2020 ரமளான் - சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000 – 'கிறிஸ்தவம்' பாகம் 6

முந்தைய கட்டுரைகளின் தொடுப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

இந்த ஆறாவது தொடரில் 'கிறிஸ்தவம்' என்ற தலைப்பில் 30 கேள்வி பதில்களைக் கண்போம்.  இதுவரை பார்த்த தலைப்புகள், புத்தகங்கள் பற்றியது, நம்மோடு இப்போது வாழாதவர்கள் பற்றியது, ஆனால் இந்த கட்டுரையில் கேள்வி பதில்கள் நம்மைப் பற்றியது, அதாவது கிறிஸ்தவர்கள் பற்றியதாகும்.

பாகம் 6  - 'கிறிஸ்தவம்' கேள்விகள் பதில்கள் 151 - 180 வரை

கேள்வி 151: "கிறிஸ்தவம்" - ஒரு வரியில் விளக்கமுடியுமா?

பதில் 151: உலகில் உள்ள எந்த மதத்தையும் ஒருவரியில் விளக்கமுடியாது, அப்படி விளக்குபவர்கள் அதன் ஒரு பகுதியைத் தான் விளக்குகிறார்கள் என்று பொருள்.

கிறிஸ்தவம் என்றுச் சொன்னால், அது மூன்று வகையாக பார்க்கப்படுகின்றது என்று நான் நினைக்கிறேன்.

 1. பைபிள் காட்டும் கிறிஸ்தவம்
 2. கிறிஸ்தவர்கள் காட்டுகின்ற‌ கிறிஸ்தவம்
 3. ஊடகங்கள் காட்டும் கிறிஸ்தவம்

பைபிள் காட்டும் கிறிஸ்தவம்: 

இயேசு தம்மை எப்படி பின்பற்றவேண்டுமென்றுச் சொன்னார்? தம்மை எப்படி தொழுதுக்கொள்ள வேண்டுமென்றுச் சொன்னார்? முக்கியமாக புதிய ஏற்பாடு என்ன சொல்கிறது? போன்ற கேள்விகளுக்கான பதில் தான் பைபிள் சொல்லும் கிறிஸ்தவம்.

கிறிஸ்தவர்கள் காட்டுகின்ற‌ கிறிஸ்தவம்: 

பைபிளில் சொல்லப்பட்ட கிறிஸ்தவமும், கிறிஸ்தவர்களை பார்க்கும் போது அவர்கள் மூலமாக வெளிப்படும் கிறிஸ்தவமும் ஒன்றில்லையா? என்று கேட்க வேண்டாம். ஏனென்றால், பைபிள் என்பது பல நூறு சட்டங்கள், மத சடங்குகள் அடங்கிய புத்தகமில்லை. இதோ, நீ கிறிஸ்தவனாக வாழவேண்டுமென்றால் "இந்த சட்டங்களுக்கு  கீழ்படி அது போதும்" என்று பைபிள் சொல்வதில்லை. கிறிஸ்தவனாக வாழ்வது  என்பது, கண்மூடிக்கொண்டு மந்திரங்களைச் சொல்லி, அனைத்து மத சடங்குகளை இயந்திரங்களைப் போல செய்யும்  வாழ்க்கையுமல்ல. ஒரு உண்மையான கிறிஸ்தவனை அவனது உடை அளங்காரத்தை பார்த்து கண்டுபிடிக்கமுடியாது. பைபிள் நாகரீகமான உடையை அணியச்சொல்கிறது, வெளிப்புற மாற்றம் தேவையற்றது. 

கிறிஸ்தவம் என்பது நாம் இயேசுவோடு கொண்ட உறவு முறைக்கும், அன்புக்கும் பெயர் தான் கிறிஸ்தவம். அவர் மீது கொண்டுள்ள அன்பை, மற்றவர்கள் மீது காட்டி மகிழ்ச்சி அடையும் ஒரு நிலை தான் கிறிஸ்தவம். உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்பு செலுத்து, உன் சக மனிதனிடத்தில் அன்பு செலுத்து, கிறிஸ்தவம் பற்றி இது தான் இயேசுவின் இரத்தினச் சுருக்கம். அன்பு என்பது 24 மணி நேரமும் மற்றவர்கள் பார்க்கும்படி காட்டிக்கொண்டு இருக்கமுடியாது. சிக்கல் இங்கே தான் இருக்கிறது. 

நாம் நம் தகப்பனோடு, தாயோடு கொண்டுள்ள அன்பு, மற்றும் உறவு முறையை மற்றவர்கள் முன்பு எந்நேரமும் காட்டிக்கொண்டு இருப்போமா என்ன?  இல்லையல்லவா! ஆகையால், கிறிஸ்தவர்களின் வாழ்க்கை மூலமாக சில நேரங்கள் கிறிஸ்தவம் வெளிப்படும், சில நேரங்களில் வெளிப்படாது. கிறிஸ்தவரல்லாதவரால் இந்த நிலையை புரிந்துக் கொள்வது கடினமே!

ஊடகங்கள் காட்டும் கிறிஸ்தவம்:

ஊடகங்கள் பரப்பும் செய்திகளைப் பார்த்து மற்றும் ஹாலிவுட் படங்களைப் பார்த்து இது தான் கிறிஸ்தவம் என்று மக்கள் தவறாக எண்ணுவதும் உண்டு. சிலவேளைகளில் சில கிறிஸ்தவர்களின் செயல்கள் பைபிளுக்கு எதிராக இருந்தாலும், அதையும் கிறிஸ்தவம் தான் செய்தது என்று ஊடகங்கள் சொல்லிவிடும். 

சரி, இதுவரை சொன்ன விவரங்களிலிருந்து, கிறிஸ்தவம் பற்றி ஏதாவது புரிந்ததா? புரியவில்லையென்றால் புதிய ஏற்பாட்டிலுள்ள ஒரே ஒரு நற்செய்தி நூலை (மத்தேயு/மாற்கு/லூக்கா/யோவான்) படித்துப் பாருங்கள், கிறிஸ்தவத்தின் அஸ்திபாரம் தெளிவாக புரிந்துவிடும். 

புதிய ஏற்பாட்டை நாம் படிக்காமல், கிறிஸ்தவம் பற்றி மற்றவர்கள் சொல்லும் விவரங்களை எத்தனை நூறு பக்கங்கள் படித்தாலும், அது குறைவு தான்.

கேள்வி 152: கிறிஸ்தவம் மேற்கத்திய மார்க்கம் (வெள்ளைக்காரனின் மதம்) என்றுச் சொல்வது சரியா?

பதில் 152: மனிதன் தேவ சாயலில் படைக்கப்பட்டான் என்று பைபிள் சொல்கிறது (ஆதியாகமம் 1:27). ஆதாம் தான் முதல் மனிதன். இந்திய வேதங்கள் சொல்லும் மனித படைப்பு கோட்பாட்டை ஆணிவேரோடு தகர்த்தெறியும் சாட்டையடி இது.

ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் யூதர்களாகவும், ஆசியா கண்டத்தில் உள்ள மத்திய கிழக்கு பகுதியில் வாழ்ந்தவர்களாகவும் இருந்தார்கள். மத்திய கிழக்கு பகுதியில் வாழ்ந்தவர்கள் வெள்ளையர்கள் அல்ல. இயேசுவும் நம்மைப்போன்றவர் தான், இயேசு வெள்ளைத்துரையல்ல‌. ஐரோப்பாவும், அமெரிக்காவும் கிறிஸ்தவம் தொடங்கிய இடத்தில் இல்லவே இல்லை. இயேசு உலக மக்கள் அனைவருக்குமான இரட்சகராக இருக்கிறார் (1 யோவான் 2:2).

கிறிஸ்தவம் வெள்ளையர்களின் மார்க்கமல்ல என்பதை இயேசுவின் சீடர்கள் மூலமாகவே நிருபிக்கப்பட்டுவிட்டது. ஆஃப்ரிக்கா கண்டத்தில் உள்ள எத்தியோப்பியா நாட்டிலிருந்து வந்த ஒரு அரசு அதிகாரிக்கு நற்செய்தியை இயேசுவின் சீடர் பிலிப்பு அறிவித்தார். அவர் இயேசுவை ஏற்றுக்கொண்டு, ஆஃப்ரிக்காவிற்குச் சென்று, இயேசுவை ஆஃப்ரிக்காவில் அறிவித்தார். ஆசியாவிற்கு வெளியே ஆஃப்ரிக்காவிற்கு தான் சுவிசேஷம் இயேசுவின் சீடர்களால் முதலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்போஸ்தலர்  8:27. 

அந்தப்படி அவன் எழுந்து போனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து;

மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடுத்தபடியாக, இயேசுவின் நற்செய்தி ஆஃப்ரிக்காவிற்குச் சென்றது, ஐரோப்பாவிற்கோ, அமெரிக்காவிற்கோ அல்ல(அப்போது அமெரிக்காவே இல்லை). அதன் பிறகு இயேசுவின் நற்செய்தி ஆசியாவின்  இதர நாடுகளுக்குச் சென்றது.

ஆரம்ப கால சபை தலைவர்களான அகஸ்டின்(Augustine), அதனசியஸ்(Athanasius), மற்றும் தெர்துல்லியன்(Tertullian) இவர்கள் அனைவரும் வட ஆப்ரிக்காவில் ஊழியம் செய்தவர்கள். மேலும் இரேனியஸ்(Irenaeus), இக்னாடியஸ்(Ignatius) போன்றவர்களோடு கூட முதல் மூன்று நூற்றாண்டுகளில் கிறிஸ்தவம் ஆசியாவில் வேரூண்றியது. முஸ்லிம்களின் படையெப்பு வரைக்கும எத்தியோப்பியாவும், லிபியா, எகிப்து மற்றும் மேற்கு ஆசியா அனைத்தும் பலமான கிறிஸ்தவ நாடுகளாக இருந்தன.  

இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், கிறிஸ்தவம் ஆசியா மற்றும் ஆஃப்ரிக்காவில் தான் ஆரம்பத்தில் பரவியது. கிறிஸ்தவம் வெள்ளையனின் மார்க்கமல்ல, இது உலகை ஒரு மனிதனிலிருந்த படைத்த தெய்வத்தின் வழிகாட்டுதல் ஆகும்.

இது தான் கிறிஸ்தவத்தின் சத்தியம்:

அப்போஸ்தலர்  10:34-5. 

அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.

மேலும் அறிய இந்த‌ ஆங்கில கட்டுரையை படிக்கவும்: Is Christianity a white man’s religion?

கேள்வி 153: கிறிஸ்தவர்கள் பாவம் செய்து பாதிரியார்களிடம் மன்னிப்பு கேட்டு, மறுபடியும் பாவம் செய்கிறார்களே, இது சரியா?

பதில் 153: பைபிளில் எங்கும் இப்படி செய்யுங்கள் என்று சொல்லப்படவில்லை, இயேசுவும், அவரது சீடர்களும் இதனை போதிக்கவில்லை. 

இது மனிதர்களின் பாரம்பரியங்கள். இதற்கும் பைபிளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ரோமன் கத்தோலிக்க சபையில் இப்படி செய்யப்படுகின்றது, ஆனால் இது பைபிளின் போதனை அல்ல மாறாக‌ பைபிளுக்கு  எதிரான செயலாகும்.

பைபிளின் படி நம் பாவங்களை தேவனிடம் தான் அறிக்கையிடவேண்டும், மனிதர்களிடம் அல்ல.

1 யோவான் 1:9:

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

யாக்கோபு 5:16ன் பாடி, நாம் ஒருவருக்கு ஒருவர் நம் குற்றங்களை அறிக்கைவிடவேண்டும், அதாவது நான் என் சகோதரனுக்கு தீமை செய்தால் அவனிடம் சென்று மன்னிப்பு கேட்கவேண்டும்.  மேலும் இந்த வசனம் நாம் சுகமடைவதற்கு முன்பு, நாம் யாருக்காவது எதிராக நடந்திருந்தால், அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, அதன் பிறகு கர்த்தரிடம் ஜெபிக்கவேண்டும் என்றுச் சொல்கிறது. இது பாதிரியார்களிடம் நம் பாவங்களை அறிக்கையிடச் சொல்லவில்லை? சகோதரனுக்கு தீமை செய்துவிட்டு, பாதிரியாரிடம் சென்று அறிக்கையிட்டால் என்ன பயன்?

யாக்கோபு 5:16

நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

உன் சகோதரனோடு உனக்கு குறை உண்டானால், அவனோடு முதலில் ஒப்புறவாகு, அதன் பிறகு உன் காணிக்கியை செய்லுத்து, இது இயேசு கற்றுக்கொடுத்தது.  பாதிரியாரிடம் வந்து மன்னிப்பு கேள் என்று இயேசு சொல்லவில்லை.

மத்தேயு 5:23,24

23. ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், 24. அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.

கேள்வி 154: ரோமன் கத்தோலிக்க பெண்கள் பொட்டு வைக்கிறார்கள், மற்றவர்கள் வைப்பதில்லை, இது எதனால்?

பதில் 154: கத்தோலிக்கர்கள் இந்திய கலாச்சாரத்தில் உள்ள சில பழக்கங்களை பின்பற்றுகிறார்களே தவிர, இது பைபிளின் போதனை அல்ல.

கேள்வி 155: கிறிஸ்தவர்கள் எத்தனை பண்டிகைகளை கொண்டாடும் படி பைபிள் சொல்கிறது?

பதில் 155: பூஜ்ஜியம் (இப்படியும் ஒரு மார்க்கம் இருக்குமா?)

பழைய ஏற்பாட்டில் தேவன் யூதர்களுக்கு சில பண்டிகைகளை கொண்டாடும் படி கட்டளையிட்டார். தேவன் தங்களை எப்படி இரட்சித்தார், எப்படியெல்லாம் எதிரிகளிடமிருந்து காத்தார் போன்றவற்றை மறக்கக்கூடாது என்பதற்காக பண்டிகைகளை நியமித்தார்.

புதிய ஏற்பாட்டில் இப்படியெல்லாம் பண்டிகையாக கொண்டாடும் ஒரு கட்டளையும் இல்லை.

இயேசு தம்முடைய சிலுவை மரணத்தை நினைவு கூறும்படி கூறினார்.

இது பண்டிகையல்ல, இது ஒரு நினைவு கூறுதல், அதாவது இயேசுவின் சரீரத்திற்கு அடையாளமாக ஒரு ரொட்டித்துண்டு, அவரது இரத்தம் சிந்துதலுக்கு அடையாளமாக, சிறிது திராட்சை ரசத்தை உண்டு அவரது மரணத்தை நினைவு கூறுங்கள் என்றார்.

கேள்வி 156: அப்படியானால், ஏன் கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ்ஸையும், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டரை கொண்டாடுகிறார்கள்?

பதில் 156: கிறிஸ்தவத்தில் உள்ள ஒரு சிறப்பான கோட்பாடு என்ன தெரியுமா? இயேசு நம்மை “நாட்கள், கிழமைகள், மாதபிறப்புக்கள், வருட பிறப்புக்கள், பௌர்ணமி, அமாவாசை, ராகு காலம், எமகண்டம், நல்ல காலம், கெட்ட காலம்” போன்ற அனைத்து காரியங்களிலிருந்தும் விடுதலை செய்ததுதான். 

யோவான் 8:32. சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

கிறிஸ்தவர்கள் விரும்பினால் எந்த ஒரு நாளையும் சிறப்பான நாளாக கருதி, அந்த நாளில் கொண்டாடலாம், குடும்ப நபர்களின் பிறந்தநாட்கள், திருமண நாட்கள் என்று எதை வேண்டுமானாலும் நாம் நம் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக கொண்டாடலாம்.

ரோமர் 14:6 நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான்.

பைபிள் சொல்லவில்லையென்றாலும் இயேசுவின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம். இயேசுவின் சிலுவை மரணத்தை தியானிக்க சில நாட்களை ஒதுக்கி, புனித வெள்ளியை ஆசரிக்கிறோம். இயேசுவின் உயிர்த்தெழுதல் நாளை நினைவு கூர்ந்து குடும்பமாக, சபையாக சந்தோஷமாக கொண்டாடுகிறோம்.

கிறிஸ்தவர்கள் விடுதலையானவர்கள் எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைச் செய்ய அவர்களுக்கும் உரிமையும் அதிகாரமும் உண்டு. இந்த உரிமையையும் பைபிளே நமக்கு கொடுத்துள்ளது.

கேள்வி 157: முஸ்லிமாகிய நான், திடீரென்று ஒரு ஞாயிறு ஆராதனையில் பங்கு பெற வந்தால் அனுமதிப்பீர்களா?

பதில் 157: தாராளமாக நீங்கள் ஞாயிறு ஆராதனைகளில் பங்கு பெறலாம். நீங்கள் மசூதிகளில் செய்வது போன்று உளூ (கை கால்களை கழுவுதல்) போன்றவைகளைச் செய்யத் தேவையில்லை. 

கிறிஸ்தவ திருச்சபையின் ஆராதனையில் பங்கு பெற விரும்புகிற முஸ்லிம்களுக்கு சில ஆலோசனைகள்:

ஆலோசனை 1: 

சபையில் சில நேரங்களில் எழுந்து நின்று துதிப்பார்கள், ஜெபிப்பார்கள். அதனை நீங்கள் விரும்பவில்லையென்றால் நீங்கள் செய்யவேண்டியதில்லை, அதனால் கடைசியில் உட்கார்ந்துக்கொண்டால் இந்த சிறிய சங்கடமும் உங்களுக்கு இருக்காது.

ஆலோசனை 2: 

இந்த ஆலோசனையை தவறாக‌ நினைக்க வேண்டாம். இலங்கையில் 2019ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையின் போது, முஸ்லிம் தீவிரவாதிகள் திருச்சபைகளைத் தாக்கினார்கள், மேலும் இதர நாடுகளில் நடந்துமுடிந்த சில தீவிரவாதிகளின் செய்திகளை சபை மக்கள் கேள்விப்பட்டு இருப்பதினால்.  ஒரு சபையில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று அனைத்து நிலை மக்கள் இருப்பதினால், ஒரு முஸ்லிம் திடீரென்று சபைக்குள் நுழைந்தால், சில சபை விசுவாசிகள் பயந்துப்போய் வேறு வகையாக நடந்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. 

எனவே, ஒரு சபைக்குள் செல்வதற்கு முன்பு, அந்த சபையின் போதகரையோ, நிர்வாகிகளையோ அழைத்து சபை தொடங்குவதற்கு முன்பு பேசிவிட்டு, அதன் பிறகு அவர்களின் துணையோடு சென்றால் நன்றாக இருக்கும். இதை எழுதுவதற்கு எனக்கு வேதனையாகத் தான் உள்ளது, ஆனால் என்ன செய்வது, ஒரு சில முஸ்லிம் தீவிரவாதிகள் செய்யும் செயல்களினால் எல்லோருக்கும் கெட்டப்பெயர் வந்துவிட்டது. இதற்காக நாம் விசுவாசிகளை குற்றப்படுத்தமுடியாது என்பது தான் தாழ்வான வேண்டுகோள்.

நான் ஒரு முஸ்லிம் என்று சபைக்கு எப்படித்தெரியும்:

முஸ்லிம்களுக்கு என்று தனிப்பட்ட உடைகளுண்டு, முகத்தில் தாடி வைக்கும், மீசை எடுக்கும் முறை கூட நீங்கள் ஒரு முஸ்லிம் என்று மற்றவர்களுக்கு காட்டிவிடும். இதர மக்களைப்போன்று உடை அணிந்தால் யாருக்கும் தெரியவராது. ஆனால், இஸ்லாமிய உடை அணிவதினால் இந்த பிரச்சனையை தவிர்க்க முடியாது.

மேலும் முஸ்லிம் பெண்கள் என்றால், ஒருவேளை அவர்கள் புர்கா அணிந்து இருந்தால், வருகிறவர் முஸ்லிம் பெண் என்று தெளிவாக எல்லோருக்கும் புரிந்துவிடும்.

ஆலோசனை 3:

சபை முடிந்த பிறகு ஆண்களும் பெண்களும், உங்களிடம் வந்து உங்களை விசாரிக்கலாம், கைகுளுக்கலாம். இதனை நீங்கள் தவறாக நினைக்கவேண்டாம். இது என்ன, ஒரு பெண் எப்படி ஒரு ஆணிடம் வந்து கைகுளுக்குகிறாள்? என்று எண்ணவேண்டாம், மனதில் கறையில்லையென்றால், கைகுளுக்குவதில் தவறில்லை. மனதில் கறையிருந்தால், பத்து அடிக்கு தூரமாக பெண் இருந்தாலும், பிரச்சனைத் தான்.

கேள்வி 158: முஸ்லிமாகிய எனக்கு, கர்த்தருடைய பந்தியில் (இரா போஜனம் ரொட்டி, திரட்சை ரசம்) பங்கு பெற அனுமதிப்பீர்களா?

பதில் 158: எல்லோரும் சபைக்கு வந்து அமரலாம், ஆராதனையில் பங்கு பெறலாம். ஆனால், ஞானஸ்நானம் எடுத்தவர்களுக்கு மட்டும் தான் 'ரொட்டியும், திராட்சை ரசமும்' கொடுக்கப்படும். 

'சரி, நான் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்கிறேன், எனக்கு ரொட்டித்துண்டும், திராட்சை ரசமும் கொடுப்பீர்களா'? என்று கேட்டீர்களானால், இதுவும் முடியாது ஏனென்றால், ஞானம்ஸ்நானம் எடுக்கும் போது, உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்படும், நீங்கள் அதற்கு உண்மையான பதில்களைக் கொடுக்கவேண்டும்.

கேள்விகள்:

 • நீங்கள் இயேசுக் கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறீர்களா?
 • இயேசுக் கிறிஸ்து உங்களுக்காக இரத்தம் சிந்தி, சிலுவையில் மரித்து மறுபடியும் உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கிறீர்களா?
 • இயேசுக் கிறிஸ்து தேவனுடைய வார்த்தையாகவும், இறைவனாகவும் இருக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா?
 • தொடர்ந்து பைபிள் படித்து, ஜெபம் செய்து, திருச்சபையின் அங்கத்தினராக மாறி, சபையின் ஐக்கியத்தில் நிலைத்திருப்பீர்களா?
 • இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொண்ட இந்த முடிவை மற்றவர்களின் கட்டாயத்தின் பெயரில் அல்லாமல், சுயமாக நீங்கள் எடுத்துள்ளீர்களா?

போன்ற சில கேள்விகளுக்கு பதில் கொடுத்து, இயேசுவை இறைவனென்று விசுவாசித்து, தேவாலயத்திற்கு தொடர்ந்து வருவேன் என்று வாக்கு கொடுக்கிறவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்படும். இப்படிப்பட்டவர்களுக்கு மட்டும் தான் ரொட்டியும், திராட்சை ரசமும் கொடுக்கப்படும்.

முஸ்லிம் நண்பரே, மேற்கண்ட கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன?

உங்களுடைய பதிலைப்பொருத்து தான் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்படும், மேலும் ரொட்டியும் திராட்சை ரசமும் கொடுக்கப்படும்.

இது ஒரு சாதாரண விஷயமல்ல. ரொட்டித்துண்டு, இயேசுவின் சரீரத்துக்கு அடையாளமாக உள்ளது, திராட்சை ரசம் அவர் சிந்திய இரத்தத்திற்கு அடையாளமாக உள்ளது. இந்த இரண்டையும் நீங்கள் உண்டால், இயேசுவின் சரீரமும், இரத்தமும் உங்கள் சரீரத்திற்குள் செல்வதினால், நாமும் அவரைப்போலவே வாழ முயற்சி எடுக்கவேண்டும், இதற்கு பரிசுத்த ஆவியானவர் உதவி புரிவார். இது தான் கிறிஸ்தவர்கள் சபையில் மாதம் ஒருமுறை பின்பற்றுகின்ற "ரொட்டி, திராட்சை ரசம்" பற்றிய சத்தியமாகும்.

இதனை அலட்சியமாக செய்தால், தேவனின் கோபத்துக்கு ஆளாகி, பல துன்பங்களுக்கு ஆளாகவேண்டி வரும் என்றும் பைபிள் எச்சரிக்கிறது.

பார்க்க வசனங்கள்: 1 கொரிந்தியர் 11: 23-31

கேள்வி 159: திருச்சபையில் சிலுவையில் இயேசு தொங்குவது போன்று சிலை வைப்பது சரியா?

பதில் 159: விக்கிரகங்கள், சிலைகள் முக்கியமாக‌ தெய்வ உருவ சிலைகள் பற்றியவைகள் திருச்சபையில் இருக்கக்கூடாது என்பது பைபிளின் கட்டளையாகும்.

தேவனின் 10 கட்டளைகள் மிகவும் தெளிவாக எச்சரித்துள்ளது.

யாத்திராகமம் 20:3-4 

3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;

ஆனால், கத்தோலிக்க திருச்சபை மக்களுக்கு தவறான போதனை செய்துள்ளது. திருச்சபையில் சிலைகள், உருவப்படங்கள் நம்முடைய  ஆராதனைக்கு உதவும் என்று அவர்கள் எண்ணியிருக்கிறார்கள், ஆனால் அது பைபிளுக்கு எதிரான போதனையாகும்.

திருச்சபையில் சிலைவகள்/படங்கள் வைப்பது ஆராதனைக்கு உதவி செய்யாது அதற்கு பதிலாக அவைகள் இடறல்களாக இருக்கும்:

அ) தேவனை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பதை அது தடுத்துவிடுகிறது. சிலைகளைப் பார்த்து, அல்லது படங்களைப் பார்த்து ஆராதிப்பது ஆவியோடும் உணமையோடும் ஆராதிப்பதாக அமையாது (பார்க்க: யோவான் 4:23,24).

ஆ) தேவன் எப்படி இருக்கிறார் என்று இதுவரை யாரும் கண்டதில்லை, அவருக்கு எப்படி நாம் உருவத்தை கொடுக்கமுடியும்? மேலும் இயேசுவிற்கும் எப்படி உருவம் கொடுக்கமுடியும்? (பார்க்க யோவான் 1:18). ஆவியாக இருக்கும் தேவனுக்கு உருவத்தை எப்படி கொடுக்கமுடியும்? 

காலங்காலமாக, கத்தோலிக்க திருச்சபைகளில், தொண்டு நிறுவனங்களில், ஸ்தாபனங்களில் பிதா, குமாரன், பரித்த ஆவியானவர், மரியாள், யோசேப்பு, தேவதூதர்கள் என்று அவர்களுக்கு தெரிந்த எல்லோருக்கும் சிலைகளையும், ஓவியங்களை வைத்திருக்கிறார்கள். இது பைபிளுக்கு எதிரானது என்று தெரிந்தும் அவர்கள் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கத்தோலிக்கர்களிடம் இதனை கேட்போமானால், "நாங்கள் சிலைகளை வணங்க வில்லை, ஒரு மரியாதையின் காரணமாக, அவைகளை கனப்படுத்துகிறோம்" என்றுச் சொல்லுவார்கள். சிலைகளுக்கு ஓவியங்களுக்கு மரியாதை செலுத்தி, கனப்படுத்தினாலும் அது தவறு தானே! அது விக்கிர ஆராதனையின் ஒரு பகுதி தானே!

முஸ்லிம்களுக்காக: 

நீங்கள் கத்தோலிக்க சபையில் காணும் சிலைகளை கவனத்தில் வைத்துக்கொண்டு, கிறிஸ்தவத்தை எடை போடாதீர்கள். பைபிளில் சொல்லப்பட்டதற்கு எதிராக யாராவது நடந்துக்கொண்டால் அதற்கு கிறிஸ்தவத்தை குற்றப்படுத்தமுடியாது.

கேள்வி 160: ஒருவர் கிறிஸ்துவை பின்பற்ற விரும்பினால், ஏன் அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறீர்கள்?

பதில் 160: ஞானஸ்நானம் என்பது, இறைவன் பற்றிய “ஞானம்” வந்த பிறகு எடுக்கப்படும் “ஸ்நானம்”  சத்தியத்தையும் அறிவீர்கள், அந்த சத்தியமே உங்களை விடுதலையாக்கும் என்பது தான் இயேசுவின் கூற்று..

நாம் பழைய வாழ்க்கையை விட்டு புதிய வாழ்க்கையை வாழ தெரிவு செய்தோம் என்று காட்டக்கூடிய ஒரு அடையாளம் ஆகும். நம்முடைய பழைய வாழ்க்கையை தண்ணீருக்குள் விட்டுவிட்டு, சரீர அழுக்குகளை கழுவுவது போன்று மன அழுக்குகளை கழுவிவிட்டு, ஒரு புதிய மனிதனாக மாறுவதைத் தான் இது காட்டுகின்றது. 

ஞானஸ்நானம் ஒரு மத சடங்கு அல்ல, இது மனமாற்றத்தின் அடையாளம்.

II கொரிந்தியர் 5:17

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.

பொது மொழிப்பெயர்ப்பு

17 எவராவது கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவன் புதிதாகப் படைக்கப்பட்டவனாகிறான். பழையவை மறைந்தன. அனைத்தும் புதியவை ஆயின.

எடுத்துக்காட்டுகாகச் சொல்வதென்றால், திருமணத்தின் போது, சிலர் தாலி கட்டுகிறார்கள், சிலர் மோதிரம் மாற்றுகிறார்கள், உடன்படிக்கைச் செய்கிறார்கள், அதாவது திருமணம் புரிகின்ற தம்பதிகள் ஒரு புதிய உறவு முறைக்குள் நுழைவதினால், அடையாளமாக திருமண நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 

இது போலவே, ஞானஸ்நானம் என்பது ஒரு மனிதன் ஒரு புதிய குடும்பத்துடன் இணைகிறான்,  தேவனுடைய பிள்ளையாக மாறுகின்றான், பழையவைகளை விட்டுவிட்டு (தண்ணீருக்குள்), புதியவைகளை தரித்துக்கொள்கின்றான். இதனை அடையாளப்படுத்துவதற்கு ஞானஸ்நானம் கொடுக்கப்படுகின்றது.

ஞானஸ்நானம் (திருமுழுக்கு) பற்றி இன்னும் அனேக சத்தியங்கள் பைபிளில் சொல்லப்பட்டுள்ளது, அவைகளை நீங்கள் தனியாக படித்துக்கொள்ளலாம் அல்லது ஒரு போதகரிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.

அல்லாஹ் கொடுக்கும் ஞானஸ்நானம்:

குர்‍ஆனிலும் ஞானஸ்நானம் பற்றி ஒரு வசனம் உள்ளது என்பதை அறிவீர்களா?

ஸூரா 2:138

2:138. “(இதுவே) அல்லாஹ்வின் ர்ம்(ஞான ஸ்னானம்) ஆகும்; வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார்? அவனையே நாங்கள் வணங்குகிறோம்” (எனக் கூறுவீர்களாக).

சுருக்கமாக ஒருவரியில் சொல்வதென்றால், ஒருவர் ஒரு பெரிய முடிவு எடுக்கும் போது, அந்த முடிவின் அடையாளமாக ஞானஸ்நானம் கொடுக்கப்படுகின்றது.

கேள்வி 161: முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பெயரில் அறுத்த (ஹலால்) கறியை கிறிஸ்தவர்கள் உண்ணலாமா?

பதில் 161: இந்த கேள்வியை கேட்பவர் ஒரு கிறிஸ்தவர் என்று நினைக்கிறேன்! இந்த கேள்வியை கேட்பதற்கு முன்பு, உங்கள் மனதைத் தொட்டு உண்மையைச் சொல்லுங்கள், “இதுவரை நீங்கள் முஸ்லிம்களின் கசாப்பு கடையில் ஒருமுறையும் மாமிசம் வாங்கவில்லையா?”.

இயேசுவின் கூற்றுப்படி, வாயிக்குள் போவது மனிதனை குற்றப்படுத்தாது, வாயிலிருந்து (மனதிலிருந்து) வெளியே வருவது தான் அவனை குற்றப்படுத்தும். எனவே உணவு பற்றி எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் நீங்கள் சாப்பிடலாம்.

இதைப் பற்றி மேலும் ஆழமாக அறிய கீழ்கண்ட மூன்று கட்டுரைகளை படிக்கவும்:

கேள்வி 162: மற்ற மதங்கள் தங்கள் மதங்களை பரப்பாத போது ஏன் கிறிஸ்தவர்கள் மட்டும் அதிகமாக பரப்புகிறார்கள்?

பதில் 162: இந்த கேள்வியை ஒரு முஸ்லீம் கேட்கக்கூடாது. ஏனென்றால் முஸ்லிம்களும் மார்க்கத்தை பரப்ப வேண்டும் என்று இஸ்லாம் சொல்லுகிறது.

இந்த கேள்வியை ஒரு ஹிந்து சகோதரர் கேட்டார் என்று எண்ணி பதில் எழுதுகிறேன்.

கிறிஸ்தவத்தைப் பரப்புதல் என்றால் என்ன? இயேசுவின் நற்செய்தியை உலகிற்கு எடுத்துச் சொல்வதாகும். ஒவ்வொரு கிறிஸ்தவனும் தான் பெற்ற இன்பத்தை தனக்குச் சொல்லப்பட்ட நற்செய்தியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இயேசு நமக்கு கொடுத்த பிரதானமான கட்டளையும் இதுதான்.

மத்தேயு 28:19-20

19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

1) நற்செய்தி அறிவிப்பது, அன்பின் வெளிப்பாடாகும்:

நம்மை நாம் நேசிப்பது போன்று பிறரையும் நேசிக்கவேண்டும் என்று இயேசு கட்டளை கொடுத்திருக்கிறார். நாம் அன்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. ஒரு அருமையான நற்செய்தி நம்மிடம் இருக்கும் போது, அதை மூடி மறைக்காமல் மற்ற மக்களுக்கும் சொல்வதுதான் அன்பின் வெளிப்பாடு. எனவே இயேசு பற்றிய அச்செய்தியை ஒரு கிறிஸ்தவன் பறைசாற்றுகின்றான், என்று சொன்னால் அவன் தன் அன்பை வெளிக்காட்டுகிறான் என்று அர்த்தம். அவன் மதத்தை பரப்புகிறான் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.

கிறிஸ்தவர்கள் மதத்தை பரப்புகிறார்கள் என்று மற்றவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் அன்பு செலுத்தி, நற்செய்தியை சொல்கிறார்கள்.

செல்வ செழிப்புடன் வாழும் கிறிஸ்தவர்கள் இயேசுவின் மீது வைத்த அன்பின் காரணமாக தங்கள் வீடுகள் நாடுகளை விட்டு ஆப்பிரிக்கா காடுகளிலும் கிராமங்களிலும் சென்று ஏன் இயேசுவை பற்றி சொல்ல வேண்டும்? எய்ட்ஸ் நோயாளிகள், மற்றும் இதர நோயாளிகள் உள்ள அப்படிப்பட்ட கிராமங்களில் ஏன் சென்று ஊழியம் செய்ய வேண்டும்? உண்மையாக மதத்தைப் பரப்ப வேண்டும் என்றால், பட்டணங்களில் சொகுசு வாழ்வு வாழ்ந்து கொண்டு அந்த காரியத்தை செய்யலாமே? ஏன் ஆபத்தான‌ இடங்களுக்கு சென்று தங்கள் உயிர்களை தியாகம் செய்து கிறிஸ்தவர்கள் இயேசுவைப் பற்றி சொல்லுகிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில்களைத் தேடும் போது, நமக்கு கிடைக்கும் பதில், அன்பு என்பது மட்டும்தான்.

இதைப்பற்றி மேலும் அறிய ஆங்கில கட்டுரையை படிக்கவும்: Why should I evangelize?

கேள்வி 163: கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் ஏன் வெளிநாடுகளிலிருந்து அதிகமாக பணத்தை வாங்குகிறார்கள்? நீங்களே சொந்தமாக பணம் போட்டு ஊழியம் செய்யமுடியாதா?

பதில் 163: எந்த ஒரு நன்மையை செய்ய வேண்டும் என்றாலும், அதற்கு பணம் தேவை. பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கும் மருத்துவமனைகள் கட்டுவதற்கும், சபைகளை கட்டுவதற்கும் பணம் தேவை. இந்த பணத்தை மக்களிடம் இருந்து தான் பெற வேண்டும். சிலவேளைகளில், வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெறவேண்டி இருக்கும்.

நம் நாட்டிலேயே நமக்குள் நாமே பணத்தைப் போட்டு இப்படிப்பட்ட ஊழியங்களைச் செய்ய முடியும், இப்படிப்பட்ட ஊழியங்களும்இருக்கின்றன. அதே வேளையில் வெளிநாடுகளில் இருந்தும் உதவிகள் பெற்று செயல்படும் மருத்துவமனைகளும், ஊழியங்களும் இருக்கின்றன. வேலூர் CMC போன்ற மருத்துவமனைகள் மிஷினரி ஸ்தாபனங்களை நாம் கவனிக்கும் போது அதற்கு தேவையான பெரும் தொகை இந்தியாவிலிருந்து சேகரிக்க வேண்டும் என்றால் இது கடினம் தான். எனவே வெளிநாடுகளிலிருந்தும், உள் நாடுகளிலிருந்தும் உதவி பெற்று ஊழியம் செய்வதும் நன்மை செய்வதும் தவறு இல்லை. 

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன், ஆஃப்ரிக்காவில் உள்ள சில நாடுகளுக்கும், இலங்கை போன்ற நாடுகளுக்கும் நம் இந்திய நாட்டிலிருந்து உதவிகள் செல்கின்றன என்ற விவரம் உங்களுக்குத் தேரியுமா?

இதர மதசார்பற்ற தொண்டு ஸ்தாபனங்கள் கூட வெளிநாட்டு உதவியுடனும், உள்நாட்டு மக்களின் உதவியுடனும் தான் நடைபெறுகிறது.

கேள்வி 164: கிறிஸ்தவ ஊழியர்களில் பெரும்பான்மையானவர்கள் பண விஷயத்தில் ஏமாற்றுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன், இது சரியா?

பதில் 164: இந்த கேள்விக்கான பதிலை படிப்பதற்கு முன்பு முந்தைய கேள்விக்கான பதிலை படித்து விடுங்கள். ஆம், கிறிஸ்துவ ஊழியர்களில் சிலர் (பெரும்பான்மையானவர்கள் அல்ல) பணவிஷயத்தில் நேர்மையாக இல்லாமல் இருப்பதை நாம் காண முடியும். இதற்காக எல்லா ஊழியர்கள் மீதும் குற்றம் சுமத்த முடியாது. இயேசுக்கு உண்மையாக ஊழியம் செய்பவர்கள், பண ஆசை இல்லாமல் ஊழியம் செய்பவர்கள் இருக்கிறார்கள்.

பணத்தை தவறாக கையாளுகிறவர்களை அரசாங்கம் தண்டிக்க வேண்டும். கிறிஸ்தவ ஊழியர்கள் என்று பெயர் போட்டு கொண்டு, மக்களை ஏமாற்றுகிற சில ஓநாய்களை கண்டுபிடித்து சட்டம் தண்டிக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களின் மூலம் இயேசுவிற்கும் கிறிஸ்தவத்திற்கும் அவ பெயர் வருகிறது.

சட்டம் மட்டும் அல்ல, விசுவாசிகளும் தங்களுடைய பணத்தை ஞானமாக கையாள‌வேண்டும். ஊழியத்திற்கு கொடுக்கிறேன், இயேசுவின் சுவிசேஷம் உலகம் அனைத்திற்கும் செல்வதற்கு உதவியாக இருக்கிறேன் என்று நம்பி, சில தீய ஊழியர்களின் கையிலே பணத்தைக் கொடுத்து விசுவாசிகள் ஏமாறக்கூடாது.

கிறிஸ்தவர்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை சபையை தாங்குவதற்கும், மிஷினரி ஊழியம் செய்வதற்கும், சமுதாயத்துக்கு தொண்டு செய்வதற்கும் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கும்போது, தீயவர்கள் கையிலே அந்தப் பணம் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பண ஆசை பிடித்த சில ஊழியர்கள் உருவாவதற்கு, கேள்வி கேட்காமல் பணத்தை அவர்கள் கையிலே கொடுக்கும் கிறிஸ்தவர்களும் குற்றவாளிகள்தான்.

ஒரு பாஸ்டரின் கையிலே தசம பாகத்தையும் காணிக்கையும் கொடுக்கும் விசுவாசிக்கு அந்த பணத்தை எதற்காக எப்படி செலவு செய்கிறேன் என்ற சான்றுகளை இந்த பாஸ்டர் விசுவாசிகளுக்கு கொடுக்க வேண்டும். பணத்தை வாங்கிக்கொண்டு, கொடுக்குற வரைக்கும் தான் உன் கடமை, பிறகு கேள்வி கேட்காதே கணக்கு கேட்காதே, என்று யாராவது உங்களிடம் சொன்னால், அவர் உங்களை ஏமாற்றுகிறார் என்று அர்த்தம். அவருடைய பிள்ளைகளுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் தேவையான சொத்துக்களை உங்கள் பணத்தின் மூலம் அவர் சேகரித்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். இப்படி நான் சொல்லுகிறேன் என்பதனால், எல்லா ஊழியர்களையும் குற்ற படுத்துகிறேன் என்று அர்த்தமில்லை. ஒரு சில‌ ஊழியக்காரர்கள் இப்படி பண ஆசை பிடித்து இருக்கிறார்கள் என்பதை மட்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

கிறிஸ்தவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், கணக்கு கேட்க வேண்டும். இப்படி நாம் கேட்டால் கிறிஸ்துவத்திற்கு கெட்ட பெயரை கொண்டுவரும் ஊழியர்கள் எழும்புவது குறைந்துவிடும். மேலும் மற்றவர்கள் கிறிஸ்துவத்தை குறைகூறும் நிலையும் ஏற்படாது.

ஒரு கடைசி குறிப்பு, பணத்தை தவறாக‌ பயன்படுத்துகிறவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள், ஆனால் கிறிஸ்துவம் மட்டும் ஏன் இப்படி செய்திகளில் அதிகமாக‌ வருகிறது? என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றவர்களை குற்றப்படுத்துவதைக் காட்டிலும், நம்மிடத்தில் இருக்கிற குறைகளை சரி செய்வது தான் சரியான தீர்வு என்பதை நாம் மறக்கக் கூடாது.

கேள்வி 165: நான் ஒரு கிறிஸ்தவன், ரமளான் என்றால் இஸ்லாமியர்களின் பண்டிகை என்று எனக்குத் தெரியும், ஆனால் அதற்கு மேலாக ஒன்றும் தெரியாது. ரமளான் என்றால் என்ன? சிறிது விளக்கமுடியுமா?

பதில் 165: முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானவைகள் இரண்டு பண்டிகைகளாகும், அவை: ரம்ஜான் மற்றும் பக்ரீத் என்பவைகளாகும்.

சிலர் "ரமலான்" என்று அழைப்பார்கள், வேறு சிலர் "ரமளான்" என்றும், "ரமழான்/ரமதான்" என்றும் அழைப்பார்கள். நாம் இந்த கட்டுரையில் "ரமளான்" என்று பயன்படுத்துகிறோம்.

இஸ்லாமிய காலண்டர் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டது.  இஸ்லாமியர்களின் மாதங்களில் ஒன்பதாவது மாதம் தான் ரமளான் எனப்படுகின்றது. 

இஸ்லாமிய மாதங்களின் பெயர்கள் இவைகளாகும்:  

1) முஹர்ரம், 2) ஸபர், 3) ரபியுல்  அவ்வல், 4) ரபியுல் ஆஹிர், 5) ஜமாத்திலவ்வல், 6) ஜமாத்திலாஹிர், 7) ரஜப், 8) ஷஃபான், 9) ரமளான் (ரமலான்), 10) ஷவ்வால், 11) துல்காயிதா, 12) துல்ஹஜ் 

ரமளான் என்றுச் சொல்லும் போது, எல்லாருக்கும் ஞாபகம் வருவது "நோன்பு" ஆகும். இந்த மாதம் முழுவதும் முஸ்லிம்கள் 30 நாட்கள் நோன்பு இருப்பார்கள்.

நோன்பு – இஸ்லாமிய கட்டாய கடமை

இஸ்லாமியர்கள் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான ஐந்து கடமைகளில் (இஸ்லாமிய தூண்களில்) ரமளான் மாதத்தில் நோன்பு இருக்கவேண்டும் என்பதும் ஒரு கடமையாகும்.

இந்த ரமளான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பு இருந்துவிட்டு, அதன் பிறகு பண்டிகையை முஸ்லிம்கள் கொண்டாடுவார்கள்.

கேள்வி 166: கிறிஸ்தவர்களின் உபவாசம் தான் ரமளான் நோன்பா? இவ்விரண்டிற்கும் இடையே இருக்கும் வித்தியாங்கள் என்ன?

பதில் 166: இஸ்லாமுடைய ரமலான் நோன்பும் இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்த நோன்பும் அல்லது உபவாசமும் ஒன்றல்ல. இவ்விரண்டுக்கும் இடையே பல வித்தியாசங்கள் உள்ளன.

இஸ்லாமிய நோன்பிற்கும், கிறிஸ்தவ நோன்பிற்கும் இடையே இருக்கும் வித்தியாசங்கள்:

1. இஸ்லாமிய நோன்பு என்பது இஸ்லாமிய கடமைகளில் ஒரு கடமையாகும். அதை தகுந்த காரணங்கள் இல்லாமல் மீறுவது இஸ்லாமிய சட்டத்தின் படிகுற்றமாகும். ஆனால், கிறிஸ்தவத்தில் நோன்பு (உபவாசம்) என்பது நிச்சயமாக கடைபிடிக்கவேண்டிய கடமையல்ல. நம்முடைய தேவையைபொருத்து நாம் கடைபிடிக்கலாம். பழைய ஏற்பாட்டு காலத்தில் ஒரு ஆபத்து வந்தாலோ, யாராவது மரித்துவிட்டாலோ யூதர்கள் உபவாசம் இருப்பார்கள். யூதர்களுக்கு மோசேயின் மூலமாக ஒரு குறிப்பிட்ட நாளில் உபவாசம் இருக்கும்படி கூறப்பட்டுள்ளது. 

2. இஸ்லாமிய நோன்பு என்பது அதிகாலை ஆரம்பித்து, சூரியன் அஸ்தமிக்கும்வரை தொடருகிறது, ஆனால், கிறிஸ்தவ உபவாசம் என்பது நாள்முழுவதும் தொடரும். இத்தனை மணிக்கு ஆரம்பித்து, இத்தனை மணிக்குமுடிக்கவேண்டும் என்ற நிபந்தனை இல்லை. பழைய மற்றும் புதியஏற்பாட்டில் நாள் முழுவதும் உபவாசம் இருந்ததாக அனேகஎடுத்துக்காட்டுகளை காணலாம். இதுமட்டுமல்லாமல், யூதர்கள் தனிப்பட்ட ஒரு நாள் உபவாசம் இருக்கும் போது, ஒரு நாளின் மாலையில் ஆரம்பித்து மறுநாள் மாலைவரை இருப்பார்கள் (முழூ நாள்).

3. இஸ்லாமில் வருடத்திற்கு ஒரு முறை ரமளான் மாதத்தில் 30 நாட்கள்நோன்பு இருக்கவேண்டும் என்பது கட்டளை, ஆனால், கிறிஸ்தவத்திலே வருடத்தின் இந்த குறிப்பிட்ட மாதம் இத்தனை நாட்கள் நோன்புஇருக்கவேண்டும் என்ற கட்டளையில்லை. அவரவருக்கு விருப்பமான நாட்களில், விருப்பமான எண்ணிக்கையில் உபவாசம் இருப்பார்கள்.

4. இஸ்லாமிய நோன்பில், அதிகாலையில் எழுந்திருந்து, சாப்பிடுவார்கள்,கிறிஸ்தவத்திலே இப்படி அதிகாலையில் எழுந்து சாப்பிடும்கட்டளையில்லை.

5. முக்கியமாக, இஸ்லாமிலே ஒரு குறிப்பிட்ட மாதம் ஒதுக்கி ரமளான்நோன்பு இருப்பதினால், எல்லாருக்கும் இவர் நோன்பு இருக்கிறார் என்பது தெரியவரும். ஆனால், கிறிஸ்தவத்தில் ஒருவன் உபவாசம் இருக்கிறேன்என்று சொன்னால் தவிர வெளியே தெரிய வழியில்லை. இஸ்லாமியர்களின் ரமளான் நோன்பு மத்தேயு 6ம் அதிகாரத்தில் இயேசுசொன்ன அறிவுரைக்கு எதிராக இருக்கிறது. அதாவது வெளிப்படையான ஒன்றாக இருக்கிறது.

6. இஸ்லாமிய ரமளான் நோன்பு என்பது இஸ்லாமிய கடமைகளில் ஒன்றாக இருப்பதினால், ஒருவேளை நோன்பு வைக்கமுடியாதவர்கள் அதற்கானபரிகாரங்கள் செய்யவேண்டும். ஆனால், கிறிஸ்தவ உபவாசத்தில் இப்படிப்பட்ட பரிகாரங்கள் ஒன்றுமில்லை.

7. ரமளான் மாதம் நோன்பு என்றுச் சொல்கிறீர்களே தவிர, மீதமுள்ளமாதங்களில் உணவுக்கு செலவாகும் பணத்தை விட ரமளான் மாதத்தில் அதிகமாக செலவாகும். அதாவது உணவு பணடங்களின் விற்பனையும் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக ஆகிறது. ஏதோ அதிகாலையிலிருந்து மாலைவரை நோன்பு இருக்கிறார்கள், மீதமுள்ள பாதிநாள் நன்றாக சாப்பிடுகிறார்கள். இப்படி பாதி நாள் நன்றாக சாப்பிடுவதை நான் தவறு என்றுச் சொல்லவில்லை, ஆனால், இப்படிப்பட்ட வழக்கங்கள் கிறிஸ்தவத்தில் இல்லை என்றுச் சொல்கிறேன், அவ்வளவு தான்.

8. புகாரி ஹதீஸில் "ரமளான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தும்  நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன" என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், கிறிஸ்தவத்தில் உபவாசம் இருப்பதினால் நம்முடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற கோட்பாடு இல்லை. (புகாரி பாகம் 2, அத்தியாயம் 30,எண் 1901).  இயேசுக் கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்து, நம்முடைய பாவங்களை அவர் சிலுவையில் சுமந்து தீர்த்தர் என்பதை நம்பி, மேற்கொண்டு பாவமில்லாத வாழ்க்கையை வாழ நம்மை ஒப்புக்கொடுப்பதினால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

கேள்வி 167: ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் செருப்பு அணிந்துக்கொண்டுச் சென்று தொழுதுக்கொள்வது, இறைவனை அவமானப்படுத்துவது ஆகாதா?

பதில் 167: எல்லா தேவாலயங்களிலும் செருப்பு அணிந்து கொண்டு செல்வதில்லை. உதாரணத்திற்கு, இந்திய தேவாலயங்களில் தரையில் உட்கார்ந்து தேவனை ஆராதிக்கும் இடங்களில் செருப்பை வெளியே விட்டு சென்றுதான் ஆராதிக்கிறார்கள். ஆனால் சில நாடுகளில் குளிர் அதிகமாக இருக்கும் பிரதேசங்களில் செருப்பு அணியாமல் இருக்கவே முடியாது, மேலும் கீழே உட்காராமல் பெஞ்சுகளில் உட்கார்ந்து ஆராதனை செய்வதினால் செருப்பை அணிந்து கொண்டு தான் உள்ளே செல்கிறார்கள்.

இது தவறு இல்லை, இது தேவனை அவமானப்படுத்துவதற்கு சமம் இல்லை. தேவன் எல்லா இடங்களிலும் இருக்கின்றார், நாம் வீடுகளில் இருந்தாலும் சாலைகளில் நடந்து சென்றாலும் அங்கும் அவர் இருக்கின்றார் என்று பொருள்.

செருப்பு அணிந்து கொண்டு சில தேவாலயங்களில் சென்று பெஞ்சுகளில் உட்கார்ந்து ஆராதனை செய்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதாவது ஒரு சபையில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் ஆராதிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், அதுவும் பெஞ்சுகளில் உட்கார்ந்து ஆராதிக்கும் போது, அவர்கள் வெளியே செருப்புகளை விட்டு வந்தால், ஆராதனை முடித்துவிட்ட பிறகு வெளியே சென்று தங்கள் செருப்புகளை தேடிக் கொள்வதற்கு அதிக நேரம் செலவாகும். சிறிய சபைகளில் இது சாத்தியப்படலாம் ஆனால் பெரிய சபைகளில் இது சாத்தியப்படாது.

தேவனை ஆராதிக்கும் கிறிஸ்துவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரை ஆராதிக்கிறார்கள். எனவே, செருப்பு அணிந்து கொண்டு பேச்சுக்களில் உட்கார்ந்து ஆராதிப்பது தவறில்லை.

இந்த கேள்வியை முஸ்லிம்கள் கேட்டதனால், இன்னொரு விபரத்தையும் சொல்லி விடுகிறேன். முஸ்லிம்கள் அல்லாஹ்வை தொழும்போது, ஒரே வரிசையில் நின்று, சில குர்ஆன் வசனங்களை சொல்லி, பிறகு குனிந்து மறுபடியும் எழுந்து நின்று, மறுபடியும் உட்கார்ந்து அல்லாஹ்வைத் தொழுது கொள்கிறார்கள். இப்படி பலநிலைகளில் அவர்கள் அல்லாஹ்வை தொழுதுக் கொள்கிறார்கள்.

ஆனால் கிறிஸ்தவ ஆராதனையில், இப்படிப்பட்ட நிலைகள் இருப்பதில்லை. குளிர் பிரதேசங்களில், பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கும் சபைகளில் செருப்புகளை அணிந்து கொண்டு, ஷூக்களை போட்டுக்கொண்டு ஆராதனை செய்வது தவறான காரியமல்ல.

கேள்வி 168: ஆலயங்களில் ஆண்களும் பெண்களும் அருகில் அமர்ந்துக்கொண்டு ஆராதனை/தொழுகை செய்வது சரியானச் செயலா? இப்படி செய்தால் ஆண்களில் மனதில் பாவமான ஆசைகள் வருமல்லவா?

பதில் 168: இந்தக் கேள்வியை முஸ்லிம்கள் தங்கள் மார்க்கம் தங்களது கற்றுக்கொடுத்த, போதனைகளின் படி கேட்கிறார்கள். இஸ்லாமின் படி பெண்கள் போதைப் பொருட்கள் போன்றவர்கள், ஆண்கள் பாவம் செய்வதற்கு பெண்கள் தான் காரணம். எனவே ஆண்களும் பெண்களும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்வதும், இறைவனை ஆராதனை செய்கிற இடங்களில் ஒன்றாக கூடி ஆராதனை செய்வதும் தவறான செயல் என்று முஸ்லிம்கள் போதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

உண்மையில் இந்த‌ நம்பிக்கை ஆபத்தானதாகும். ஒரு குற்றம் நடந்தால் அதில் ஆணின் பங்கும் இருக்கும். ஆண்கள் தவறுகள் செய்யக்கூடாது என்பதற்காக பெண்களின் முகத்தை மறைப்பதைக் காட்டிலும், ஆண்களுக்கு சுய கட்டுப்பாட்டை கற்றுக்கொடுத்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு உண்டாகும்.

இறைவனை தொழுது கொள்ள செல்லுமிடத்தில் தீய எண்ணங்கள் ஒரு ஆணுக்கு வருகிறது என்று சொன்னால், அதற்கு அவன் தான் காரணம். குடும்பமாக சென்று, தாயும் தந்தையும் சகோதரியும் சகோதரனும், சித்தப்பா பெரியப்பா மகனும் மகளும், உறவினர்களும் ஒன்றாக சேர்ந்து ஆராதிக்கும் போது எப்படி ஆண்கள் தீயவைகளை சிந்திப்பார்கள்?

தவறு செய்ய வேண்டும் நினைக்கும் ஆண்கள் திருச்சபையில் மாத்திரமல்ல எங்கும் தவறு செய்வார்கள், குடும்பத்திலும் செய்வார்கள் பள்ளிக்கூடங்களிலும் செய்வார்கள். ஆனால் சுத்தமாக இருக்க வேண்டும் என்றும் சுய‌ கட்டுப்பாட்டுடன் வாழும் ஆண்கள், எந்த இடத்திலும் பரிசுத்தமாக வாழ்வார்கள்.

இதற்கும் சில பேர் வாலிபர்கள் மீது குற்றம் சுமத்தி, வாலிபர்கள் காதல் என்று சொல்லி, காதலில் விழுவதற்கு காரணம், வாலிப பெண்களும் சபைக்கு வருவதுதான் என்று சொல்லுவார்கள். இது கூட ஒரு சரியான காரணம் இல்லை, நல்ல நோக்கத்துடன் தேவனை ஆராதிக்கும் போது இப்படிப்பட்ட செயல்களை செய்ய வேண்டும் என்று தோன்றாது.

மனிதன் என்று சொன்னால், ஒருசில சதவிகித ஆண்கள் அல்லது பெண்கள், சில காரியங்களில் ஈடுபட்டு விடுவதும் உண்டு. அதற்காக பெண்களை தனியாக பூட்டி வைப்போம் என்று சொன்னால், அது சரியான செயலாக இருக்காது. அது பைபிளின் போதனைகளுக்கு எதிரான செயலாக இருக்கும்.

இயேசு ஊழியம் செய்யும் போது அவருக்கு அனேக பெண்கள் ஊழியம் செய்தார்கள். அப்போஸ்தலர்கள் அதாவது இயேசுவின் சீடர்கள் ஊழியம் செய்யும் போதும், பெண்களும் சேர்ந்து ஊழியம் செய்தார்கள். தேவனை ஆராதிப்பது ஒரு ஆணுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே உரிமை பெண்ணுக்கும் உண்டு.

கேள்வி 169: கிறிஸ்தவர்கள் இன்னும் முந்தைய ஜாதிப்பெயர்களை வைத்திருப்பது ஏன்?

பதில் 169: இந்தியாவில் ஆழமாக வேர்விட்டு வளர்ந்துள்ள இந்த ஜாதி என்ற தீயமரம் இன்னும் அடியோடு வெட்டப்படாமல் இருக்கிறது.  இந்து மார்க்கத்திலிருந்து இயேசுவை ஏற்றுக்கொள்கின்ற சிலர் இன்னும் தங்களுடைய முந்தைய ஜாதிப் பெயரையே வைத்துக் கொண்டிருப்பது, ஒரு சங்கடமான செய்தியாகும்.

பைபிளில் ஜாதி இல்லை. ஒரே ஆண் பெண்ணிலிருந்து உலக மக்களை இறைவன் படைத்தார். 

ஆனால் இந்தியாவில் மட்டும் முக்கியமாக தமிழ்நாட்டில் இந்த ஜாதி பிசாசை விட்டு மக்கள் வெளியே வராமல் இருப்பதற்கு காரணம், கிறிஸ்தவர்கள் வேதத்தை சரியாக பின்பற்றாமல் இருப்பது தான்.

கடினமான சட்டங்கள் போட்டு மக்களை திருத்தலாம் என்று சொன்னால், அதற்கு பைபிளும் இடம் கொடுப்பதில்லை. ஆன்மீக விஷயத்தில் அரசு செய்கின்ற படி, அல்லது இஸ்லாம் செய்கின்ற படி கடினமான சட்டங்கள் போட்டு மக்களை கட்டாயப்படுத்த பைபிள் அனுமதிப்பதில்லை.

"மனிதனுக்கு சுதந்திரம்" மிகவும் முக்கியமானது என்பதில் கிறிஸ்தவம் திடமாக‌ உள்ளது. இதே சுதந்திரம் தான், மக்கள் சிலருக்கு தாங்கள் விட்டுவந்த தீய ஜாதி பழக்கத்தை விடாமல் பின்பற்றும் படி செய்துள்ளது.

இந்த செயல் பைபிளுக்கு எதிரானது என்பதை இவர்கள் அறியவில்லை. சட்டங்கள் போட்டு இவர்களை சரிசெய்ய முடியாது, சரியான போதனைகள் மூலமும், வேத அறிவின் மூலமும் தான் இதை சரி செய்ய முடியும்.

இதற்காக நாம் கிறிஸ்தவத்தை குற்றம் சாற்றமுடியாது, பைபிள் மீது குற்றம் சுமத்தக்கூடாது.  கடினமாக சட்டம் போட்டு, அவன் சுதந்திரத்தை பறிக்க முடியாது. ஆனால் அவனுக்கு நேர்வழியை கற்றுக் கொடுக்கலாம், அன்பாக சொல்லிக் கொடுக்கலாம். இதனை கிறிஸ்தவ சபை ஊழியர்கள் செய்ய வேண்டும்.

கேள்வி 170: கிறிஸ்தவர்கள் ஏன் ஞாயிறு அன்று ஆராதனைச் செய்கிறார்கள்?

பதில் 170: கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை தேவனை ஆராதிக்க வேண்டும் என்று பைபில் கட்டளையிடவில்லை. அதேபோன்று யூதர்கள் சனிக்கிழமை ஆரம்பித்தார்கள், அதை மாற்றி நீங்கள் ஞாயிற்றுக்கிழமை ஆராதியுங்கள் என்றும் பைபிள் சொல்லவில்லை.

ஆதியில் இருந்த கிறிஸ்தவ சபை, வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒன்றாகக்கூடி ஜெபித்தார்கள், ஆராதித்தார்கள்.. 

அப்போஸ்தலர் 20:7 

வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரி மட்டும் பிரசங்கித்தான்.

மேலும் சபை மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளுக்காக பணத்தை சேகரித்து வையுங்கள், அதுவும் வாரத்தின் முதல் நாள் நீங்கள் ஒன்றாக சேர்ந்து தேவனை ஆராதிக்க நாளிலே அதை செய்யுங்கள் என்றும் அவர்களுக்கு ஆலோசனை சொல்லப்பட்டது.

1 கொரிந்தியர் 16:2

நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.

இது எதைக் காட்டுகின்றது என்றால், ஆதி திருச்சபை இயேசுவின் உயிர்த்தெழுதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமை அன்று ஒன்றாக கூடி தேவனை தொழுது இருக்கிறார்கள், சில முக்கியமான தீர்மானங்களை எடுத்திருக்கிறார்கள். எனவே காலப்போக்கில் அந்த நாளிலேயே கிறிஸ்தவர்கள் தேவனை ஆராதிப்பது ஒரு வழக்கமாக‌ மாறி இருக்கிறது.

இது மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட நாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமென்று நம் மனதிலே நிர்ணயித்துக் கொண்டால், காலம் நேரம் பார்க்காமல், நல்ல நேரம் கெட்ட நேரம் பார்க்காமல் அந்த நாளிலே காரியங்களை செய்ய‌ பைபிள் நமக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. எனவே ஞாயிற்றுக்கிழமையில், அதாவது இயேசுவின் உயிர்த்தெழுந்த நாளிலே கிறிஸ்தவர்களாகிய நாங்கள் தேவனை ஆராதித்து கொண்டிருக்கிறோம்.

இன்னும் பல நாடுகளில் உள்ள கிறிஸ்துவர்கள், அந்த நாடுகளில் எந்த நாள் அரசு விடுமுறை நாளாக இருக்குமோ, அந்தநாளில் தேவனை ஆராதிக்கிறார்கள். உதாரணத்திற்கு அரேபிய நாடுகளில் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை களிலேயே தேவனை ஆராதிக்கிறார்கள். இது பைபிளுக்கு எதிரானதும் கூட அல்ல.

கேள்வி 171: ஆரோக்கத்திற்காக கிறிஸ்தவர்கள் விருத்தசெதனம் செய்துக் கொள்ளலாமா?

பதில் 171: விருத்தசேதனம் என்பது பழைய ஏற்பாட்டில் யூதர்களுக்காக கர்த்தர் கொடுத்த கட்டளையாகும். புதிய ஏற்பாட்டின் படி கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. கிறிஸ்தவர்கள் இருதயத்தில் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள், சரீரத்தில் அல்ல. எனவே விருத்தசேதனம் கிறிஸ்தவர்களுக்கு கட்டளை இல்லை.  விருத்தசேதனம் பற்றிய புதிய ஏற்பாட்டின் நிலைப்பாடு மிகவும் ஆழமாக படிக்கவேண்டிய தலைப்பு ஆகும். இங்கு சுருக்கமாகத்தான் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியத்திற்காக ஒரு கிறிஸ்தவர் விருத்தசேதனம் செய்து கொள்வேன் என்று சொன்னால், அதில் எந்த பிரச்சினையும் இல்லை அவர் செய்து கொள்ளட்டும். இதற்கும் கிறிஸ்தவத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை.

கேள்வி 172: கிறிஸ்தவத்தில் கண்திருஷ்டி உண்ட?

பதில் 172: கிறிஸ்தவத்தில்  கண்திருஷ்டி என்பது இல்லை. அது ஒரு மூட பழக்க வழக்கமாகும். இஸ்லாமில் கண்திருஷ்டி இருக்கிறது என்று நம்புகிறார்கள், இதனை முஹம்மது கீழ்க்கண்ட புகாரி ஹதீஸில் கூறியுள்ளார்:

5944. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'கண்ணேறு (திருஷ்டிபடுவது) உண்மைதான்' என்று கூறினார்கள். மேலும், பச்சை குத்துவதைத் தடை செய்தார்கள்

இதை ஏன் நான் மூடப்பழக்கவழக்கம் என்று சொல்கிறேன் என்றால், ஒருவர் மற்றவர் மீது கண் திருஷ்டி வைத்தால், அந்த அடுத்தவருக்கு அதன் மூலமாக தீமை உண்டாகும் என்றால்,

 • இந்த தீமையை செய்பவன் யார்?
 • இந்த தீமை செய்யப்படும்போது, அவனைப் படைத்த இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?
 • ஒரு நேர்மையான நல்ல மனிதருக்கு எதிராக, ஒரு தீய மனிதன் கண் திருஷ்டி வைத்தால், அதனால் அவனுக்கு தீமை உண்டாகும் என்று சொன்னால், இதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா?
 • இப்படி ஒரு நீதிமானுக்கு ஒரு தீய மனிதன் தீமை செய்யும் போது, அதைப் பார்த்துக்கொண்டு இறைவன் ஏன் சும்மா இருந்தான் எந்த கேள்வி எழுகின்றது?
 • இதற்கெல்லாம் இஸ்லாத்தில் பதில் இல்லை?

இந்த கண் திருஷ்டியை கண்டு ஹிந்து உலகம் அப்படியே பயந்து போயுள்ளது? இது ஒரு வீணான பயம் என்பதை இவர்கள் அறியார்கள்?

ஒருவரைப் பார்த்து இன்னொருவர் நீ அழகாய் இருக்கிறாய் என்று சொல்வதும், அவர்கள் மீது கண் திருஷ்டி வைப்பதோ உண்மையாக இருந்தால், சினிமாவில் கதாநாயகனாக கதாநாயகியாக இருக்கும் ஒவ்வொருவரும் எப்போதும் பல தீமைகளுக்கு ஆளாகியிருப்பார்கள்? இவர்களின் அழகையும் நடிப்பையும் பார்த்து கண் வைக்காதவர்கள் சினிமா பார்ப்பவர்களில் யார் இருக்கிறார்கள்? கோடிக்கணக்கான மக்கள் இவர்களின் மீது கண் திருஷ்டி வைக்கிறார்கள், இருந்தபோதிலும் மிக நீண்ட ஆயுளோடு சினிமா நடிகர்கள் நடிகைகள் வாழுகிறார்கள். இவர்கள் மீது கண் திருஷ்டி இல்லையா? 

எனவே, மேற்கண்ட கேள்விகளுக்கு இஸ்லாமிடமும், இந்துக்களிடமும் பதில்கள் இல்லை. அதனால் தான் சத்தியமார்க்கமாகிய‌ கிறிஸ்தவம் நம்புவதில்லை.

கேள்வி 173: கிறிஸ்துவத்தில் விதி என்ற கோட்பாடு உண்டா?

பதில் 173: முதலில் ஒரு வரியில் பதில் சொல்லி விடுகிறேன், அதாவது பைபிளின் படி விதி என்பது இல்லை, கிறிஸ்தவம் விதியை நம்புவதில்லை.

பொதுவாக விதி என்றால், மனித கட்டுப்பாட்டுக்கு அப்பால், நாம் முயன்றாலும், நம்மால் செய்ய முடியாது ஒன்று தான் விதி என்று நம்பப்படுகிறது.

அதாவது நம்முடைய வாழ்க்கையில் இந்த ஒரு நிகழ்ச்சி நடந்த தீருமென்று ஏற்கனவே இறைவன் முடிவு செய்து விட்டால், அதை மாற்றுவதற்கு நான் ஏன் முயல வேண்டும், அதுதான் மாறப்போவது இல்லையே என்ற நம்பிக்கை தான் விதி என்று சொல்லப்படுகிறது. இதனை கிறிஸ்துவம் ஏற்றுக் கொள்வதில்லை.

இஸ்லாமும் இந்துத்துவமும் இந்த விதி என்ற கோட்பாட்டை ஆழமாக நம்புகிறது. இஸ்லாமின் படி நீங்கள் எதை செய்தாலும் எந்த பாடுபட்டாலும் உங்கள் வாழ்க்கையில் அல்லாஹ் எதை முடிவு செய்து வைத்திருக்கின்றானோ, அதுதான் நடக்கும். எனவே அவனை நம்பி முழுவதுமாக அவர் மீது சார்ந்து விடுங்கள். இதேபோலத்தான் இந்து மார்க்கத்திலும் விதியினால் பல காரியங்கள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

இந்தியாவில் வேரூன்றி இருக்கின்ற ஜாதி என்ற நிலைக்கு இந்துத்துவம் சொல்லும் விதியும் ஒரு காரணமாகும்.

விதி என்ற தலைப்பு, மிகவும் ஆழமான தலைப்பு. ஏன் பைபிள் இதை ஒப்புக் கொள்ளவில்லை, என்பதை அறிய கீழ்க்கண்ட கட்டுரையை இப்போதைக்கு படித்துக்கொள்ளுங்கள், தேவைப்பட்டால், இந்த விவரங்களை வேறு ஒரு கேள்வியில் காண்போம்.

கேள்வி 174: கிறிஸ்தவர்கள் தேவனை தொழுதுக்கொள்ளும் போது ஏன் பாடல்கள் பாடுகிறார்கள், இசைக்கருவிகளை இசைக்கிறார்கள்? இதனை பைபிள் அனுமதிக்கிறதா?

பதில் 174: ஆம் இசைக்கருவிகளை இசைத்து, தேவனை புகழ்ந்து பாடி அவரை ஆராதிப்பதை பைபிள் அனுமதிக்கிறது.

எபேசியர் 5:19. சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,

மத்தேயு 26:30. அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடின பின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப் போனார்கள்.

இயேசுவும் ஸ்தோத்திரபாடலைப் பாடி அதன் பிறகு கெத்சமெனே தோட்டத்திற்கு கடந்துச் சென்றார்.

 1. தேவனை பாடுவதற்கென்றே ஒரு புத்தம் (150 பாடல்கள்/அத்தியாயங்கள் கொண்ட புத்தகம்) உள்ளது.
 2. தேவனுடைய ஆலயத்தில் பாடல்கள் பாடவும், இசைக்கருவிகளை இசைக்கவும், சாலொமோன் அரசன் பலரை நியமித்து இருந்தார். 
 3. தாவீது ராஜாவோ, தேவனுடைய உடன்படிக்கை பெட்டிக்கு முன்பாக நடனமாடி, பாடிக்கொண்டுச் சென்றார்.

எனவே, ஆராதனைகளில் பாடல்கள் பாடுவதும் அருவிகள் இசைப்பதும் அனுமதிக்கப்பட்டது.

ஆனால் ஊழியர்கள் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், வெறும் பாடல் பாடுவதும் இசைக் கருவிகளை மீட்டுவது மட்டும்தான் ஆராதனை அல்ல, தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வதும் தான் ஆராதனை.

இந்த 21 ஆம் நூற்றாண்டு காலத்தில், கிறிஸ்துவ பாடல்கள் பாடகர்கள் அதிகமாகி விட்டார்கள். ஆகையால் பைபிளின் சத்தியத்தை மாற்றாமல் எழுதப்படுகின்ற நல்ல பாடல்களை சபையில் அனுமதிக்க வேண்டும்.

இஸ்லாமியர்களும் ஜபூரும்:

தாவீது அரசனுக்கு அல்லாஹ் ஜபூர் என்ற ஒரு வேகத்தை கொடுத்தான், என்று நம்புகின்ற முஸ்லிம்கள், தாங்கள் அல்லாஹ்வைத் தொழுது கொள்ளும் போது, பாடல்கள் இல்லாமல் தொழுதுக் கொள்கிறார்கள். ஜபூர் என்றால் அது சங்கீதங்கள் அடங்கிய புத்தகம் என்பதை முஸ்லிம்கள் அறிய வேண்டும்.

இஸ்லாமில் இசைக்கு இடமில்லை. தங்கள் இறைவன் தாவீது என்ற தீர்க்கதரிசிக்கு பாடல்களை ஒரு சிறப்புத் தகுதியாக கொடுத்திருந்தான். ஆனால் அதே பாடல்கள் இன்று முஸ்லிம்கள் பாட விரும்புவதில்லை. இந்த கேள்வியை முஸ்லிம்கள் தங்கள் அறிஞர்களிடம் கேட்டு பதில் சொல்லவேண்டும்? குறைந்தபட்சம் முஸ்லிம்கள், அல்லாஹ் கொடுத்த ஜபூர் புத்தகத்தில் அல்லாஹ்வை புகழ்ந்து பாடிய பாடல்களையாவது பாடி மகிழலாம். 

கேள்வி 175: ஒரு நல்ல கிறிஸ்தவ பாடகர், ஊழியர் திடீரென்று கள்ள உபதேசம் செய்கின்றவராக மாறிவிட்டார் என்று வைத்துக்கொள்வோம்? அவர் பாடலை நம் சபைகளில் பாடலாமா?

பதில் 175: இந்த காலத்தில், இந்த கேள்வி மிகவும் முக்கியமான கேள்வி. தமிழ்நாட்டில் அனேக பாடகர்கள் இருக்கிறார்கள். கர்த்தருடைய பாடல்களை அருமையாக எழுதுகிறார்கள் மற்றும் பாடுகிறார்கள். அந்தப் பாடல்களில் சத்தியமும் உள்ளது, அவைகள் பைபிளுக்கு எதிராகவும்  இல்லை. ஆனால் அந்த பாடலை பாடி எழுதியவர், பிரசங்கம் செய்யும் போது பல தவறான உபதேசங்களை போதித்துக் கொண்டிருக்கிறார் என்று காண்கிறோம். 

இப்பொழுது நமது கேள்வி, இப்படிப்பட்டவர் உடைய பாடலை நம் ஆராதனைகளில் பாடலாமா?

இதற்கு என்னுடைய தனிப்பட்ட பதிலைக் கேட்டால், சபை ஊழியர்கள் இப்படிப்பட்ட பாடகர்கள் பாடுகின்ற பாடலை தங்கள் சபையில் பாடாமல் இருப்பது நல்லது. ஏனென்றால், அவர் எழுதிய பாடலில் சத்தியம் இருக்கிறது, ஆனால் அவருடைய வாழ்க்கையில் சாட்சி இல்லை, தவறான உபதேசங்களை செய்கின்றார்.

யார் வேதத்திற்கு புறம்பாக போதனை செய்கிறாரோ, அவருடைய பாடல்கள் நமக்கு எதற்கு?

ஒரு வேளை இப்படிப்பட்ட பாடல்களை, சபையில் அனுமதித்தால், சபை விசுவாசிகள் மத்தியில் குழப்பங்கள் வரும். சிலர்  சரியானது என்று சொல்வார்கள், சிலர் இது தவறு என்று சொல்வார்கள்.

எனவே, உண்மையாகவே அந்த பாடல்கள் நன்றாக இருந்தாலும், தேவனுடைய மகிமையை உயர்த்துவதாக இருந்தாலும், அந்த ஊழியர் தவறான உபதேசத்தைக் போதிக்கின்றபடியினால், அவருடைய பாடல்களை பாடாமல் இருப்பதே நல்லது.

கள்ள உபதேசக்காரர்களின் பாடல்களை நாம் அங்கீகரித்தால், அவருடைய உபதேசத்தையும் நாம் மறைமுகமாக ஏற்றுக்கொள்வது போல ஆகிவிடும். இதனால் சில விசுவாசிகள் குழப்பமடைய வாய்ப்பு இருக்கிறது.

தேவனுடைய ஆராதனையை பொருத்தவரையில், உண்மையும் சத்தியமும் உள்ளவர்களாக ஆராதிக்க வேண்டும். குழப்பத்திற்கு ஒரு சதவிகிதம் கூட இடம் கொடுக்கக் கூடாது. எனவே, தவறான உபதேசம் செய்கின்றவர்களின் பாடல்கள் சபைக்குத் தேவையில்லை.

கேள்வி 176: ஆங்கில பாணியில், பழமையான தமிழில் பாடப்பட்ட பழைய பாடல்கள் இன்று சபைக்குத் தேவையா?

பதில் 176: சில சபைகளில் இன்னும் பாரம்பரிய‌ பாடல்களை பாடிக்கொண்டு இருக்கிறோம். இதுமட்டுமல்ல, நம்முடைய முன்னோர்களே எழுதிய தமிழ் பாணியில் அமைந்த பாடல்களையும் பாடிக்கொண்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட பாடல்கள் தேவையா இல்லையா? என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அந்த பாடல்களை சபையில் ஆராதனைகளில் இன்று பாடப்படும் போது, கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில்களை நாம் தேடவேண்டும்:

1) பழைய பாடல்கள் சபையில் உள்ளவர்களுக்கு புரிகின்றதா?

2) நம்முடைய வாலிபர்களுக்கு பழைய தமிழ் வார்த்தைகளில், கீர்த்தனைகளில் வரும் வார்த்தைகளின் அர்த்தம் புரிகின்றதா?

3) எத்தனைப்  பேருக்கு பழமையான தமிழ் தெரியும்?

4) அர்த்தம் புரியாமல், ஆவியில் ஒரு தெளிவு இல்லாமல், பாடல்களை பாடுவதினால் நம்முடைய விசுவாசம் வளருமா?

5) கோயில்களில் சமஸ்கிருதத்தில் ஸ்லோகங்களை படித்தால் பக்தர்களுக்கு என்ன நன்மை என்று நாம் கேள்வி எழுப்புகிறோம். மசூதிகளில் தொழுகின்றவருக்கு புரியாமல் இருந்தாலும், அரபியில் தொழுகை செய்தால் என்ன நன்மை என்று கேள்வி எழுப்புகிறோம். நாம் நமக்கு புரியாமல் பாடல்களை பாடினால் என்ன நன்மை என்று கேட்டு இருக்கின்றோமா?

6) தமிழ் மொழியில் அனேக பழைய வார்த்தைகள் பயன்பாட்டில் இல்லை, அவைகளின் பொருளும் சபையில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு தெரிவதில்லை, எனவே பொருள் தெரியாமல் பாடுவது ஏன்?

நாம் ஒன்று செய்யலாம், பாரம்பரிய பாடல்கள் பாடுகின்ற சபை மக்களுக்கு பாடல்களின் பொருளை கற்றுத்தரவேண்டும், அல்லது அர்த்தம் புரிகின்ற பாடல்களை பாடவேண்டும். ஃபாதர் பெர்க்மான்ஸ் அவர்களின் பாடல்கள், ஆராதனைகளில் எப்படிப்பட்ட மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என்பதை நாம் அறிவோம். இந்த பாடல்களின் வெற்றிக்கு காரணம், நமக்கு புரியும் மொழியில், நமக்கு தெரிந்த ராகத்தில் பாடப்பட்ட பாடல்கள் அவைகள் என்பதை நாம் மறுக்கமுடியுமா?

எனவே, என்னுடைய கருத்து  என்னவென்றால், திருச்சபைக்குள், நமக்கு புரியாமல் எதையும் பாரம்பரியத்திற்காகச் செய்யக்கூடாது. சபைக்கு புரியவில்லையென்றால், சபை மக்கள் சபைக்கு வருவது ஒரு பாரமாக நினைப்பார்கள். எனவே, காலம் மாறிக்கொண்டு இருப்பதினால் சபையின் சில பாரம்பரியத்தை விட்டுவிட்டு புதியவைகளை ஏற்றுக்கொள்வது தான் சரியானது. 

கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாடுகளை விட்டுக்கொடுங்கள் என்றுச் சொல்லவில்லை, பாரம்பரிய சபையையும் நான் எதிர்க்கவில்லை. என் வேண்டுகோள் எல்லாம் "புரியாமல் பாடாதீர்கள்" என்ப‌து தான். இதே போன்று ஆங்கில பாணியில் அமைந்த பாடல்களையும் புரியாமல் பாடவேண்டாம், சபையில் உள்ளவர்கள் அனைவருக்கும் புரிந்தால் மட்டும் பாடுங்கள். 

கேள்வி 177: அனேக பாடல்களை எழுதியவர், சபைகளில் அவரது பாடல்கள் பாடப்பட்டுக்கொண்டு இருந்தது. திடிரென்று ஒரு பகிரங்க பாவத்தில் விழுந்துவிட்டார் (விபச்சாரமோ, பண ஊழலோ, வேறு எதுவோ), அவரது சாட்சி கெட்டுவிட்டது, அதிலிருந்து அவர் மீளவில்லை. இவரது முந்தைய பாடல்களை ஆராதனைகளில் பாடலாமா?

பதில் 177: இந்த கேள்விக்கான பதிலை படிப்பதற்கு முன்பு, மேலே கொடுக்கப்பட்ட 3 கேள்விகளையும் பதில்களையும் படித்துவிடுங்கள். 

அருமையான பாடல்களை பாடியவர், ஊழியத்தை அருமையாக செய்தவர், திடீரென்று ஒரு பெரும் பாவத்தில் விழுந்து விட்டு, சாட்சியை இழப்பார் என்றால், அவருடைய பாடலை பாடுவது எப்படி? என்பதுதான் கேள்வி.   

பல ஆண்டுகளாக அந்தப் பாடல்களைப் பாடும் போது, அவர் நேர்மையான தான் இருந்தார். ஆனால் பல ஆண்டுகள் கழித்து, இப்பொழுது அவர் பின் மாற்றம் அடைந்து, வெளிப்படையான தவறுகளை செய்திருக்கிறார். இத்தனை ஆண்டுகள் நாம் திருச்சபையில் அவருடைய பாடல்களை, பாடிக் கொண்டு ஆராதித்து கொண்டு தான் இருந்தோம், ஆனால் இப்போது அவைகளை தொடர்வதா அல்லது விட்டுவிடுவதா?

என்னுடைய பதில் என்னவென்றால், அவருடைய பாடல்களை நாம் இனி சபையில் பாடாமல் இருப்பதுதான் நல்லது. ஏனென்றால் இப்போது பெரும்பான்மையான விசுவாசிகளுக்கு யார் எந்தப் பாடல்களைப் பாடுகிறார்கள், அந்த ஊழியக்காரர் யார்? அப்படியே தற்போதைய நிலை என்ன? போன்ற விவரங்கள் அறிந்திருக்கிறார்கள். எனவே தேவனை ஆராதிக்கும் நேரத்தில், இப்படிப்பட்டவர் உடைய ஒரு பாடலை நாம் தெரிவுசெய்து பாடினால், அந்த பாடலை பாடும் போதே விசுவாசிகளுக்கு அந்த பாடலாசியர் ஊழியக்காரர் பற்றிய இப்போதைய நிலையில் ஞாபகத்துக்கு வரும். 

தேவனை ஆராதிக்கும் போது ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க வேண்டும், விசுவாசிகளின் மனதிலே பலவகையான ஓட்டங்கள், எண்ணங்களை சிதறடிக்கும் காரியங்கள் வராதபடிக்கு நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். 

இன்னும் சில விசுவாசிகள் அப்படிப்பட்ட பாடல்களை பாடும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணமாக, ஆராதனையில் படாமலேயே சும்மா இருப்பார்கள். இந்த நிலைக்கு விசுவாசிகளை தள்ள முடியாது, தள்ளவும் கூடாது.

எனவே சாட்சியை காத்துக் கொள்ளாதவரின் பாடல்களை, ஆராதனைகளில் பாடாமல் இருப்பதே சபைக்கு நல்லது.

ஒருவேளை அந்த ஊழியர் கர்த்தருக்குள் மறுபடியும் வந்து, மன்னிப்பைப் பெற்று சிறப்பான ஊழியம் செய்தால், தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு தன் சாட்சியை மறுபடியும் காத்துக் கொள்வார் என்று சொன்னால், அவருடைய பாடல்களை பாடுவதில் தவறில்லை. சுருக்கமாக ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், "யாருடைய பாடல்களை நாம் பாடினாலும் அவருடைய தற்கால நிலை என்ன என்பதை கவனித்து பாடினால் மிகவும் நன்றாக இருக்கும்".

கேள்வி 178: சில பாடல் வரிகளில் தவறான உபதேசம் இருப்பதாக தோன்றுகிறது, அவைகளை சபையில் பாடலாமா?

பதில் 178: இந்த கேள்விக்கு உதவியாக இருக்கும் வண்ணமாக, மேற்கண்ட கேள்வி பதில்களை படித்துக்கொள்ளுங்கள்.

மேலே சொன்ன இரண்டு பதில்களில் "பிரச்சனை, பாடல் எழுதியவர் மீது இருந்தது", "பாடல் பாடியவர் மீது இருந்தது". ஆனால் இந்த கேள்வியில் பாடலில் உள்ள சில வரிகள், தவறான உபதேசத்தை போதிப்பது போன்று தெரிகின்றது. இந்த பாடலை சபையில் பாடலாமா?

ஒரு கிறிஸ்தவராக, ஒரு ஊழியராக எல்லாவற்றையும் சோதித்து அறிந்து நலமானது பிடித்துக்கொள்ள நாம் அறிந்திருக்க வேண்டும். கள்ள உபதேசம் செய்கிற நபர்களை நாம் புறக்கணிப்பது போன்று, ஒரு பாடலில் ஒரு வரி நம் வேதத்திற்கு எதிராக இருக்கின்றது என்று நீங்கள் கருதினால், அடுத்த கேள்விக்கே இடமில்லை, அந்த பாடலை புறக்கணிக்க வேண்டியதுதான். அதை எழுதியவரும் அதை பாடியவரும் உலகப் புகழ்பெற்ற பெரிய ஊழியக்காரர் ஆக இருந்தாலும் சரி. அதை நாம் ஏற்க வேண்டியதில்லை.

கள்ள உபதேசங்கள் பிரசங்கியார் வடிவில் வந்தாலும் சரி, பாடல் வரிகளில் வந்தாலும் சரி அதனை நாம் புறக்கணிக்க வேண்டும். இது தான் பைபிள் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம்.

உதாரணத்திற்கு, ஒரு பாடல் வருகிறது அதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில், இயேசு சிலுவையில் மரிக்கவில்லை என்ற கோணத்தில் அர்த்தத்தைக் கொடுக்கிறது என்று நாம் கண்டால், இது நம்முடைய அடிப்படை சத்தியத்திற்கு எதிரானது, எனவே இந்த பாடல்களை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. 

நமக்கு நல்ல பாடல்களுக்கு பஞ்சமா இருக்கிறது? ஆயிரக்கணக்கான அவர்கள் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்டு பாடப்பட்டு கொண்டு இருக்கின்றன. எனவே, எந்த நேரத்தில் நாம் சிலவற்றை கள்ள உபதேசம் என்று கண்டுபிடிப்போம், உடனே அதனை புறக்கணிக்க வேண்டும்.

கேள்வி 179: தானியேல் எருசலேமுக்கு நேராக திரும்பி (கிப்லாவை நோக்கி) தேவனை தொழுதுக்கொண்டார். எருசலேமின் தேவாலம் நோக்கியே பழைய ஏற்பாட்டில் யூதர்கள் தொழுதுக்கொண்டார்கள். முஸ்லிம்களுக்கும் முதல் 12/13 ஆண்டுகளுக்கு மேலாக எருசலேமை நோக்கியே தொழுதுக்கொண்டார்கள். கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஏன் அது போல செய்வதில்லை.

பதில் 179: கிறிஸ்தவர்கள் எருசலேமின் தேவாலயத்தை நோக்கி தொழுது கொள்வதில்லை, என்ற பதிலுக்கு போவதற்கு முன்பாக, பழைய ஏற்பாட்டின் நபர்கள் தீர்க்கதரிசிகள், மற்றும் யூதர்கள் எருசலேம் தேவாலயம் கட்டப்படுவதற்கு முன்பு எப்படி தேவனை தொழுது கொண்டார்கள் என்பதை சில வரிகளில் பார்க்கலாம்.

a) நோவா முதற்கொண்டு தேவாலயம் கட்டும்வரை எல்லோரும், எல்லா இடங்களிலும்  பலிபீடம் கட்டி தொழுதார்கள்.

ஆதியாகமம் 8:20 அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.

ஆதியாகமம் 12:7 கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

யாத்திராகமம் 17:15 மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு,

நியாயாதிபதிகள் 6:24 அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்;  . . .

b) சாலொமோன் ராஜா தேவாலயம் கட்டியபிறகு அவர் ஜெபிக்கும் போது, இந்த ஆலயத்தை நோக்கி, வேண்டுகிறவர்களின் ஜெபத்தை நீங்கள் கேட்டு பதில் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

I இராஜாக்கள் 8:38. உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் அனைவரிலும் எந்த மனுஷனானாலும் தன் இருதயத்தின் வாதையை உணர்ந்து, இந்த ஆலயத்துக்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும், 39. உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து,

c) அதன் பிறகு யூதர்கள், எருசலேமை நோக்கி தொழுதார்கள்.

d) ஆனால், மேசியாவாகிய இயேசு வந்த பிறகு, பிதாவை உலகில் எல்லா இடங்களிலும் தொழுதுக்கொள்வார்கள் என்றுச் சொன்னார். இங்கு இயேசு தேவாலய திசையை மட்டும் நீக்கவில்லை, தேவாலயத்தையே நீக்கியுள்ளார்.

யோவான் 4:21. அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.

எனவே, கிறிஸ்தவர்கள் தேவனை தொழுதுக்கொள்ளும் போது, ஒரு இடமோ, திசையோ தேவையில்லை.

கேள்வி 180: முஸ்லிமள் தங்கள் நோன்பை முடித்துக்கொள்வதற்கு நாம் உதவி செய்யலாமா? உதாரணத்திற்கு, இந்த மாதத்தில் நோன்பாளிகளுக்காக மசூதிகளுக்கு திண்பண்டங்களை, பழங்களை வாங்கித் தரலாமா? 

பதில் 180: சிலவேளைகளில் கிறிஸ்தவர்கள் தேவையில்லாத விஷயங்களில் அதிகமாக அக்கரைக்கொண்டு, உலக மக்கள் மீது இயேசுவிற்கு இருக்கும் அன்பை விட, தங்களுக்குத் அதிக அன்பு இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்ள முயற்சி எடுக்கிறார்கள், அதனால், அனேக பிரச்சனைகளுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள்.

கீழ்கண்ட விவரங்களை நன்றாக கவனியுங்கள்.

 1. ஒரு முஸ்லிம் பசியாக இருந்தால், அவனுக்கு உணவு கொடு.
 2. ஒரு முஸ்லிம் தாகமாக இருந்தால், அவனுக்கு தண்ணீர் கொடு.
 3. ஒரு முஸ்லிம் உடையில்லாமல் இருந்தால், அவனுக்கு உடை கொடு.
 4. ஒரு முஸ்லிம் வீடு இல்லாமல் இருந்தாலும், உன்னிடம் பணம் அதிகமாக இருந்தால், அவனுக்கு ஒரு வீடு கட்டிக்கொடு.
 5. ஒரு முஸ்லிம் வியாதியுள்ளவனாக இருந்தால், அவனுக்கு உதவி செய், அவனை விசாரித்து பராமரித்து, மருந்துகள் கொடுத்து சுகப்படுத்து.
 6. ஒரு முஸ்லிம் அநியாயமாக சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தால், அவனை விசாரித்து ஆறுதல் சொல் முடிந்தால் அவன் விடுதலையாக்க முயற்சி எடு.
 7. ஒரு முஸ்லிம் அந்நியனாக இருந்தால், அவனுக்கு பாதுகாப்பு கொடுத்து சேர்த்துக்கொள். 

ஏனென்றால், உலகில் இன்னொரு மனிதனுக்கு நாம் என்ன செய்கின்றாயோ, அது தனக்கே செய்ததாக இயேசு கருதுகின்றார், இதனை நாம் இயேசுவின் போதனைகளில் பார்க்கமுடியும்.  அந்த மனிதன் யாராக இருந்தாலும் பிரச்சனையில்லை.

ஆனால், 

1) ஒரு முஸ்லிம் நோன்பு இருந்தால், அந்த நோன்பு சம்மந்தப்பட்ட எந்த விஷயத்திற்கும் உதவி செய்யாதே, இது கர்த்தருக்கு விரோதமான பாவமாகும்.

2) ஒரு முஸ்லிம் நோன்பு திறப்பதற்கு ஒரு பேரிச்சம் பழம் கூட நீ வாங்கித் தராதே, ஏனென்றால், அவனுடைய இறைநம்பிக்கையை நீ ஆதரிப்பதாக இது கருதப்படும்.

3) ஒரு முஸ்லிமின் ஏழ்மையை போக்க உன்னால் முடிந்தால், ஒரு இலட்சம் ரூபாய் செலவு செய், ஆனால், அவன் நோன்பு திறப்பதற்கு ஒரு குவளை தண்ணீர் கொடுக்க முன் வராதே, ஏனென்றால், அவனது விக்கிர ஆராதனை என்ற பாவத்தில், அந்நிய தெய்வமாக கருத்தப்படும் அல்லாஹ்வை வணங்கும் பாவத்தில் உன்னை நீ இணைத்துக்கொள்வதாக அது கருதப்படும்.

4) ஒரு முஸ்லிமுக்கு விபத்து நேரிட்டல், ஒரு பாட்டில் இரத்தம் கொடுத்து அவனை காப்பாற்ற முயற்சி எடு, ஆனால், அவனது மார்க்க விஷயங்களில் உன் சுண்டு விரலிலிருந்து ஒழுகும் ஒரு  சொட்டு தண்ணீர் கொடுத்து, நீ கர்த்தரின் கோபத்திற்கு உள்ளாகாதே.

கிறிஸ்தவர்கள் நன்மை எது, தீமை எது என்பதை சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும். கிறிஸ்தவர்கள் அன்புக்கும், அறியாமைக்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை புரிந்துக்கொள்ளவேண்டும். செய்யப்படும் உதவி எல்லாம் அன்பாக கருதப்படாது. அறியாமையினால் செய்யும் சில உதவிகள் நம்மை அதிகமாக பாதிக்கும். 

உதவி செய்கிறேன் என்றுச் சொல்லி, நாம் மற்றவர்களின் மார்க்க விஷயங்களுக்காக உதவி செய்யக்கூடாது. முஸ்லிம்கள் சிறுவர்களுக்கு விருத்தசேதனம் (சுன்னத்துச்) செய்கிறார்கள் என்றுச் சொல்லி, நாம் அதற்கு டொனேஷன் தரக்கூடாது. மசூதி கட்டுமானப் பணிக்கு டொனேஷன் தரக்கூடாது. ஆனால், அதே முஸ்லிம் ஏழ்மையில் தவிக்கும் போது, உன் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டாவது, அவனுக்கு நீ உதவி செய்ய மறவாதே.

எனவே, ரமளான் மாதத்தில், முஸ்லிம்கள் நோன்பை முடித்துக்கொள்வதற்கு, நாம் ஒரு பேரிச்ச பழத்தையும், ஒரு குவளை தண்ணீரையும் தரக்கூடாது, இப்படி கொடுத்தால், இது கர்த்தருக்கு விரோதமான பாவமாகும். இஸ்லாம் என்பது பைபிளினால் சபிக்கப்பட்ட இன்னொரு சுவிசேஷத்தைச் சொல்கிறது, இன்னொரு இயேசுவை அறிமுகம் செய்கின்றது. பைபிள் இதனை கடுமையாக கண்டிக்கிறது, எனவே, அதிக நன்மையைச் செய்கிறேன் என்றுச் சொல்லி, நம் தலையில் நாமே நெருப்பை அள்ளி போட்டுக்கொள்ளக்கூடாது. நம் ஊர்களில் நடக்கும் மாரியம்மன் திருவிழாக்களில் கூழ் 

ஊற்றுவதற்கும், கோவில் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கும் ஒரு கிறிஸ்தவராக இருந்துக் கொண்டு, நீங்கள் பணத்தை கொடுப்பீர்களா? அதே போலத்தான் இதுவும். 

முஸ்லிம்களை நேசியுங்கள், ஆனால், அவர்களின் மார்க்க விஷயமாக, கர்த்தருக்கு அறுவருப்பான பாவங்களுக்கு பங்காளிகளாக ஆகாதிருங்கள்.

தேதி: 3rd May 2020


2020 ரமளான் தொடர் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள் பக்கம்