பாகம் 3 - கிறிஸ்தவ சபையே! விழிமின் எழுமின் - பழைய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் முஹம்மதுவின் நபித்துவத்தைப் பற்றிய சிறு குறிப்பு

முன்னுரை: 'கிறிஸ்தவ சபையே! விழிமின் எழுமின்' என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை நாம் படித்துக்கொண்டு இருக்கிறோம். 

பாகம் 1: கிறிஸ்தவ போதகரும் உமரும் சந்தித்து உரையாடிய முதல் பாகத்தை இந்த தொடுப்பில் படிக்கவும். இஸ்லாமை தெரிந்துக்கொள்ளவேண்டுமென்றால், குர்‍ஆனை மட்டும் படித்தால் போதுமா? போன்ற அனேக கேள்விகளுக்கு இந்த முதல் பாகம் பதில் அளிக்கும்.

பாகம் 2: இந்த கிறிஸ்தவ போதகர் தன் சபையில் ஒரு கூட்டத்தை ஒழுங்கு படுத்தினார், இக்கூட்டத்தில் உமரும் அவரது நண்பர் ஜான்சன் அவர்களும் பங்கு பெற்றனர். புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் முஹம்மதுவின் நபித்துவம் பற்றிய கேள்விகளுக்கு சகோதரர் ஜான்சன் பதில் அளித்துள்ளார், அவைகளை படிக்க இங்கு சொடுக்கவும்.

பாகம் 3: இந்த தற்போதைய கட்டுரையாகிய மூன்றாம் பாகத்தில், பழைய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் முஹம்மதுவின் நபித்துவத்தைப் பற்றிய கேள்விகளுக்கு பதில்களை காண்போம். இந்த பாகத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு உமர் பதில்களைத் தருகிறார். 

முதல் இரண்டு பாகங்களை முதலாவது படித்துவிட்டு, இந்த கட்டுரையை படித்தால் கோர்வையாக விவரங்கள் புரியும்.


கிறிஸ்தவ சபையே! விழிமின் எழுமின் பாகம் 3 

பழைய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் முஹம்மதுவின் நபித்துவத்தைப் பற்றிய சிறு குறிப்பு

கேள்வி பதில்கள் தொடர்கின்றன....

கேள்வி 5: என் பெயர் சந்தானம், என்னுடைய கேள்வி என்னவென்றால், ஒருவர் தீர்க்கதரிசியாக இருக்க வேண்டுமென்றால், அவரைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் (முன்னறிவிப்புக்கள்) கட்டாயமாக முந்தைய வேதங்களில் இருக்கவேண்டுமா? முஹம்மது பற்றிய முன்னறிவிப்புக்கள் பைபிளில் உள்ளதாக என்னுடைய நண்பர் கூறுகிறார், இது உண்மையா?

உமர் பதில் 5:

நாம் அனைவரும் பழைய ஏற்பாட்டை படிக்கிறோம், புதிய ஏற்பாட்டைவிட பழைய ஏற்பாட்டில் அனேக தீர்க்கதரிசிகளைப் பற்றி நாம் படிக்கலாம். 

"மோசே" என்ற பெயரில் ஒரு தீர்க்கதரிசியை அனுப்புவேன், அவர் அந்து இஸ்ரவேலர்களை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுதலைச் செய்வார் என்ற முன்னறிவிப்பு மோசேயைப் பற்றி கொடுக்கப்படவில்லை. இஸ்ரவேலர்களை விடுதலை செய்து கானானுக்கு கொண்டுவருவதாக தேவன் உறுதி அளித்தார். காலம் சமீபித்தபோது "மோசே" என்ற பெயருள்ள ஒருவரை அனுப்பி தேவன் விடுதலை அளித்தார். 

மேலும், எலியா, எலிஷா, சாமுவேல், ஏசாயா, எரேமியா என்று அனேக தீர்க்கதரிசிகள் பற்றிய முன்னறிவிப்புக்கள் தரப்படவில்லை, இப்படிப்பட்ட முன்னறிவிப்புக்கள் தேவையும் இல்லை. 

தேவனுடைய தீர்மானத்தின்படி தேவையான காலங்களில் தீர்க்கதரிசிகளை தேவன் எழுப்பி மக்களை எச்சரித்தும், அறிவுரை கூறியும் வந்தார்.

மேசியாவைப் பற்றிய முன்னறிவிப்புக்கள்: 

தீர்க்கதரிசிகள் பற்றிய முன்னறிப்புக்கள் அவசியமில்லை என்பதைக் கண்டோம். ஆனால், மேசியா என்ற இரட்சகர் வருவார் என்ற முன்னறிவிப்பு ஆதியாகமத்திலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. 

உதாரணத்திற்கு, ஆதியாகமத்தின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட ஒரு முன்னறிவிப்பை காணலாம்.

ஆதியாகமம் 3:15 உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

இதே போல, மோசே மூலமாகவும், தாவீது மூலமாக சங்கீதங்களிலும், ஏசாயா மூலமாகவும் மேசியா பற்றி முன்னறிவிப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தான் யூதர்கள் மேசியா வருவார் என்று காத்திருந்தனர். அதே போல, மேசியாவிற்கு முன்பு வழியை சீர்படுத்த ஒரு தீர்க்கதரிசியை அனுப்புவேன் என்று தேவன் முன்னுறைத்தார், யோவான் ஸ்நானகன் இந்த நிலையில் வந்தவர் தான். சுருக்கமான சொல்லவேண்டுமென்றால், ஒருவர் தீர்க்கதரிசியாக இருக்கவேண்டுமென்றால், அவரைப் பற்றிய முன்னறிவிப்புக்கள் கட்டாயம் முந்தைய வேதங்களில் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சில முக்கியமான நோக்கத்திற்காக, ஒரு தீர்க்கதரிசி, இரட்சகர் அல்லது மேசியா அனுப்பப்படுவாரானால், மற்றும் அவரைப் பற்றிய முன்னறிவிப்பு அவசியம் என்று சர்வ வல்லவர் நினைத்தால் மட்டுமே முன்னறிப்பு முந்தைய வேதங்களில் காணப்படும். முன்னறிவிப்பு இல்லாமலேயே ஒருவர் கர்த்தரின் உண்மையான தீர்க்கதரிசியாக இருக்கமுடியும். 

இப்போது உங்கள் கேள்வியில் கேட்ட "முஹம்மதுவின் முன்னறிவிப்புப் பற்றி" காண்போம். பொதுவாக இஸ்லாமியர்கள் இரண்டு வகையாக பேசுவார்கள்: ஒரு பக்கம் "பைபிள் திருத்தப்பட்டுவிட்டது" என்று கூறுவார்கள், இன்னொரு பக்கம், "இன்னும் திருத்தப்படாத இறைவனின் வசனங்கள் பைபிளில் உண்டு" என்றும் கூறுவார்கள். 

ஏன் இப்படி முரண்பட்டு கூறுகிறார்கள் என்று நாம் கவனித்தால், "தங்கள் தீர்க்கதரிசியை பைபிளில் நுழைப்பதற்கு" இவ்விதமாக "இன்னும் திருத்தப்படாத இறைவனின் வசனங்கள் பைபிளில் உண்டு" என்று கூறுகிறார்கள். 

ஒரு கிறிஸ்தவர் முஸ்லிமிடம் "பைபிள் திருத்தப்பட்டது" என்று கூறுகிறாய், ஆனால், உங்கள் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு (தீர்க்கதரிசனம்) பைபிளில் இன்னும் உள்ளது என்றுச் சொல்கிறாயே, இது எப்படி? என்று கேட்டால், "இன்னும் சில வசனங்கள் பைபிளில் மாற்றமடையால் இருக்கிறது, அந்த வசனங்களில் தான் எங்கள் நபி பற்றிய முன்னறிவிப்புக்கள்" உள்ளன என்று பதில் அளிப்பார். 

ஆக, பைபிளின் போதனைகளுக்கு குர்‍ஆன் முரண்படுகிறது, இதனை நியாயப்படுத்த, பைபிள் மாற்றப்பட்டது என்று அவர்கள் கூறுவார்கள். ஆனால், முஹம்மதுவை பைபிளில் காட்ட விரும்பி, இன்னும் சில வசனங்கள் பைபிளில் மாற்றமடையாமல் உள்ளது என்றுச் சொல்வார்கள். ஆகையால், இஸ்லாமியர்களின் வஞ்சக வலையில் விழவேண்டாம் என்று உங்களுக்கு அறிவுரை கூறுகிறோம். 

அடுத்தபடியாக, புதிய ஏற்பாட்டில் முஹம்மது பற்றிய முன்னறிவிப்புக்கள் இல்லை என்பதை நாம் இதற்கு முன்பு கேட்கப்பட்ட கேள்விகளின் பதில்களில் கண்டோம். 

அதே போல, பழைய ஏற்பாட்டில் "மேசியா" பற்றிய முன்னறிவிப்புகளை சரியாக புரிந்துக்கொள்ளாமல் அல்லது தங்கள் நபியை பைபிளின் பக்கங்களில் காட்டவேண்டும் என்ற எண்ணத்துடன், வசனங்களின் பொருளை திருத்தி முஸ்லிம்கள் கூறுகிறார்கள். 

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், முஹம்மது பற்றிய முன்னறிவிப்புகள் பைபிளில் இல்லை, அவைகள் இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. 

உங்கள் நண்பர் பைபிளை முழுவதுமாக படித்து இருக்கமாட்டார், யாரோ சொன்னதை அப்படியே நம்பிக்கொண்டு, சுயமாக அவைகளை சரிபார்க்காமல், அப்படியே உங்களிடம் வந்து சொல்லியுள்ளார். எனவே, முதலில் அவரை பைபிளை படிக்கச்சொல்லுங்கள் (அதற்கு முன்பாக ஒரு முறையாவது தன் வேதமாகிய குர்‍ஆனை தமிழில் ஒருமுறை படிக்கச்சொல்லுங்கள்). 

நாம் அடுத்த கேள்விக்குச் செல்வோமா?

கேள்வி 6: இப்போது நீங்கள் சொன்ன பதிலிலிருந்து ஒரு கேள்வியை கேட்கிறேன். ஒருவர் பற்றிய முன்னறிவிப்பு இல்லாமலேயே அவர் "உண்மையான தீர்க்கதரிசியாக" இருக்கலாம் என்று கூறினீர்கள். இது ஆபத்தானதல்லவா? உலகத்தில் நிறையே பேர் இப்படி வந்து மக்களை ஏமாற்ற முடியுமே! மக்கள் "உண்மையான தீர்க்கதரிசி யார்? கள்ள தீர்க்கதரிசி யார்?" என்று எப்படி வகைப்படுத்துவது, மக்கள் பொய் தீர்க்கதரிசிகளை நம்பி தங்கள் இரட்சிப்பை இழக்க இறைவன் எப்போதும் விரும்பமாட்டார். அல்லாஹ்வும், பைபிளின் தேவனும் இதைப் பற்றி என்ன சொல்லியுள்ளார்கள்?

உமர் பதில் 6: 

இது மிகவும் முக்கியமான கேள்வியாகும். அதாவது நமது நித்தியத்தை நிர்ணயிக்கும் கேள்வி இது. இந்த கேள்விக்கான பதிலை ஒருவர் அறிந்துக்கொண்டால், அவரது நித்தியம் தேவன் விரும்பும் இடத்தில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

மனித சமுதாயம் ஆரம்பித்த நாள் முதல் (ஆதாம் முதல்) நபிமார்களை அனுப்பிக்கொண்டு இருப்பதாக அல்லாஹ் கூறுகிறார். கிட்டத்தட்ட 25 நபிமார்களின் பெயர்களை குர்‍ஆன் குறிப்பிடுகிறது. பைபிளின் தீர்க்கதரிசிகளையும் தாமே அனுப்பியதாக அல்லாஹ் கூறுகிறார். ஆனால், ஒரு நபி "உண்மையான நபியா அல்லது கள்ள நபியா?" என்று எப்படி கண்டுபிடிக்கவேண்டும் என்ற மிகவும் முக்கியமான விவரத்தை அல்லாஹ் சொல்லவில்லை? இதனால் தான் இஸ்லாமியர்கள் "முஹம்மது ஒரு நபி" என்று கருதிக்கொண்டு, அவரை பரிசோதித்துப் பார்க்காமல், கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். 

குர்‍ஆனின் மௌனம்: 

சில நேரங்களில் "சொல்லப்பட்ட விவரங்களை" சரியாக புரிந்துக்கொள்ளவேண்டுமென்றால், முதலாவதாக நாம் "சொல்லப்படாத விவரங்களை" புரிந்துக்கொள்ள வேண்டும், இது அதிக பயன் அளிக்கும். குர்‍ஆனில் ஒரு முக்கியமான விவரம் சொல்லப்படாமல் விட்டுவிடப்பட்டுள்ளதை நாம் கவனிக்கலாம், அதைப் பற்றி இப்போது காண்போம்.

நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, "நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்" என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். (குர்‍ஆன் 4:150) 

இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்;. காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். (குர்‍ஆன் 4:151) 

(இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். "நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்;.... (குர்‍ஆன் 2:285) 

எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. . . . (குர்‍ஆன் 3:161)

இஸ்லாமிலே "நாங்கள் எல்லா நபிமார்களையும் நம்புகிறோம்" என்ற சொற்றொடர் மிகவும் வலிமை வாய்ந்ததாகவும், அதிகமாக அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றதாகவும் உள்ளது. யூத மற்றும் கிறிஸ்தவர்களின் பரிசுத்த வேதங்களில் அடிக்கடி சொல்லப்படுகின்ற ஒரு குறிப்பிட்ட முக்கியமான விவரம் முழுவதுமாக குர்‍ஆனில் விட்டுவிடப்பட்டுள்ளது. குர்‍ஆனில் காணப்படாத அந்த விவரம் என்னவென்றால் "மக்கள் ஒரு கள்ள நபியை எப்படி கண்டுபிடிப்பது?" என்பது பற்றியதாகும். 

பைபிளின் அனேக வசனங்கள் ஒரு உண்மையான தீர்க்கதரிசியை கண்டுபிடிப்பதற்கான நிபந்தனைகளைக் கூறுகிறது. அதே போல, ஒரு கள்ள தீர்க்கதரிசியை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதையும் கூறுகின்றது. அனேக கள்ள நபிகள் வருவார்கள் என்று தேவன் அடிக்கடி எச்சரிக்கை கொடுத்துள்ளார். ஒருவரை பார்த்தவுடன் அவர் கள்ள நபி என்று கண்டுபிடிக்க முடியாது. இஸ்ரவேல் சரித்திரத்தில் அனேக கள்ள தீர்க்கதரிசிகள் வந்ததாக பைபிள் பதிவு செய்துள்ளது. [கள்ள நபிகள் பற்றிய சில வசனங்களை இங்கே காணலாம்: உபாகமம் 13, 18:20-22, எரேமியா 5:31, 14:14, 23:9-40, 28, எசேக்கியேல் 13, மத்தேயு 24:11, 1 கொரிந்தியர் 14:29, 2 தீமோத்தேயு 4:3, 2 பேதுரு 2:1, வெளிப்படுத்தின விசேஷம் 2:20, 16:13 ...] 

முந்தைய வேதங்களில் பொய் தீர்க்கதரிசிகள் பற்றிய எச்சரிக்கை அடிக்கடி காணப்படுகின்ற ஒன்றாக இருந்தது. கடைசி காலங்களில் அனேக பொய் தீர்க்கதரிசிகள் வருவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்படிப்பட்ட விஷயத்தில் குர்‍ஆன் முழுவதுமாக மௌனமாக இருப்பதைக் கண்டால் ஆச்சரியமாக உள்ளது. கள்ள தீர்க்கதரிசிகளை மக்கள் எப்படி கண்டுபிடிக்கலாம் என்ற விவரம் குர்‍ஆனில் கொடுக்கப்படாத நிலையை கண்டால், ஒருவருக்கு குர்‍ஆன் மீது சந்தேகம் வர ஆரம்பிக்கும். ஒரு நபியை சந்தேக கண்ணோட்டத்துடன் கண்டு அவன் உண்மை நபியா அல்லது பொய் நபியா என்ற ஒரு எண்ணம் சாதாரண மனிதனுக்கு வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் குர்‍ஆன் எழுதப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம். இதன் மூலம், அவன் முஹம்மதுவையும் சோதித்துப் பார்த்து "இவர் உண்மை நபியா அல்லது பொய் நபியா" என்பதை அறிந்துக் கொள்ளக்கூடாது என்ற நோக்கத்துடன் குர்‍ஆன் எழுதப்பட்டதாக தெரிகிறது. 

நபிகளை நாம் பரிசோதித்து பார்க்கவேண்டும் என்றுச் சொல்வதற்கு பதிலாக, குர்‍ஆன் அடிக்கடி "எல்லா நபிகளை நம்பவேண்டும் என்றும், முஹம்மது கூட ஒரு நபி என்று நம்பவேண்டும்" என்றும் கூறுகிறது. இதன் மூலம் நாம் அனைவரும் 'முஹம்மது, தேவன் அனுப்பிய நபி ஆவார்' என்பதை நம்பவேண்டும் என்று குர்‍ஆன் தனக்குத் தானே முடிவு செய்கிறது அல்லது எதிர்பார்க்கிறது. 

எந்த ஒரு மனிதனும் தன்னை ஒரு தீர்க்கதரிசி (அ) நபி என்றுச் சொன்னால், அப்படிப்பட்ட மனிதனின் அந்த உரிமைப் பாராட்டலை நாம் பரிசோதித்துப் பார்க்கவேண்டும் என்று பைபிள் கூறுகிறது, இதனை பைபிளை படிப்பவர்கள் அறிந்திருப்பார்கள். கள்ளத் தீர்க்கதரிசிகள் வருவார்கள் இப்படிப்பட்டவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று பைபிள் நமக்கு கட்டளையிடுகிறது. இது உண்மையும் கூட, அனேகர் தங்களை தீர்க்கதரிசிகள் என்று சொல்லிக்கொண்டு அனேகரை வஞ்சித்துள்ளனர். ஆனால், குர்‍ஆனை பொறுத்தமட்டில், ஒரு தீர்க்கதரிசியை சோதித்து பார்க்கவேண்டும் என்ற எண்ணம் கூட மனிதர்களுக்கு வந்துவிடக்கூடாது என்ற கண்ணோட்டத்தில் அது ஜாக்கிரதையாக இருக்கிறது. 

முஹம்மதுவிற்கு பிறகு அனேகர் "தாங்கள் இறைவனிடமிருந்து வந்த நபிகள்" என்றுச் சொல்லி வந்துள்ளார்கள் என்பதை இஸ்லாமியர்கள் அங்கீகரிப்பார்கள். இஸ்லாமியர்கள் இவர்களை "வஞ்சகர்கள்/ஏமாற்றுக்காரர்கள்" என்றுச் சொல்லி மறுத்துள்ளார்கள். ஒரு தீர்க்கதரிசி உண்மையான நபியா அல்லது பொய்யான நபியா என்ற பரிசோதனையை செய்து, அதன் மூலமாக வந்த முடிவின்படி, இஸ்லாமியர்கள் இந்த நபிகளை மறுக்கவில்லை. அதற்கு பதிலாக, "முஹம்மது தம்மை கடைசி நபி" என்றுச் சொல்லிக்கொண்டதால், அதன் அடிப்படையில் மற்றவர்களை இஸ்லாமியர்கள் புறக்கணிக்கிறார்கள். 

இஸ்லாமியர்கள் "முஹம்மது ஒரு உண்மை நபி என்றும், அவர் கடைசி நபி என்றும் நம்புவதினால், மற்றவர்களை புறக்கணிக்கிறார்கள்". ஆனால், அதே முஹம்மதுவை இஸ்லாமியர்கள் பரிசோதனைக்கு உட்படுத்த தவறுகிறார்கள், அவரை பரிசோதனைக்கு உட்படுத்தமாட்டார்கள். 

தீர்க்கதரிசிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், அவர்கள் உண்மையானவர்களா அல்லது பொய் நபிகளா என்று கண்டறியப்படவேண்டும் என்பதை இஸ்லாமியர்கள் அங்கீகரிப்பார்களா? இறைவன் தன் வேதத்தில் சொல்லியபடி இஸ்லாமிரயர்கள் மற்ற நபிகளை சோதித்து அறிவது போல, தங்களுடைய முஹம்மதுவையும் சோதிக்கவேண்டும் என்பதை இஸ்லாமியர்கள் உணருவார்களா? 

ஒரு நபியை எப்படி பரிசோதிக்கவேண்டும் என்ற நிபந்தனைகள் முழுவதுமாக குர்‍ஆனில் காணப்படாததைக் குறித்து இஸ்லாமியர்களுக்கு ஆச்சரியமில்லையா? நபிகளை சோதிக்கவேண்டும் என்ற விஷயத்தில் மட்டும் ஏன் குர்‍ஆன் மௌனம் சாதிக்கிறது? 

ஆக, மக்கள் வழிகெடுக்கப்படக்கூடாது என்பதில் பைபிளில் தேவன் அக்கரைக் கொள்கிறார், ஆனால், அதில் அக்கரை கொள்ளாதவராக அல்லாஹ் காணப்படுகிறார்.

கேள்வி 7: என் பெயர் ரவிச்சந்திரன். என் கேள்வி என்னவென்றால், பைபிளில் கள்ள தீர்க்கதரிசிகளை எப்படி கண்டுபிடிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது என்றுச் சொன்னீர்கள். ஒரு சில வசனங்களின் உதாரணங்களுடன் அதை விளக்குங்களேன்.

உமர் பதில் 7: 

நாம் ஏற்கனவே பார்த்தபடி, புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தின் படி முஹம்மது ஒரு கள்ள நபியாவார். இப்போது, பழைய ஏற்பாட்டில் தேவன் கொடுத்துள்ள நிபந்தனைகளின் படி முஹம்மது யார் என்பதை சுருக்கமாக காண்போம்.

1) அந்நிய தேவர்களின் பெயரில் தீர்க்கதரிசனம் சொல்கின்றவன், கள்ள நபியாவான்.

ஒருவர் கள்ள நபியா அல்லது நல்ல நபியா என்பதை அறிய முதலாவது நிபந்தனையை தேவன் மோசேயுடன் கூறுகிறார்.

உபாகமம் 18:20 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.

மேற்கண்ட வசனத்தின்படி, யெகோவா தேவனின் பெயரில் அல்லாமல் வேறே தெய்வங்களின் பெயரில் தீர்க்கதரிசனம் சொல்கின்றவன், கள்ள தீர்க்கதரிசி என்று தேவன் கூறுகிறார். முஹம்மது அல்லாஹ்வின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தார். பைபிளின் யெகோவா தேவனின் பெயரில் அல்ல. அல்லாஹ் என்பவரும், பைபிளின் யெகோவா தேவனும் ஒருவரல்ல. 

முதலாவதாக, அந்நிய தெய்வத்தின் பெயரில் அதாவது அல்லாஹ்வின் பெயரில் முஹம்மது தீர்க்கதரிசனம் சொன்னதினாலே, அவர் ஒரு கள்ள தீர்க்கதரிசியாவார். 

இரண்டாவதாக, முஹம்மது அல்லாஹ்வின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்ததும் அல்லாமல், பைபிளின் தீர்க்கதரிசிகளை அனுப்பிய தேவன் தான் தன்னையும் அனுப்பினார் என்று இன்னொரு பொய்யையும் சொல்லியுள்ளார். அதாவது, மேலே கண்ட வசனத்தில் தேவன் எச்சரித்தது போல, தேவன் அவரை (முஹம்மதுவை) அனுப்பாமல் இருந்த போதிலும், தன்னை பைபிளின் தேவனே அனுப்பினார் என்று பொய்யையும் கூறினார். 

மேலே தேவன் சொல்லிய வசனத்தில் உள்ள இரண்டு நிபந்தனைகளையும் முஹம்மது மீறினார். 

1) அந்நிய தெய்வத்தின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தார்

2) யெகோவா தேவன் தான் தன்னை அனுப்பினார் என்றும் பொய் சொல்லி தீர்க்கதரிசனம் உரைத்தார்.

ஆக, உபாகமம் 18:20ம் வசனத்தை முழுவதுமாக முஹம்மது மீறியுள்ளார், அல்லது தன்னை ஒரு பொய் நபி என்பதை நிருபித்துள்ளார்.

இப்போது நீங்கள், "ஒருவர் சொல்லும் தீர்க்கதரிசனம் 'கர்த்தரால் வந்தது அல்லது கர்த்தரால் வரவில்லை' என்பதை எப்படி நாங்கள் தெரிந்துக்கொள்வது"? என்று கேட்கலாம்.

இப்படியெல்லாம் மனிதர்கள் கேள்வி கேட்பார்கள் என்று தான், தேவன் அடுத்த இரண்டு வசனங்களில் இன்னொரு நிபந்தனையை கொடுக்கிறார்.

இப்போது உபாகமம் 18:21, 22ம் வ‌சனங்களை படிப்போம்:

உபாகமம் 18:21 கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், 

உபாகமம் 18:22 ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.

ஒருவன் பொய் சொல்லி "கர்த்தரின் நாமத்தில் உரைக்கிறேன்" என்றுச் சொன்னாலும் சரி, அது நிறைவேறாமல் போனால், அவன் கள்ள தீர்க்கதரிசி ஆவான். கர்த்தர் அனுப்பிய அனேக தீர்க்கதரிசிகளை நாம் பார்க்கிறோம், அவர்கள் சொன்ன தீர்க்கதரிசனங்கள் அப்படியே நிறைவேறியது. அதே போல, கர்த்தரின் பெயரில் பொய் சொன்ன அனனியா தீர்க்கதரிசியைப் பற்றியும் பைபிள் குறிப்பிடுகிறது (எரேமியா 27:2,12-14 & 28:1-3,8-10 & 28:12-17.) 

அனனியாவைப் போல, முஹம்மதுவும் ஒரு பொய் தீர்க்கதரிசியாவார். பெர்சிய ஆட்சியை ரோமர்கள் பிடிப்பார்கள் என்ற முஹம்மதுவின் தீர்க்கதரிசனமும், தாங்கள் மக்காவில் ஹஜ் செய்வோம் என்ற முஹம்மதுவின் தீர்க்கதரிசனமும் அவர் சொல்லிய படி நிறைவேறவில்லை. இதனை விவரமாக அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும். இவைகளை ஒரு சில வரிகளில் சொல்லமுடியாது. 

1) Muhammad's False Prophecies
2) Test a prophet
3) CHAPTER II - HOW TO TEST A REVELATION ACCORDING TO THE TORAH
4) Islamic Genetics - How a Jew's testing of Muhammad proves that he was not a true prophet
5) A Quranic Criterion for a True Prophet

ஆக, தேவன் உபாகமம் 18:22ல் சொல்லிய படி, முஹம்மது கர்த்தரின் பெயரில் வந்த தீர்க்கதரிசி அல்ல.

2) இரண்டாவதாக, ஒரு தீர்க்கதரிசி முந்தைய தீர்க்கதரிசிகளின் வழியில் நடக்காமல், வேறே தெய்வங்களை வணங்கி, பைபிளின் கோட்பாடுகளுக்கு எதிராகவும் நடந்துக்கொண்டால், அவன் பொய்யான தீர்க்கதரிசி என்று பழைய ஏற்பாடு கூறுகிறது.

உபாகமம் 13:1-5 

உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி: 

நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும், 

அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். 

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர் சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக. 

அந்தத் தீர்க்கதரிசியும், அந்தச் சொப்பனக்காரனும் கொலைசெய்யப்படக்கடவன்; நீங்கள் நடக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியை விட்டு உங்களை விலக்கும்படி, அவன், உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவரும் உங்களை அடிமைத்தன வீட்டிலிருந்து நீங்கலாக்கி மீட்டுக்கொண்டவருமான உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான துரோகப்பேச்சைப் பேசினான்; இப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்குவீர்களாக.

ஆனால், முஹம்மது செய்தது என்ன? முந்தைய வேதங்களில் சொல்லப்பட்டவைகளை மறுத்தார், அவைகளை மாற்றி கூறினார். மட்டுமல்ல, யெகோவா தேவனை வணங்குவதை விட்டுவிட்டு, அல்லாஹ் என்ற அந்நிய தெய்வத்தை தொழுதுக்கொண்டார். ஏழாம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை இஸ்லாமியர்கள் அனைவரும் அந்நிய தெய்வமாகிய அல்லாஹ்வை தொழுதுக்கொள்ள முஹம்மது காரணமானார். ஆக, முந்தைய வேதங்களை உறுதிப்படுத்தாதவர் கள்ள தீர்க்கதரிசியாவார்.

இன்னும் இப்படி அனேக நிபந்தனைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். 

முடிவாக, 

1) பைபிள் சொல்லும் நிபந்தனையாகிய "கர்த்தரின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தல், 

2) அந்நிய தெய்வத்தின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைக்காமல் இருந்தல், 

3) சொல்லும் தீர்க்கதரிசனம் நிறைவேறுதல் மற்றும் 

4) முந்தைய வேதங்களின்படி, தீர்க்கதரிசிகளின் அடிச்சுவடிகளில் நடத்தல்" 

போன்றவைகள், ஒருவர் உண்மை தீர்க்கதரிசி என்பதற்கு தேவையான ஒரு சில நிபந்தனைகளாகும். இதன் வெளிச்சத்தின் படி பார்த்தால், முஹம்மது மேற்கண்டவைகள் அனைத்தையும் மீறியுள்ளார். ஆகையால், பைபிளின் அடிப்படையில் அவரை கள்ள நபி என்றுச் சொல்வதைத் தவிர வேறு வழியே இல்லை. 

பழைய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் முஹம்மதுவின் நபித்துவம் பற்றிய கேள்வி பதில்கள் நான்காம் பாகத்தில் தொடரும்...

மூலம்: http://isakoran.blogspot.in/2012/06/3.html

கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் தொடர் கட்டுரைகள்