்கண்ட குர்‍ஆன் வசனங்களையும் விளக்கவுரைகளையும் படியுங்கள்:

2:157. இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும் (ஸலாவாதுன்), நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.

33:43. உங்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பால் கொண்டுவருவதற்காக உங்கள் மீது அருள்புரிகிறவன் (யுஸல்லி) அவனே; இன்னும் அவனுடைய மலக்குகளும் அவ்வாறே (பிரார்த்திக்கின்றனர்;) மேலும், அவன் முஃமின்களிடம் மிக்க இரக்கமுடையவனாக இருக்கின்றான்.

33:56. இந்த நபியின் மீது அல்லாஹ் அருள்(யுஸல்லூன‌) புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.

ஹதீஸ் திர்மிதி (ஆங்கில எண்:1387)

1387. Abu Umama reported that the Messenger of Allah, may Allah bless him and grant him peace, said, "Allah and His angels and the people of the heavens and the earth, even the ants in their rocks and the fish, pray for blessings on those who teach people good." [at-Tirmidhi]

அல்லாஹ்வும், அவனுடைய மலக்குகளும், வானத்திலும் பூமியிலும் உள்ள மக்களும், கற்களுக்கு அடையில் இருக்கும் எறும்புகளும், மீன்களும் நல்லவைகளை கற்பிப்பவர்களுக்காக வேண்டுதல் செய்கிறார்கள். திர்மிதி

இதைப் பற்றி வேறு ஒரு கட்டுரையில்  பார்ப்போம்.

முடிவுரை:

இதுவரை குர்‍ஆன் 9:31ம் வசனத்திற்கு நான் கொடுத்த விளக்கத்திற்கு முஸ்லிம்கள் அளித்த பதிலை ஆய்வு செய்தோம். குர்‍ஆன் 9:31ல் உள்ள இலக்கண பிழையை அல்லது இறையியல் பிழையை சரி செய்ய முஸ்லிம்கள், ஒரு புதிய இலக்கண விதியையே உண்டாக்கியுள்ளார்கள் என்பதைக் கண்டோம். அவர்களின் இலக்கண விதிக்கு சான்றுகளை கொடுங்கள் என்று இந்த கட்டுரையில் கேட்டு இருக்கிறோம். உண்மையாகவே, குர்‍ஆன் 9:31ல் உள்ள வாக்கியம் சரியானதாக இருந்தால், முஸ்லிம்கள் அதற்கான சான்றுகளை கொடுக்கமுடியும். ஐந்து வகையான சான்றுகளை கொடுக்கும் படி நான் கேட்டுள்ளேன். மேலும், 33:37 மற்றும் 33:56 வசனங்களை, குர்‍ஆன் 9:31ம் வசனத்தை விளக்க மேற்கோள் காட்டினார்கள். இதுவும் ஒரு தவறான செயல் என்பதை நான் எடுத்துக்காட்டினேன்.

இந்த கட்டுரைக்கும் முஸ்லிம்கள் பதில் அளிப்பார்களானால், அப்போது மேலதிக விவரங்களை கர்த்தருக்கு சித்தமானால் நாம் கொடுப்போம்.


இதர குர்-ஆன் ஆய்வுக்கட்டுரைகள்

குர்-ஆன் பக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்