2016 ரமளான் (14) – நிலமெல்லாம் இரத்தம் – முஹம்மதுவின் அந்த மூன்று பதில்கள் ஒரே சமயத்தில் இறக்கப்பட்டவைகளா?

(15. அந்த மூன்று வினாக்கள் & 16. அபிசீனிய மன்னன் நஜ்ஜாஷி)

[நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு கொடுக்கப்பட்ட முந்தைய பதில்களை இங்கு சொடுக்கி படிக்கலாம்]

மதிப்பிற்குரிய பாரா அவர்களுக்கு,  

கடந்த கட்டுரையில் ‘முஹம்மது சந்திரனை பிளந்த அற்புதம் பற்றி எழுதினேன்’. குர்-ஆன் சொல்பவைகள் பொய்கள்  என்றுச் சொல்லி, அதன் மீது குற்றம் சுமத்தும் வேலையை வேறு யாரும் செய்யவேண்டாம், அதனை ஹதீஸ்கள் செவ்வனே செய்து முடிக்கின்றன என்பதை முந்தைய கட்டுரையை படிக்கும் போது அறிந்துக்கொள்ளலாம். முஹம்மது அற்புதங்கள் செய்யமாட்டார் என்று குர்-ஆன் சொல்லும் போது, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, சந்திரனையே பிளந்து காட்டினார் என்று ஹதீஸ்கள் சொல்கின்றன. ஹதீஸ்களில் அதாவது உங்களின் வரிகளின் படி ‘சரித்திரத்தில்’ பதிவு செய்யப்பட்டுள்ள முஹம்மதுவின் அற்புதங்கள் பற்றி தமிழ் முஸ்லிம் அறிஞர்கள் தான் ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும்.  

மக்காவினர் முஹம்மதுவின் நபித்துவத்தை நிருபிக்கும் விதத்தில் மதினாவில் இருந்த யூதர்களின் ஆலோசனையின் படி கேட்ட மூன்று கேள்விகள், அதற்கான பதில்கள் பற்றி நீங்கள் எழுதியவைகளை இந்த கட்டுரையில் ஆய்வு செய்வோம்.  குர்-ஆனில் உள்ள பிரச்சனைக்குரிய அத்தியாயங்களில் இந்த 18வது அத்தியாயமும் ஒன்று என்பதை சுருக்கமாக காண்போம்.  முஹம்மதுவிற்கு இறங்கிய அந்த மூன்று கேள்விகளுக்கான பதில்கள் ”மூன்றும்” ஒரே நேரத்தில் இறங்கியதா? அல்லது பல நாட்கள் இடைவெளியில் இறங்கியதா? என்பதைக் காண்போம். இஸ்லாமின் படி, ஒரே நேரத்தில் இறக்கப்பட்டது, ஆனால் உண்மை வேறு விதமாக உள்ளது.  முதலாவது பாரா அவர்கள் எழுதியவைகளை சுருக்கமாக காண்போம்.

பாரா அவர்கள் எழுதியவைகள்:

//முகம்மது ஓர் இறைத்தூதர்தானா? அவர் சொல்லுவதையெல்லாம் நம்பி, ஏற்பதற்கில்லை. மந்திரவாதியோ என்று சந்தேகப்படுகிறோம். என்ன செய்து அவரை பரீட்சித்தால் சரியாக இருக்கும்? ஆண்டாண்டு காலமாக இருந்துவரும் அரபுகளின் நம்பிக்கைகளை அவர் கேள்விக்குள்ளாக்குகிறார். அடிப்படையே தகர்ந்துவிடும் போலிருக்கிறது. அரபுகளின் வழிபாட்டு உருவங்களை அவர் மதிப்பதில்லை. உருவமற்ற ஒரே இறைவன் என்றொரு புதிய கருத்தை முன்வைத்து மக்களை ஈர்க்கிறார். அவர் உண்மையா, போலியா என்று எங்களுக்குத் தெரிந்தாக வேண்டும். இதற்கு யூத குருமார்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும்.மெக்கா நகரத்து வணிகர்களின் இந்தக் கோரிக்கை, யத்ரிபில் வசித்துவந்த யூத குருமார்களின் சபைக்குப் போய்ச் சேர்ந்தது. அவர்கள், மெக்காவாசிகள் முகம்மது குறித்துச் சொன்ன ஒவ்வொரு தகவலையும் கூர்மையாக கவனித்துக் கேட்டார்கள். தமக்குள் நீண்டநேரம் ஆலோசனை நடத்தினார்கள். இறுதியில், முகம்மதுவைப் பரிசோதிக்க மூன்று வினாக்களை அவரிடம் கேட்கச் சொல்லி அரபுகளிடம் சொல்லி அனுப்பினார்கள்."இதுதான் பரீட்சை. இவைதான் கேள்விகள். இதற்கு மேலான கேள்விகள் என்று எதுவுமில்லை. இந்த மூன்று கேள்விகளுக்கும் அந்த முகம்மது என்ன பதில் தருகிறார் என்று கேட்டு வந்து சொல்லுங்கள். அவர் சொல்லும் பதில்கள் சரியானவையாக இருக்குமானால், சந்தேகத்துக்கு இடமில்லாமல் அவர் இறைத்தூதர்தான் என்று நீங்கள் நம்பலாம். பதில்கள் சரியில்லை என்றால், அவர் பித்தலாட்டக்காரர்தான் என்பதில் சந்தேகமில்லை"" என்று சொன்னார்கள்.யூத மதகுருமார்கள் எழுப்பிய அந்த மூன்று வினாக்களுக்கு சத்தியமாக எந்த அரேபியருக்கும் விடை தெரிய நியாயமில்லை. முகம்மது ஒரு அரேபியர். எழுதப்படிக்கத் தெரியாதவர். யாரிடமும் பாடம் கேட்டவரும் அல்லர். எனவே யூத குருமார்களுக்கு மட்டுமே விடை தெரிந்த அந்த வினாக்களுக்கு அவர் எப்படி பதில் சொல்லுகிறார் பார்க்கலாம் என்று புறப்பட்டார்கள் குறைஷிகள். (நிலமெல்லாம் இரத்தம், அத்தியாயம் 15 - அந்த மூன்று வினாக்கள்)//

// அதன்பிறகு யூத ரபிக்கள் எழுப்பிய மூன்று வினாக்களுக்கும் விடைகள் வெளிவந்தன.முதலாவது, தமது சமூகத்தினரை விட்டுத் தனியே பிரிந்துபோன இளைஞர்களின் கதை. மத்திய ஆசியாவின் பிரசித்திபெற்ற புராணக் கதைகளுள் ஒன்று இது. . . . 

. . .யூத ரபிக்களின் இரண்டாவது வினா, கிழக்கையும் மேற்கையும் பயணத்தால் அளந்த யாத்ரீகரைப் பற்றியது. அவரது பெயர், துல்கர்னைன். (இச்சொல்லுக்கு இரண்டு கொம்புகள் உடையவர் என்று பொருள்.) அவர்களது மூன்றாவது கேள்வி, ஆன்மா குறித்து. அரபு மொழியில் ரூஹ் என்றால் ஆன்மா. இக்கேள்விக்கு முகம்மதுவுக்குக் கிடைத்த பதில்: "அதைப்பற்றி மிகச் சொற்ப ஞானமே உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால், அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியாது.""முகம்மது என்ன செய்வார்? இறைவசனம் அப்படித்தான் வந்தது! ஆகவே, தமக்கு வழங்கப்பட்ட இறைவசனங்களை அப்படியே அவர் குறைஷிகளிடம் பதில்களாகத் தெரிவித்துவிட்டார். (நிலமெல்லாம் இரத்தம், அத்தியாயம் 16 - அபிசீனிய மன்னன் நஜ்ஜாஷி).

இந்த மூன்று கேள்விகளுக்கு முஹம்மது அளித்த பதிலில் உள்ள பிரச்சனைகளை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். ஆனால், இந்த கட்டுரையில், மேற்கண்ட மூன்று கேள்விகளுக்கான பதில் ஒரே நேரத்தில் இறங்கியிருக்குமா? என்ற கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன். இப்படிப்பட்ட சந்தேகம் ஏன் எனக்கு வருகிறது? இதற்கு காரணம் குர்-ஆனின் 18வது அத்தியாயம் தான்.

அத்தியாயம் 18ன் பின்னணி:

மேற்கண்ட வரிகளில் பாரா அவர்கள் எழுதியவைகளின் படியும், இப்னு இஷாக்கின் ”The Life of Muhammad”, 136-139 பக்கங்களில் கொடுக்கப்பட்டதின் படியும், இன்னும் தஃப்ஸீர்களில் சொல்லப்பட்டதின் படியும், அந்தக் குகை என்ற அத்தியாயம், மேற்கண்ட கேள்விகளுக்கான பதிலை ஜிப்ராயீல் கொண்டுவரும் போது இறக்கப்பட்டதாகும்.

இப்னு இஷாக்கின் ”The Life of Muhammad”, 137 பக்கம்:

This delay caused the apostle great sorrow, until Gabriel brought him the Chapter of The Cave, in which he reproaches him for his sadness, and told him the answers of their questions, the youths, the mighty traveller, and the spirit.

இப்னு கதீர் தஃப்ஸீர்: 

We have already mentioned how the disbelievers of Makkah sent word to the People of the Book and asked them for some information with which they could test the Prophet . They (the People of the Book) said, `Ask him about a man who traveled extensively throughout the earth, and about some young men who nobody knows what they did, and about the Ruh (the soul),' then Surat Al-Kahf was revealed. Dhul-Qarnayn had great Power (மூலம்: http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=2705&Itemid=73)

மேற்கண்ட விவரங்கள் உண்மையானால், நாம் அந்த மூன்று கேள்விகளுக்கான பதிலை குர்-ஆனின் 18ம் அத்தியாயத்தில் காணமுடியும். ஆனால், நம் கைகளில் இருக்கும் குர்-ஆனில் இப்படி உள்ளதா?

குகை அத்தியாயத்தில் உள்ள 110 வசனங்களின் முக்கிய சுருக்கத்தை கீழே பாருங்கள்:

 வசனங்கள் விவரங்கள்
9 - 22


முதல் கேள்வியின் பதில்:
 குகையில் இருந்தவர்கள் பற்றிய பதில் சொல்லப்பட்டுள்ளது

23 -24


எந்த விஷயத்தைப் பற்றியும் “நிச்சயமாக நாம் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்” என்று நிச்சயமாக கூறாதீர்கள் என்ற எச்சரிக்கை முஹம்மதுவிற்கு கொடுக்கப்படுகின்றது.

25 - 26


முதல் கேள்வியின் பதில் 
தொடர்கிறது:
குகையில் இருந்தவர்கள் பற்றிய மீதமுள்ள  விவரங்கள்.

32 – 43


புதிய உவமை:
இரண்டு நபர்களின் உவமை ஒன்று சொல்லப்பட்டுள்ளது.

60 – 82


மோசே கதை:
  மோசே மற்றும் இன்னொரு அல்லாஹ்வின் அடியார் பற்றிய கதை கூறப்பட்டுள்ளது.

83 – 98


இரண்டாம் கேள்வியின் பதில்:
  துல்கர்னைன் பற்றிய பதில் கூறப்பட்டுள்ளது.


குர்-ஆன் 18:1 – 8, 27 -31, 44 – 59 மற்றும் 99 -110 போன்ற வசனங்கள் மேற்கண்ட கதைகள் பற்றி அல்லாமல், இதர பல விவரங்கள் பற்றி பேசுகின்றன.

இந்த அத்தியாயத்தின் பின்னணியை பார்க்கும்போது, முஹம்மதுவிடம் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளுக்கான பதில்கள் இவ்வத்தியாயத்தில் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்.

அந்த மூன்று பதில்கள் எங்கே:

இவ்வத்தியாத்தின் வசனங்களை பார்க்கும் போது, ஒரு கோர்வையாக இவைகள் இருப்பதை காணமுடிவதில்லை.   முக்கியமாக, நாம் ஆய்வு செய்துக்கொண்டு இருக்கும் அந்த மூன்று கேள்விகளுக்கான பதில்கள் ஒன்றன் பின் ஒன்றாக இருக்கவேண்டும் என்று எல்லோரும் எதிர்ப்பார்ப்போம். ஏனென்றால், இஸ்லாமிய சரித்திரங்களும், தஃப்ஸீர்களும் இப்படித்தான், இவ்வத்தியாயத்தின் பின்னணியை விவரிக்கின்றன. அப்படியானால், அந்த மூன்று பதில்கள் எங்கே? 

முஹம்மதுவிற்கு அல்லாஹ் கொடுத்த பதில்கள் கோர்வையாக கீழ்கண்டவிதமான வரிசையில் சொல்லியிருக்கவேண்டும். 

  • முதலாவதாக, முஹம்மதுவை கடிந்துக்கொள்ளும் வசனம் இறங்கி இருக்கவேண்டும் (18:23-24)
  • இரண்டாவதாக, குகையில் பாதுகாப்பு தேடியவர்களின் விவரங்கள் (18:9-22 மற்றும் 18:25-26) இருக்க வேண்டும்.
  • மூன்றாவதாக, துல்கர்னைன் பற்றிய பதில் இருந்திருக்கவேண்டும் (18: 83-98)
  • நான்காவதாக, ஆத்மாவைப் (ரூஹ்) பற்றிய வசனம் (17:85) இருந்திருக்கவேண்டும் 

ஆனால், இந்த அத்தியாயத்தை பாருங்கள், எப்படி அமைக்கப்பட்டு இருந்திருக்கின்றது என்று? குகை மற்றும் துல்கர்னைன் பற்றிய பதில்களுக்கு இடையே வேறு இரு நிகழ்ச்சிகள் சொல்லப்பட்டுள்ளது. 110 வசனங்கள் அடங்கிய அத்தியாயத்தில், ஆரம்பத்தில் ஒரு பதிலும், கடைசியில் இன்னொரு பதிலும் உள்ளது. மேலும், முஹம்மதுவை கடிந்துக்கொள்ளும் வசனம் முதலாவது இருந்திருக்கவேண்டும், ஆனால், அது குகையில் பதுங்கிய பதில் முக்கால் வாசி முடிந்த பிறகு வருகிறது (23-24).

ரூஹ் (ஆத்துமா) பற்றிய பதில் எங்கே:

இன்னொரு முக்கியமான விவரம் இந்த அத்தியாயத்தில் இருந்திருக்கவேண்டும், ஆனால், இங்கு அது காணப்படவில்லை. ஆத்துமா பற்றிய பதில் எங்கு சென்றது? வேறு அத்தியாயத்தில் இருக்குமா? ஆம், ரூஹ் பற்றிய பதில் 17ம் அத்தியாயத்தில் காணப்படுகின்றது. 

குர்-ஆன் 17:85

(நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.

ஏன் மூன்றாம் பதில் மட்டும் 17ம் அத்தியாயத்தில் காணப்படுகின்றது?  மேலும், 18:83ம் வசனத்தை பார்க்கும் போது, “மக்கள் கேள்வி கேட்டதால்” அந்த வரலாறு பற்றி நான் சொல்கிறேன் என்று அல்லாஹ் சொல்கின்றான். ஆனால், குகையில் பதுங்கியவர்கள் பற்றி மக்கள் கேட்டார்கள் என்ற விவரம் குர்-ஆனில் இல்லை. 

குர்-ஆனின் இந்த குழப்பத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?

இஸ்லாமிய நூல்களில் சொல்லப்பட்டது போல 18ம் அத்தியாயத்தின் பின்னணியோடு, குர்-ஆனில் இந்த அத்தியாயம் பதிக்கப்பட்ட விதம் முரண்படுகின்றது.  மேலும், ஒரு பதில் 17ம் அத்தியாயத்திற்கு சென்றுவிட்டுள்ளது. இது எப்படி நடந்தது?

  1. மூன்று சின்ன கேள்விகளுக்கு பதில்களை அல்லாஹ் ஒரே நேரத்தில் கொடுத்த போது, அதனை வரிசையாக முஹம்மது சொல்லவில்லையா?
  2. ஒருவேளை, குர்-ஆனை தொகுத்தவர்கள் அவைகளை மாற்றி பதித்துவிட்டார்களா?
  3. ஒவ்வொரு ஆண்டும், குர்-ஆனை ஜிப்ராயீல் தூதன் சரிபார்ப்பான் என்று சொல்லப்படுகின்றது, அந்த நேரத்திலாவது முஹம்மது இதனை சரி செய்து இருக்கலாம். (இது சாத்தியமில்லை, ஜிப்ராயீல் தூதன் சரி பார்த்த குர்-ஆன் முஹம்மதுவின் மனதில் மனப்பாடம் செய்யப்பட்டவைகளை மட்டுமே. ஜிப்ராயீல் சென்ற பிறகு, தன் தொழர்களிடம் இருக்கும் எலும்புத்துண்டுகள், இலைகள், தோல்கள் போன்றவற்றில் எழுதப்பட்ட குர்-ஆன் வசனங்களை கொண்டுவரச்சொல்லி முழுவதுமாக முஹம்மது சரி பார்த்ததாக, எனக்கு தெரிந்தவரை ஹதீஸ்கள் இல்லை. இதனை முஹம்மது ஒவ்வொரு ஆண்டும் செய்திருக்கவேண்டும். இப்படி செய்யாத பட்சத்தில், ஜிப்ராயீல் ஒவ்வொரு ஆண்டும் சரி பார்த்த குர்-ஆனினால் என்ன பயன்?).
  4. முஹம்மதுவிடம் குறைஷிகள் கேள்விகள் கேட்ட நிகழ்ச்சியை அனைத்து தோழர்களும் அறிந்திருந்தால், ஒருவருக்காவது தங்கள் சொந்த பிரதிகளை படிக்கும் போது, சந்தேகம் வந்திருக்கும்? ஏன் வரிசை மாறுகின்றது என்ற கேள்வி எழும்பியிருந்திருக்கும்? ஆனால், கடைசி வரை ஒருவருக்கும், இந்த எண்ணம் வரவே (பல்பு எரியவே) இல்லை, நம்மிடம் உள்ள குர்-ஆன் தான் இதற்கு சாட்சி. 
  5. அப்படியானால், நமக்கு என்ன சந்தேகம் வருகிறது? இக்கேள்விகள் ஒரே நேரத்தில் அல்லாமல் வெவ்வேறு வேளைகளில் (பல நாட்கள் இடைவேளையில்) முஹம்மதுவிடம் கேட்கப்பட்டுள்ளது, மேலும், இதைப் பற்றிச் சொல்லப்படும் பின்னணி (குறைஷிகள், யூத ரபிகளிடம் சென்று வந்தது) என்பது பொய் என்று அறிகிறோம்.
  6. முதலாவது முறை, இரண்டாவது முறை கலிஃபாக்கள் குர்-ஆனை தொகுக்கும் போது கூட அவர்கள் இதனை சரி செய்யவில்லை, இதன் மூலம் அறிவதென்ன? அவர்கள் அனைவருக்கும் ஞாபக மறதி ஒரே நேரத்தில் வந்திருக்கிறது என்பதாகும் (இதுவும் அல்லாஹ்வின் அற்புதங்களில் ஒன்று என்று முஸ்லிம்கள் சொன்னாலும் சொல்லக்கூடும்). தங்கள் இறைத்தூதர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியை மறக்கமுடியுமா? அதுவும், நபித்துவத்துக்கு எதிராக கேள்விகள் கேட்டபோது, 15 நாட்கள் கழித்து பதில் வந்த போது, எவ்வளவு மன உலைச்சளில் முஹம்மது இருந்திருப்பார்? இதனையா எல்லா தோழர்களும் மறந்துவிட்டார்கள்?

வசனங்கள் ஒரே வரிசையில் இருக்கவேண்டுமென்று அவசியம் இருக்கின்றதா?

ஒரு நிகழ்ச்சி பற்றிய வேத வசனங்கள் வெவ்வேறு அத்தியாயங்களில், வெவ்வேறு வரிசையில் இருப்பது பெரிய தவறா? என்ற கேள்வியை சிலர் என்னிடம் கேட்கலாம். உண்மையில் இது பெரிய தவறல்ல! என்னுடைய கேள்வி என்னவென்றால் “ஒரு சிறிய விவரம், அதுவும் பெரிய பாதிப்பை உண்டாக்கிய முக்கிய நிகழ்ச்சி பற்றி இறக்கப்பட்ட வசனங்கள் ஏன் இப்படி தாறுமாறாக பதிவு செய்யப்பட்டுள்ளது? என்பது தான். ஒரு சின்ன விஷயத்தில் இவ்வளவு பெரிய அலட்சியம் ஏன்? இந்த அலட்சியத்திற்கு யார் காரணம்? அல்லாஹ்வா? முஹம்மதுவா? அல்லது நபித்தோழர்களா? முஹம்மதுவும், அவரது தோழர்கள் அனைவரும், குர்-ஆனின் வசனங்கள் பற்றி இவ்வளவு அக்கரையற்று இருந்திருக்கிறார்கள் என்று நாம் எண்ணலாமா? மூன்று கேள்விகள், மூன்று பதில்கள் ஆனால் அவைகள் இரண்டு அத்தியாயங்களில் தெரிக்கப்பட்டுள்ளது.  ஒரு சிறிய, ஆனால் முக்கியமான நிகழ்ச்சியை கோர்வையாக குர்-ஆனில் தொகுக்க தெரியாத போது, பெரிய விஷயங்களின் நம்பகத்தன்மை எத்தகையது என்பதை புரிந்துக் கொள்ளலாம்.

முடிவுரை:

இந்த மூன்று பதில்கள் ஒரே வரிசையில் காணமுடிவதில்லை. சம்மந்தமே இல்லாமல், ஒரு கேள்விக்கான  பதில் 17ம் அத்தியாயத்தில் உள்ளது, மீதமுள்ள இரண்டு கேள்விகள் ஒன்று கன்னியாகுமாரியிலும்,  இன்னொன்று காஷ்மீரிலும் உள்ளது.  இவ்வரண்டிற்கும் இடையே வேறு இரண்டு உவமைகள் / நிகழ்ச்சிகள் சொல்லப்பட்டுள்ளது. இப்படி இருந்தால் குர்-ஆன் எப்படி மக்களுக்கு புரியும்?

பாரா அவர்களே, நீங்கள் நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தின்  15/16 அத்தியாயங்களை எழுதுவதற்கு முன்பு, ‘அந்த மூன்று வினாக்களின்’ பதில்கள் குர்-ஆனில் எங்கு இருந்தது என்பதை தேடிப்பார்த்தீர்களா?