2020 ரமளான் - சின்னஞ்சிறு கேள்விகள் பதில்கள் 1000: 'ஹதீஸ்கள்/சீரா': பாகம் 9

இதுவரை பல தலைப்புக்களில் கேள்வி பதில்களைக் கண்டோம், இந்த தொடரில் "ஹதீஸ்கள்/சீராக்கள்" என்ற தலைப்பில் 30 கேள்வி பதில்களைக் காண்போம்.

சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000: 'ஹதீஸ்கள்/சீரா' (241 – 270) - பாகம் 9

கேள்வி 241: ஹதீஸ்கள் என்றால் என்ன?

பதில் 241: இஸ்லாமிய நபி முஹம்மதுவின் சொல்லும் செயல்களும் அடங்கிய தொகுப்பை ஹதீஸ்கள் என்பார்கள்.  சன்னி முஸ்லிம்களுக்கும் ஷியா முஸ்லிம்களுக்கும் தனித்தனி ஹதீஸ் தொகுப்புக்கள் உள்ளன.

கேள்வி 242: ஹதீஸ்கள் கூட அல்லாஹ்வின் வஹியா?

பதில் 242: இஸ்லாமின் படி ஹதீஸ்களும் அல்லாஹ்வின் மூலமாக முஹம்மதுவிற்கு கொடுக்கப்பட்டதே (வஹியே) ஆகும்.  முஹம்மது முஸ்லிம்களின் வழிகாட்டி, அல்லாஹ்விடமிருந்து பெற்றுத்தான் அவர் முஸ்லிம்களுக்கு வழிகாட்டினார் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

 

கேள்வி 243: ஹதிஸ்கள் அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டுள்ளதா?

பதில் 243: இல்லை, ஹதீஸ்களை பாதுகாப்பேன் என்று அல்லாஹ் வாக்கு கொடுக்கவில்லை, இதைப் பற்றி குர்‍ஆனில் வசனமில்லை. மேலும் முஹம்மதுவிற்கு பிறகு, குர்‍ஆனை தொகுத்த உஸ்மான் கலீஃபா அவர்களும், இதர சஹாபாக்களும் ஹதிஸ்களை புத்தக வடியில் எழுதிவைக்க முயற்சி எடுக்கவில்லை.

கேள்வி 244: ஹதிஸ்கள் அல்லாஹ்வினால் பாதுகாக்கப்படவில்லையென்றால், அது அல்லாஹ்வின் வஹி இல்லையா?

பதில் 244: ஹதீஸ்களும் அல்லாஹ்வின் வஹி என்று தான் இஸ்லாமும் சொல்கிறது, முஸ்லிம்களும் இதைத் தான் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.  தன் வஹியை பாதுகாப்பதா? அல்லது அழிந்து தொலைந்து போகட்டும் என்று விட்டுவிடுவதா? என்று அல்லாஹ் தான் முடிவு செய்யவேண்டும்.

சரி, அல்லாஹ் தன் ஹதீஸ் வஹியை பாதுகாத்தானா? இல்லையா? என்று கேட்டால், "ஹதீஸ்கள் பாதுகாக்கவில்லை" என்று இஸ்லாம் பதில் கூறும்.

முஹம்மது உயிரோடு இருக்கும் போது, தனக்கு இறக்கப்பட்ட குர்-ஆன் வசனங்களை (வஹியை) அவ்வப்போது, தோல்களிலும், எலும்புகளிலும், இலைகளிலும் எழுதும் படி செய்தார். இருந்தாலும், முஸ்லிம்கள் அதிகமாக மனப்பாடம் செய்துக்கொள்வதையே அதிகமாக நம்பினர். முஹம்மது உயிரோடு இருக்கும் போது இன்று நம்மிடம் உள்ள (114 அத்தியாயங்கள் அடங்கிய) முழு குர்-ஆனையும் அவர் கண்களால் காணவில்லை.

ஆனால், முஹம்மது பெற்றுக்கொண்ட இதர வஹியை தன் பேச்சிலும், செயலிலும் காட்டினார். இவ்வஹி புத்தகமாக முஹம்மதுவின் காலத்தில் எழுதப்படவில்லை. முஹம்மதுவிற்கு பிறகு 200+ ஆண்டுகளுக்கு பிறகு தான் பேச்சு வழக்கில் உலாவிய கதைகளை (அல்லாஹ்வின் வஹியை) சில முஸ்லிம் அறிஞர்கள் தொகுத்து புத்தகமாக்கினார்கள், அவைகளைத் தான் நாம் ஹதீஸ்கள் என்கிறோம். ஒரு கதை 200 ஆண்டுகளுக்கு மேலாக வாய்வழியாக பரவினால் என்னவாகும்? அக்கதையின் உண்மைக்கரு சிதையும், பல பொய்கள் சேர்க்கப்படும்.

பார்க்க: அல்லாஹ் எப்படி தன் ஹதீஸ் வஹியை கறைபடுத்தப்பட விட்டுக்கொடுத்தான்

 

கேள்வி 245: எத்தனை ஹதீஸ்கள் ஆரம்பத்தில் தொகுக்கப்பட்டன, அவைகளில் எத்தனை உண்மையென ஒப்புக்கொள்ளப்பட்டன.

பதில் 245: ஒரே வரியில் சொல்லவேண்டுமென்றால், ஹதீஸ்களில் 1.5% சதவிகிதத்திற்கும் குறைவான ஹதீஸ்கள் உண்மையென்றும், மீதமுள்ள 98.5% சதவிகிதத்திற்கும் அதிகமான ஹதீஸ்கள் பொய்யானவை என்றும் இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இஸ்லாமிய சமுதாயம் பெரிய அளவில் இரண்டாக பிரிந்துள்ளது, ஒன்று சன்னி (சுன்னி) முஸ்லிம்கள், அடுத்தது ஷியா முஸ்லிம்கள்.

சன்னி முஸ்லிம்கள் தான் பெரும்பான்மை என்பதால், அவர்கள் நம்பும் புத்தகங்களை மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகின்றது. ஷியா முஸ்லிம்களின் புத்தகங்களை நாம் அதிகமாக ஆய்வு செய்வதில்லை.

சன்னி முஸ்லிம் சமுதாயம் 6 வகையான ஹதீஸ்கள் அதிகார பூர்வமான ஹதீஸ்கள் என்று நம்புகிறார்கள். இவைகளில், முதலாவது புகாரி என்பவரால் தொகுக்கப்பட்ட ஹதீஸ்கள், இரண்டாவதாக, முஸ்லிம் என்பவரால் தொகுக்கப்பட்ட ஹதீஸ்கள். இப்படி, குர்-ஆனுக்கு அடுத்தபடியாக இவ்வதீஸ்கள் முஸ்லிம்களுக்கு வழிகாட்டிகளாக உள்ளன.

கீழ்கண்ட அட்டவணையில் இவ்வதீஸ்கள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன (புகாரி, முஸ்லிம், நஸயி, அபூதாவுத், திர்மிதி, இப்னு மாஜா).

படம்: சன்னி பிரிவினரின் அதிகாரபூர்வமான 6 ஹதீஸ் தொகுப்புக்கள்

முஹம்மதுவிற்கு பிறகு, 200 – 250 ஆண்டுகள்வரை, வாய் வழியாக முஹம்மது பற்றிய கதைகள் உலாவந்தபடியினால், அல்லாஹ்வின் வஹியில் பல புதிய பொய்யான விவரங்கள் மக்களின் வாய்வழியாக பரப்பப்பட்டது. 

உதாரணம்:

புகாரி:

புகாரி (கி.பி. 810 - 870) என்ற இஸ்லாமியர் ஹிஜ்ரி 194ல் பிறக்கிறார். பல ஆண்டுகள் பாடுபட்டு, பல இடங்களுக்குச் சென்று ஹதீஸ்களை சேகரித்தார். 

  • அவர் சேகரித்த ஹதீஸ்களின் எண்ணிக்கை: 6,00,000 (ஆறு லட்சம்).
  • இவைகளில் ஆதாரபூர்வமான, உண்மையான ஹதீஸ்கள் எவைகள் என்று அவர் ஆய்வு செய்து கண்டுபிடித்த எண்ணிக்கை: 7,397
  • அப்படியானால், மூதமுள்ள 5,92,603 ஹதீஸ்கள் பொய்யானவை, இட்டுக்கட்டப்பட்டவை, கறைப்படுத்தப்பட்டவை என்று அவர் ஒதுக்கிவிட்டார்.
  • இதனை சதவிகிதத்தின் படி பார்த்தால், அவர் சேகரித்தவைகளில் 1.23% தான் உண்மையானவை, 98.77% பொய்யானவையாகும்.

இதே போல, சன்னி முஸ்லிம்கள் நம்பும் ஆறு ஹதீஸ் தொகுப்புக்கள் பற்றி மேற்கண்ட அட்டவணையில் நான் பதித்துள்ளேன். 

கேள்வி 246: ஹதீஸ்களில்  பலவீனமான, உண்மையான ஹதீஸ்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே? உண்மையா?

பதில் 246: நாம் மேலே கண்ட விவரங்களின் படி, 1.5% ஹதீஸ்கள் தான் உண்மையானவை, மீதமுள்ளவை பொய்யானவை.

மொத்தமாக ஹதிஸ்களை நான்கு வகையாக முஸ்லிம்கள் பிரிக்கிறார்கள் (இந்த நான்கிற்குள்ளும் உப பிரிவுகள் உள்ளன).

1) ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை):

இந்த விவரத்தை நிச்சயம் முஹம்மது கூறியிருப்பார், செய்திருப்பார் என்று இஸ்லாமிய அறிஞர்கள் வகைப்படுத்தியவைகள், உண்மையான (ஸஹீஹ்) ஹதீஸ்கள் என்று கூறுகிறார்கள்.

2) மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது):

முஹம்மது சொல்லாத, செய்யாத விவரங்களை அவர் சொன்னார்/செய்தார் என்று பொய்யாக பரப்பப்பட்ட கதைகள் இந்த வகையைச் சார்ந்தவைகளாகும்.  யார் மூலமாக ஹதீஸ் கிடைத்ததோ, அந்த சங்கிலித்தொடரில் வருபவரில் ஒருவர் பொய்யராக இருந்தால், அவர் சொல்லும் ஹதீஸ்கள் பொய்யானவை என்று கருதப்படுகின்றது. ஏன் இப்படி பொய்கள்  ஹதீஸ்களில் கலந்துள்ளன என்பதற்கு பல காரணங்கள் உள்ளன, அவைகளை வேறு கேள்வியில் பார்ப்போம்.

சில உதாரணங்கள்:

  • கத்திரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும் மருந்தாகும்.
  • உங்கள் உணவில் கீரைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் அது ஷைத்தானை விரட்டியடிக்கும்.
  • ஆகாயத்தில் உள்ள பால் வெளி, அர்ஷின் கீழ் இருக்கும் பாம்பின் வியர்வையினால் படைக்கப்பட்டது.
  • தர்மம் செய்ய ஏதும் கிடைக்காவிட்டால் யூதர்களையும் கிறிஸ்துவர்களையும் சபியுங்கள்! அது தர்மம் செய்ததற்கு நிகராக அமையும்.
  • சாக்கடையில் விழுந்த ஒரு கவள உணவை யாரேனும் கழுவிச் சாப்பிட்டால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.
  • முட்டையும் பூண்டும் சாப்பிட்டால் அதிகமான சந்ததிகள் பெற முடியும்.
  • பெண்களிடம் ஆலோசணை கேளுங்கள்! ஆனால் அதற்கு மாற்றமாக நடங்கள்.
  • 160 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதை விட நாயை வளர்ப்பது மேலாகும்

3) மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது):

அறிவிப்பாளர்களில் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் இடம் பெறுவது மத்ரூக் ஹதீஸ்கள் எனப்படும்.  முந்தைய  பிரிவில் அந்த அறிவிப்பாளர் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டு இருக்கும். ஆனால், இந்த பிரிவில் உள்ளவர் 'பொதுவாக பொய்யர், என்று சந்தேகத்து உட்பட்டவராக இருப்பார்'.

4) ளயீப் (பலவீனமானது):

முஹம்மது இந்த விவரத்தை (ஹதீஸை) கூறினார்களா இல்லையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியவை ளயீப் ஹதீஸ்கள் எனப்படும். ஏன் இந்த சந்தேகம் வருகிறது? இவைகளுக்கு காரணங்கள் என்னவென்பதை தனி கேள்வியில் காண்போம்.

கேள்வி 247: இஸ்னத்(Isnad/Sanad - சங்கிலித்தொடர்) என்றால் என்ன? 

பதில் 247: இஸ்னத் என்றால் சங்கிலித்தொடர் என்றுச் சொல்லலாம். ஸனது என்பது இஸ்னத் என்பதின் பன்மையாகும். முஹம்மது கூறியவைகளையும், அவரிடம் பார்த்த செயல்களையும் எழுத்துவடிவில் தொகுத்த புத்தகங்களை (செய்திகளை) ஹதீஸ்கள் என்கிறோம்.

அவைகள் புத்தகங்களாக எப்போது தொகுக்கப்பட்டன, என்று கேட்டால், முஹம்மதுவின் மரணத்திற்கு 200 ஆண்டுகளுக்கு பிறகு அவைகள் புத்தகங்களாக எழுதப்பட்டன. அதுவரை அவைகள் வாய் வழியாக பரப்பப்பட்டன.

முஹம்மது ஒரு செய்தியை தம் சஹாபா என்கிற நண்பருக்குச் சொல்கிறார், அல்லது அவரது மனைவி ஆயிஷா அவர்களிடம் சொல்கிறார், அல்லது அவர்கள் அவருடைய செயல்களைப் பார்க்கிறார்கள். இந்த செய்தியை அவரது தோழரோ, மனைவியோ மற்றவர்களுக்குச் சொல்கிறார்கள். இவர்களிடம் செய்தியை கேட்ட மற்றவர்கள் வேறு நபர்களுக்குச் சொல்கிறார்கள். இப்படி 200+ ஆண்டுகள் முஹம்மது சொன்ன ஒரு செய்தி வாய் வழியாக பல நபர்கள் மூலமாக பரப்பப்படுகின்றது. கடைசியாக, கி.பி. 810க்கு பிறகு பிறந்த‌ புகாரி, முஸ்லிம் மற்றும் திரிமிதி போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் பல ஆண்டுகள் பல நாடுகளுக்கு சுற்றித்திரிந்து அனைவரிடமிருந்து செய்திகளை சேகரித்தார்கள்.

முஹம்மதுவின் தோழர்கள் மற்றும் குடும்பத்தார்கள் தான் நேரடியாக முஹம்மது சொல்ல அல்லது அவர் செய்யக்கண்டு செய்திகளை அறிந்தார்கள்.

மற்றவர்கள் அனைவரும் முஹம்மதுவை கண்டவர்கள் அல்ல, அவர்கள் வாய்வழியாக செய்திகளை கேட்டவர்கள். முஹம்மதுவின் தோழர்கள் முதற்கொண்டு, புகாரி/முஸ்லிம்/திர்மிதி போன்ற அறிஞர்களுக்கு முன்பு வரை யார் காதுவழியாக கேட்டார்களோ, அந்த தொடரைத் தான் இஸ்னத் என்பார்கள், அதாவது முஹம்மது தொடங்கி ஒரு சங்கிலி போன்று செய்தி, ஒருவர் மாறி ஒருவருக்கு சொல்லப்பட்டு கடைசியாக புத்தகமாக 200 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்டது.

இதனை சுருக்கமாக கீழ்கண்ட படத்தில் தமிழில் கொடுத்துள்ளேன்.

இந்த படத்தை பெரிய அளவில் பார்க்க இந்த தொடுப்பை சோடுக்கவும்.

கீழ்கண்ட இஸ்லாமிய தளத்தில் இதே விவரங்களை வெறு வகையான படத்தின் மூலமாக விவரித்துள்ளார்கள், அதனையும் க்ளிக் செய்து பார்க்கவும்:

www.islamic-awareness.org/hadith/ayyubchain.gif

இந்த கீழ்கண்ட வீடியோவில், ஸனது (சங்கிலித் தொடர்) இல்லாத ஹதீஸ்களை எப்படி கையாளுவது என்பதைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது:

புகாரியில் சனது இல்லாத ஹதீஸ்களை எப்படி அறிந்துகொள்ளவது?

கேள்வி 248: ஒரே நிகழ்ச்சி அல்லது விவரம் பல ஹதீஸ்களில் வருவது ஏன்?

பதில் 248: இந்த கேள்வியை படிப்பதற்கு முன்பாக, முந்தைய கேள்வியின் பதிலையும்,படங்களையும் (இஸ்னத்/ஸனது - சங்கிலித்தொடர்) படித்துக்கொள்ளவும்.

  • எந்த செய்தியாக இருந்தாலும், அது ஒருவரிடமிருந்து அதாவது முஹம்மதுவிடமிருந்து மட்டுமே வரும்.
  • முஹம்மதுவிடமிருந்து அது பல பேருக்கு வந்து சேருகிறது. முஹம்மதுவின் தோழர்கள், மதினாவில் இருந்த அன்ஸாரிகள், மற்றும் அவரது மனைவிகள் என்று அனைவரிடமும் செய்தி வந்து சேருகிறது.
  • இவர்களிடமிருந்தும் அந்த ஒரே செய்தி இன்னும் பலருக்கு சேருகிறது, இப்படி 200+ ஆண்டுகள் வாய்வழியாக பரவுகிறது.
  • கடைசியாக, புகாரி மற்றும் மூஸ்லிம் போன்ற அறிஞர்கள் செய்திகளை  சேகரிக்கும் போது, ஒரே நிகழ்ச்சி பல அறிவிப்பாளர்களின் மூலமாக  வந்ததாக ஹதீஸ்களில் பதிவு செய்கிறார்கள்.

கேள்வி 249: குர்‍ஆனில் சொல்லப்பட்டவைகளோடு ஹதிஸ்கள் முரண்படுமா?

பதில் 249: ஹதீஸ்களில் சொல்லப்பட்டவைகள் குர்‍ஆனோடு முரண்படும்.

முஸ்லிம் அறிஞர்கள், ஹதீஸ்களின் தரத்தை பரிசோதிக்கும்போது, அவர்கள் முன்வைத்த ஒரு நிபந்தனை என்னவென்றால், 'எந்த ஒரு செய்தி/ஹதீஸ், குர்‍ஆனில் சொல்லப்பட்டவைகளோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ முரண்படுமானால், அந்த ஹதீஸை பொய்யான/பல்வீனமான ஹதீஸாக கருதவேண்டும்' என்பதாகும்.

மேலே கண்ட பதில்களில் படித்ததின் படி, 98.5% ஹதீஸ்கள் பொய்யானவை என்று முஸ்லிம்கள்  கண்டரிந்து தரம் பிரித்துள்ளார்கள். புறக்கணிக்கப்பட்ட ஹதீஸ்களில் குர்‍ஆனுக்கு எதிராக உள்ள ஹதீஸ்களும் அடங்கும் என்பதை கவனிக்கவும்.

கேள்வி 250: முஹம்மதுவின் தோழர்களில்/உறவினர்களில் ஹதிஸ்களை அதிகமாக சொன்னவர்கள் யார்? 

பதில் 250: இஸ்லாமிய அறிஞர்கள் கீழ்கண்ட பட்டியலைத் தருகிறார்கள்:

  1. அபூ ஹுரைரா = 5374
  2. அப்துல்லா இப்னு உமர் (உமரின் மகன்) = 2630
  3. அனஸ் இப்னு மாலிக் = 2286
  4. ஆயிஷா அவர்கள் (முஹம்மதுவின் மனைவி) = 2210
  5. அப்துல்லா இப்னு அப்பாஸ் = 1660
  6. ஜபீர் இப்னு அப்துல்லாஹ் = 1540
  7. அபூ சையத் அல்துத்ரி = 1170

Source: questionsonislam.com/article/companions-who-narrated-most-hadiths

கேள்வி 251: ஹதீஸ்களை அறிவித்தவர்களில் அபூ ஹுரைரா முதலிடம் வகிக்கிறாரே! இவர் முஹம்மதுவோடு நபித்துவ தொடக்கம் முதல் இருந்தாரா?

பதில் 251: அபூ ஹுரைரா ஹிஜ்ரி 7ம் ஆண்டு இஸ்லாமை ஏற்றுக்கொண்டார் என்று இஸ்லாம் சொல்கிறது. அதாவது முஹம்மதுவோடு அபூ ஹுரைரா வெறும் இரண்டு ஆண்டுகளுக்குள் மட்டுமே வாழ்ந்திருக்கிறார் (சிலர் இரண்டு ஆண்டுகள் மூன்று மாதங்கள் என்றும் சொல்கிறார்கள்).

ஆனால் இவர் மட்டும் 5000க்கும் அதிகமான ஹதீஸ்களை எப்படி சொல்லமுடியும் என்ற சந்தேகம் வருகிறது. இந்த கீழ்கண்ட பட்டியலைப் பாருங்கள்:

  • 1. அபூ ஹுரைரா = 5374  (முதல் இடம்)
  • 4. ஆயிஷா =  2210 (நான்காவது இடம்)
  • 10. உமர் = 537  (பத்தாவது இடம்)
  • 11. அலி =  536 (பதினோராவது இடம்)
  • 31. அபூ பக்கர் = 142 (முப்பத்தி ஓராவது இடம்)

முஹம்மதுவோடு 23 ஆண்டுகள் இருந்தவர், ஹிஜ்ரி செய்தவர், நெருக்கமானவராகிய அபூ பக்கர் அவர்கள் வெறும் 142 நிகழ்ச்சிகளை (ஹதீஸ்களை) கூறியுள்ளார்கள், ஆனால், அதிகபட்சம் இரண்டாண்டுகள் மட்டுமே இருந்த அபூ ஹுரைரா மட்டும் முதல் இடத்தில் 5000க்கும் அதிகமான செய்திகளைச் சொல்லியுள்ளார். இதுமட்டுமல்ல, முஹம்மதுவிற்கு பிரியமான மனைவியாகிய‌ ஆயிஷா அவர்களும், உமர், அலி போன்ற சஹாபாக்களும் மிகவும் குறைவான ஹதீஸ்களை சொல்லியுள்ளார்கள்.

அபூ ஹுரைரா பொய் சொல்லக்கூடியவர் என்றும், கலீஃபாக்களுக்காக ஹதீஸ்களை இட்டுக்கட்டி பேசுபவர் என்றும், இவரை உமர் பெஹ்ரைன் நாட்டிக்கு ஆளுநராக நியமித்ததாகவும், அதன் பிறகு இவர் பணத்தில் உண்மையாக இல்லாமல் ஏமாற்றியதால், இவரை வேலை நீக்கம் செய்ததாகவும் கீழ்கண்ட இஸ்லாமிய தளம் கூறுகிறது.  இரண்டாம் கலிஃபா உமர் அவர்கள் இவரை எச்சரித்த பிறகு, அவரது மரணம் வரைக்கும் இவர் ஹதீஸ்களைச் சொல்வதை விட்டுவிட்டாராம். உமர் மரித்த பிறகு மறுபடியும் ஹதீஸ்களை சொல்ல ஆரம்பித்தவிட்டாராம்.

Abu-Hurayrah, the man who narrated thousands of Hadiths

ஒருவேளை அபூ ஹுரைரா பொய் சொல்பவராக இருப்பாரானால், இவர் சொன்ன ஹதீஸ்களை எப்படி நம்புவது?

கேள்வி 252: முஹம்மது சென்றுவிட்ட பிறகு "அவரது சொல் மற்றும் செயல்களை ஹதீஸ் புத்தகங்களாக தொகுத்துக் கொள்ளுங்கள்" என்று குர்‍ஆனில் ஏதாவது வசனம் உண்டா?

பதில் 252: இல்லை, குர்‍ஆனில் முஹம்மதுவின் சொல் மற்றும் செயல்களை புத்தகங்களாக தொகுத்து, அது சொல்வது போல முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று குர்‍ஆன் சொல்லவில்லை.

ஹதீஹ்களை விடுங்கள், அல்லாஹ் முஹம்மதுவிற்கு இறக்கிய குர்‍ஆன் வசனங்களையே ஒரு புத்தகமாக தொகுத்துக் கொள்ளுங்கள் என்று முஹம்மதுவிற்கும் குர்‍ஆன் சொல்லவில்லை, மற்றவர்களுக்கும் சொல்லவில்லை.

அப்படியானால் முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு, அபூ பக்கர் அவர்களும், அதன் பிறகு உஸ்மான் அவர்களும் குர்‍ஆன் வசனங்களை புத்தகமாக தொகுத்தது குர்‍ஆனுக்கு முரணான செயலா? என்ற கேள்வி எழுந்தால், "ஆம்" என்பது தான் பதில்.

குர்‍ஆனை புத்தகமாக தொகுத்தது, மனிதனின் சமயோசித புத்தியாகும், அல்லாஹ்வின் ஞானமல்ல‌. அல்லாஹ்விற்கும் அவனது நபிக்கும் தோன்றாத ஐடியா, சஹாபாக்களுக்கு தோன்றியதின் விளைவே, இன்று முஸ்லிம்கள் குர்‍ஆனை படித்துக்கொண்டு இருக்கிறார்கள். An idea can change your life என்று சொல்வது போல‌, குர்‍ஆனை புத்தகமாக தொகுக்கவேண்டும் என்ற ஐடியா தான் குர்‍ஆனை முஸ்லிம்களிடம் சேர்த்துள்ளது.

அல்லாஹ்வின் ஐடியா படி செய்திருந்தால்(குர்‍ஆனை மனப்பாடம் மட்டும் செய்திருந்தால்), இஸ்லாம் உலகில் இன்று இருந்திருக்குமோ! இல்லையோ! சந்தேகம் தான்.

கேள்வி 253: குர்‍ஆன் வசனங்களின் பின்னணி ஹதீஸ்களில் கிடைக்கும் என்கிறார்களே, அனைத்து குர்‍ஆன் வசனங்களுக்கும் பின்னணியை ஹதீஸ்களில் காணலாமா?

பதில் 253: இல்லை, குர்‍ஆனில் 6236 வசனங்கள் உள்ளன, இவைகள் அனைத்திற்கான பின்னணி ஹதீஹ்களில் இல்லை.

உதாரணம்: நான் "(திருக்குர்ஆன்" என்ற வார்த்தையை புகாரி ஹதீஸில் தேடிப்பார்த்தேன், அதாவது ஒரு நிகழ்ச்சியை குறிப்பிட்டுவிட்டு, அதன் பிறகு 'இந்த குறிப்பிட்ட குர்‍ஆன் வசனம்' இறங்கியது என்று வருகின்ற இடத்தை கணக்கிட்டால், நமக்கு 605 இடங்கள் வருகின்றன.

குர்‍ஆனில் உள்ள வசனங்களில் ~10% வசனங்களுக்கு பின்னணியை புகாரியில் காணலாம். இதர ஐந்து ஹதீஸ்களையும் சேர்த்தால் இன்னொரு 10% வசனங்களுக்கு பின்னணி கிடைக்கலாம்(போனால் போகட்டும் பெரிய மனசு எனக்கு). மொத்தத்தை கூட்டினால் ~20% வசனங்களுக்கு  பின்னணிகள் கிடைக்கலாம். மீதமுள்ள  80% வசனங்களுக்கு வேறு இஸ்லாமிய நூல்களிலிருந்தும், விளக்கவுரைகளிலிருந்தும், சீராக்களிலிருந்தும் கிடைக்கும். இன்னும் ஆழமாக ஆய்வு செய்தால், இந்த கேள்விக்கு  இன்னும் சரியான பதில் கிடைக்கும்.

கேள்வி 254: முஹம்மதுவின் சரித்திர நூல்களில் சொல்லப்பட்டவைகளோடு ஹதீஸ்கள் முரண்படுமா?

பதில் 254: ஆம், ஹதிஸ்களும், முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திர நூல்களும் முரண்படும்.

உதாரணம்: 

இப்னு இஷாக்கின் "சீரத் ரஸூலல்லாஹ்" என்ற சரித்திர நூல் தான், ஹதீஸ்களுக்கும் முந்தையது. இதில் சொல்லப்பட்ட பல விவரங்கள், ஹதீஸ்களில் இருப்பதில்லை. மேலும், பல தர்மசங்கடமான விவரங்கள் இந்த சீராவில் உள்ளன.  அதாவது "சாத்தானின் வசனங்கள்" பற்றிய நிகழ்ச்சி சீராவில் உள்ளது, ஹதீஸ்களில் இல்லை. 

குறிப்பு: ஹதீஸ்களில் இல்லை என்றுச் சொல்வதைக் காட்டிலும், மறைமுகமாக உள்ளது எனலாம்.

கேள்வி 255: சாத்தானின் வசனங்கள் பற்றி ஹதீஸ்களில் இல்லை என்றுச் சொல்வது உண்மையா?

பதில் 255: முஸ்லிம்களின் பிரதானமான ஹதீஸ் தொகுப்பு 'ஸஹீஹ் புகாரி' ஆகும். குர்‍ஆனுக்கு அடுத்தபடியான ஆதாரமாக புகாரி நூல் உள்ளது. இந்த நூலில், சாத்தானின் வசனங்கள் பற்றி குறிப்பு உண்டு. ஆனால், சீராக்களில் சொல்லப்பட்டது போன்று பின்னணி விளக்கம் அளிக்காமல் குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்க்க: நூல் புகாரி, எண்கள்: 1071 & 4862

1071. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நஜ்மு அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் இணைவைப்பவர்களும் ஏனைய மக்களும் ஜின்களும் ஸஜ்தாச் செய்தனர்.

4862. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (53 வது அத்தியாயமான) 'அந்நஜ்கி' அத்தியாயத்தை ஓதி (ஓதலுக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும், இணைவைப்பாளர்களும், ஏனைய மக்களும், ஜின்களும் சஜ்தாச் செய்தனர்.  இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்னு உலைய்யா(ரஹ்) தம் அறிவிப்பில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களை (அவர்கள் அறிவித்ததாக)க் குறிப்பிடவில்லை.

கேள்வி 256: சாத்தானின் வசனங்கள் பற்றிய பின்னணியை சுருக்கமாக விளக்கமுடியுமா?

பதில் 256: 

இந்த ஹதீஸின் (சாத்தானின் வசனங்களின்) பின்னணி:

அனேக‌ இஸ்லாமிய‌ர்க‌ள் இப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு நிக‌ழ்ச்சி (சாத்தானின் வசனங்கள்) ந‌டைபெற‌வில்லை என்றுச் சொல்கிறார்க‌ள். ஆனால், உண்மையில் "சாத்தானின் வ‌சன‌ங்க‌ள்" நிகழ்ச்சி ப‌ற்றிய‌ விவ‌ர‌ங்க‌ள் ஆர‌ம்ப‌கால‌ இஸ்லாமிய‌ நூல்க‌ளில் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. இது ம‌ட்டும‌ல்ல‌, இந்த‌ விவ‌ர‌ங்க‌ள் ஹ‌தீஸ்க‌ள் ம‌ற்றும் குர்‍ஆனில் உள்ள‌ விவ‌ர‌ங்க‌ளோடு ஒத்துப்போகிற‌து.

முஹ‌ம்ம‌து த‌ன்னை ந‌ம்புகிற‌வ‌ர்க‌ளின் துன்ப‌ங்க‌ளுக்கு ஒரு முடிவு க‌ட்ட‌வேண்டும் என்று விரும்பினார். அதே நேர‌த்தில் த‌ன் ஊர் ம‌க்க‌ளாகிய‌ ம‌க்காவின‌ரோடு ச‌மாதான‌மாக‌ இருக்க‌ விரும்பினார். இந்த பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட அல்லாஹ் ஒரு வெளிப்பாட்டை அனுப்புவார் என்று முஹ‌ம்ம‌து ந‌ம்பினார்.

"இறைத்தூதர் தன் மக்களின் நலனில் அதிக அக்கரையுள்ளவராக இருந்தார் மற்றும் மக்காவினரோடு ஒற்றுமையடைந்து சமாதானமாக இருக்க விரும்பினார்..." Tabari vol 6, page 107, 108.

இந்த சந்தர்ப்பத்தை சாத்தான் பயன்படுத்திக்கொண்டு முஹம்மதுவின் வாயில் தன் வசனங்களை போட்டுவிட்டான். முஹம்மது சாத்தானின் வார்த்தைகளை அப்படியே அல்லாஹ்வின் வார்த்தையாக வெளிப்படுத்திவிட்டார் மற்றும் மக்காவினரின் தெய்வங்களுக்கு மரியாதையும் செய்ய அனுமதித்து விட்டார்.

குர்‍ஆன் 53:19-20 நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?) இவைகள் உயர பறப்பவைகள், இவர்களின் மத்தியஸ்தம் அங்கீகாரத்தோடு ஏற்றுக்கொள்ளப்படும்.

முஹம்மதுவின் வார்த்தைகளை மக்கா மக்கள் ஏற்றுக்கொண்டனர், ஏனென்றால், இவர் அவர்களின் தெய்வங்களை அங்கீகரித்தார்.

"குரைஷிகள் இதை கேட்டதும், மட்டில்லா மகிழ்ச்சி கொண்டனர், மற்றும் அவர் தங்கள் தெய்வங்கள் பற்றி சொன்ன விதம் அவர்களுக்கு அதிக சந்தோஷத்தை கொடுத்தது..." Tabari vol 6, page 108.

இந்த இடத்தில் நடந்த நிகழ்ச்சியைத் தான் மேற்கண்ட ஹதீஸ்கள் கூறுகின்றன, அதனை இன்னொரு முறை இங்கு படியுங்கள்:

புகாரி 1071. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நஜ்மு அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் இணைவைப்பவர்களும் ஏனைய மக்களும் ஜின்களும் ஸஜ்தாச் செய்தனர்.

கவனிக்கவும், முஸ்லிம்களோடு சேர்ந்து இணைவைப்பாளர்கள் ஸஜ்தா (சிரம் பணிந்து தொழுதுக்கொள்வது) செய்தனர். இந்த ஹதீஸின் படி, முஸ்லிம்கள், இணைவைப்பாளர்களாகிய மக்கா மக்கள், ஜின்கள் என்று எல்லோரும் ஸஜ்தா செய்தனர்.

இதுவரை தங்கள் தெய்வங்களை திட்டிக்கொண்டு இருந்த முஹம்மது, இப்போது அவைகள் பற்றி நன்றாக கூறி குர்‍ஆன் வசனங்களை ஓதியுள்ளாரே என்ற மகிழ்ச்சியில், இணைவைப்பாளர்கள் ஒன்றாக சேர்ந்து தொழுதார்கள்.

பிறகு நடந்ததென்ன?

எல்லோரும் ஒன்றாக ஸஜ்தா செய்துவிட்டு, வீட்டிற்குச் சென்றுவிட்டனர். அதன் பிறகு காபிரியேல் தூதன் முஹம்மதுவை கடிந்துக்கொண்டு அவரின் தவறை திருத்தினார். இதனால், முஹம்மது குர்‍ஆனில் இருந்த அந்த சாத்தானின் வசன பகுதிக்கு பதிலாக வேறு வசனத்தைச் சொன்னார், மறுபடியும் இது மக்காவினரின் மனதை வேதனைக்குள்ளாக்கியது. முஹமம்து தன் பாவத்திற்காக அதிகமாக வேதனையடைந்தார், ஆகையால், காபிரியேல் முஹம்மதுவிடம் "அல்லாஹ் உன் தவறை லேசாக எடுத்துக்கொண்டார்" என்றுச் சொன்னார், அதாவது சாத்தானின் பொய்யான வசனத்தை குர்‍ஆனோடு சேர்த்த முஹம்மதுவின் பாவத்தை அல்லாஹ் அவ்வளவு பெரிய பாவமாக கருதவில்லை. இதோடு நின்றுவிடாமல், முந்தைய நபிகளும் இதே போல சாத்தானால் தூண்டப்பட்டு, இதே பாவத்தை செய்தார்கள், அதாவது சாத்தானின் வசனத்தை இறைவனின் வசனமாகச் சொன்னார்கள் என்றும் அல்லாஹ் கூறினார்.

சாத்தானின் வசனத்தை சொல்லிவிட்டோமே என்று துக்கப்பட்ட முஹம்மதுவை தேற்றும் அல்லாஹ்:

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:

குர்‍ஆன் 22:52. (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை; எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

குர்‍ஆன் 22:52. (நபியே!) உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு நபியும், தூதரும் (எதையும்) ஓதிய சமயத்தில் அவருடைய ஓதுதலில் ஷைத்தான் குழப்பத்தை உண்டு பண்ண முயற்சிக்காமல் இருக்கவில்லை. (அவர்களுடைய ஓதுதலில்) ஷைத்தான் உண்டுபண்ணிய (தப்பான)தை அல்லாஹ் நீக்கிய பின்னர்தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்தி விடுகின்றான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

இன்று நம்மிடமுள்ள குர்‍ஆனில், கீழ்கண்ட வசனத்தில், கடைசி பாகம் இருப்பதில்லை.

குர்‍ஆன் 53:19-20 நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?) இவைகள் உயர பறப்பவைகள், இவர்களின் மத்தியஸ்தம் அங்கீகாரத்தோடு ஏற்றுக்கொள்ளப்படும்.

சாத்தனின் வசனங்கள் பற்றிய விவரங்களை நமக்கு கீழ் கண்ட ஆரம்ப கால இஸ்லாமிய மூலங்களிலிருந்து (Early Muslim Resources) கிடைக்கின்றன:

(1) Ibn Ishaq, (இபின் இஷாக்)

(2) Wakidi, (வாகிடி)

(3) Ibn Sa’d, (இபின் சத்)

(4) al-Tabari, (அல்-தபரி)

(5) Ibn Abi Hatim, (இபின் அபி ஹடிம்)

(6) Ibn al-Mundhir, (இபின் அல்-முந்திர்)

(7) Ibn Mardauyah, (இபின் மர்டவ்யா)

(8) Musa ibn 'Uqba, and (மூசா இபின் அக்பா)

(9) Abu Ma'shar.[6] (அபு மஷர் )

இப்போதைக்கு இந்த விவரங்கள் போதும், இதைப் பற்றி விவரமாக வேறு கேள்வியில் காண்போம்.

கேள்வி 257: சன்னி ஹதீஸ்கள் ஆறும் தமிழாக்கம் செய்யப்பட்டு இணையத்தில் கிடைக்குமா?

பதில் 257: இல்லை, வெறும் இரண்டு தமிழாக்கங்கள் மட்டும்தான் முழுவதுமாக தமிழில் கிடைக்கிறது.

  • ஸஹீஹ் புகாரி
  • ஸஹீஹ் முஸ்லிம்

தொடுப்பு: www.tamililquran.com

கேள்வி 258: தபரி என்ற இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் பற்றி சிறிது விளக்கவும்.

பதில் 258: அபூ ஜபர் முஹம்மத் இப்னு ஜரீர் அத்தபரி  என்பது இவரது முழு பெயராகும்.  இவர் கி.பி. 839ம் ஈரானிலுள்ள அமோல், தபரிஸ்தானில் பிறந்தார்.  இவர் ஈராக்கில் உள்ள பாக்தாத்தில் கி.பி. 923ம் ஆண்டு காலமானார். இவர் ஒரு முக்கியமான இஸ்லாமிய அறிஞராவார். இவர் இஸ்லாமின் ஆரம்ப கால விவரங்களை பல அறிஞர்களிடமிருந்து சேகரித்து தொகுத்தார்.

இவருக்கு பிறகு வந்த இஸ்லாமிய அறிஞர்கள்  தபரியின் இந்த தொகுப்பை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.  இவரது தொகுப்பிலிருந்து தான், அல்பிரட் குல்லேம் (Alfred Guillaume)  இப்னு இஷாக்கின் "முகம்மதுவின் சரிதையிலிருந்து" தொலைந்து விட்ட பகுதிகளை மீட்டு எடுத்தார். இப்னு ஹிஷாம் தம்முடைய சரிதையில் அவ்விவரங்களை வேண்டுமென்றே நீக்கி இருந்தார்.

இஸ்லாமின் சுன்னி பிரிவு முஸ்லிம்களின் கோட்பாடுகளுக்கு  தபரியின் தொகுப்பு ஒரு முக்கியமான மூலமாக இருந்துள்ளது. 

இவர் குர்‍ஆன் விளக்கவுரையையும் முஹம்மதுவின் வாழ்க்கை சரிதையையும் எழுதினார்:

  • Tafsir al-Tabari ('Commentary of al-Tabari'); Qur'anic commentary (tafsir).
  • Tarikh al-Rusul wa al-Muluk (History of the Prophets and Kings), historical chronicle, often referred to as Tarikh al-Tabari.

முக்கிய குறிப்பு: தபரி என்று பெயர் பெற்ற இன்னொருவர் இருக்கிறார், அவரோடு மேலே குறிப்பிட்ட தபரியை சம்மந்தப்படுத்தி குழப்பிக்கொள்ளவேண்டாம்.

இவரது பெயர் "அலி பி. இரப்பான் தபரி, (Ali b. Rabban at-Tabari) ஆகும், இவர் கி.பி. 855ம் ஆண்டு காலமானார். இவர் "Firdaws al-Hikma (கி.பி. 850)" மற்றும் "The Book of Religion and Empire" என்ற புத்தகங்களையும், இதர  நூல்களையும் எழுதியுள்ளார்.  இவர் கிறிஸ்தவ பின்னணியைக் கொண்டவர், இவர் இஸ்லாமை தழுவியிருந்தார். மேலும் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் இவர் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி 259: முஹம்மது தமது மரணத்தருவாயில் யூத கிறிஸ்தவர்களை சபித்ததாக வரும் ஹதீஸ் எது?

பதில் 259: முஹம்மது மரிக்கும் போது,  மற்றவர்களை சபித்தார், பார்க்க‌: 

புகாரி நூல் எண்கள்: 435, 436:

435. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வையைத் தம் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும்போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது 'தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்!' எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள்.

இயேசு தன்னை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். இவ்விருவருக்கும் இடையே இருக்கும் வித்தையாசத்தை கவனித்தீர்களா?

லூக்கா 23: 34. அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். . .

கேள்வி 260: "ஸஃபியுர் ரஹ்மான் முபாரக்பூரி" எழுதிய “ரஹீக்” புத்தகத்தின் முக்கியத்துவம் என்ன?

பதில் 260: முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு ஹதீஸ்களில் முழுவதுமாக இல்லை. குர்-ஆனில் முஹம்மதுவின் வரலாறு 1% கூட இல்லை என்றுச் சொல்லலாம். ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை ஒரு கோர்வையாக எழுதினார்கள், அதில் முக்கியமானவர் இப்னு இஷாக் என்பவர் ஆவார். இவர் எழுதிய கையெழுத்துப் பிரதிகள் இப்போது நம்மிடம் இல்லை, ஆனால், இவரைத் தொடர்ந்து இப்னு இஷாம், மற்றும் தபரி போன்றவர்கள், இவருடைய புத்தகத்திலிருந்து முழுவதுமாக மேற்கோள் காட்டியுள்ளார்கள். அதாவது, அழிந்துவிட்ட இப்னு இஷாக்கின் சரித்திரம் முழுவதும் இவ்விருவரின் புத்தகங்களில் கிடைத்துவிடும். தமிழ் முஸ்லிம்களின் துரதிர்ஷ்டம் என்னவென்றால், இந்த சரித்திரங்கள் அனைத்தும் இதுவரை தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை என்பதாகும் [ஆங்கிலத்தில் உண்டு]. 

”அர்ரஹீக்குல்  மக்தூம்” அல்லது ரஹீக் என்ற பெயரில் ஒரு புத்தகம் தமிழில் முஸ்லிம்களால் மொழியாக்கம் செய்யப்பட்டது. இதில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு முஹம்மதுவின் சரித்திரம் ஒரு கோர்வையாக எழுதப்பட்டுள்ளது. 

இப்புத்தகத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. ”உலக இஸ்லாமிய லீக்” என்ற இயக்கம் மக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.  1976ம் ஆண்டு, முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை இஸ்லாமிய சரித்திரத்தின் அடிப்படையில் சிறப்பாக எழுதுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் (மொத்தம் 1,50,000 சௌதி ரியால்கள்) என்று அறிவித்தது. உலகமனைத்திலும் இருந்து 1182 ஆய்வுகள் பல மொழிகளில் பல இஸ்லாமிய அறிஞர்கள் எழுதி அனுப்பினார்கள். அதில் கடைசியாக 183 ஆய்வுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, முடிவாக 5 ஆய்வுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் முதல் பரிசை தட்டிச்சென்றது இந்த “ரஹீக்” என்ற புத்தகம். இதனை தமிழிலும் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்கள். முஹம்மதுவைப் பற்றிய விவரங்களை கோர்வையாக படிக்க இந்த புத்தகம் பேருதவியாக உள்ளது. 

ஆக, பாகிஸ்தானும், சௌதியும் (உலக முஸ்லிம் தலைவர்கள்) ஒன்றாக சேர்ந்து ஆய்வு செய்து, இது தான் உண்மையான ஆதார பூர்வமான முஹம்மதுவின் சரித்திரம் என்று பாராட்டி, பரிசுகள் வழங்கிய புத்தகம் தான் ரஹீக் (அர்ரஹீக்குல் மக்தூம் என்றால், முத்திரையிடப்பட்ட உயர்ந்த மதுபானம் என்று பொருள்). இதன் இன்னொரு சிறப்பு, இப்புத்தகத்தின் ஆசிரியர் ஒரு இந்தியர் (உத்திர பிரதேசம்) என்பதாகும்.

கேள்வி 261: முஹம்மது பாவங்கள் செய்யவில்லை என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள், ஆனால் அவர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரியதாக ஹதீஸ்களில் உள்ளது என்கிறார்கள், இது உண்மையா?

பதில் 261: முஹம்மது சொன்னதை நம்பவேண்டுமா? அல்லது முஸ்லிம்கள் சொல்வதை நம்பவேண்டுமா?

முஹம்மது செய்த விண்ணப்பத்தை முஸ்லிம்களின் நம்பகமான ஸஹீஹ் (புகாரி) ஹதீஸ்களில் காண்போம்.

a) நான் (முஹம்மது) பாவங்கள் புரிந்துள்ளேன்:

பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6306

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

'அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துன}ப இல்லா அன்த்த' என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும்.

(பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட் கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.) …. என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார் 

b) எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக

பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6368

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' …

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும் பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், நரகத்தின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், செல்வத்தின் தீமைகளிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், நான் உன்னிடம் வறுமையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை என்னிலிருந்து கழுவுவாயாக! மேலும், அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக)

c) நான் வேண்டுமென்றே அறிந்து செய்த பாவங்களையும் மன்னிப்பாயாக:

பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6398

அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: ரப்பிஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபி ஃபீ அம்ரீ குல்லிஹி, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ கத்தாயாய, வ அம்தீ, வ ஜஹ்லீ, வ ஜத்தீ வ குல்லு தாலிக்க இந்தீ. அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ மா கத்தகித்து, வ மா அஉலன்த்து, அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு, வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர்.

(பொருள்: என் இறைவா! என் குற்றங்களையும், என் அறியாமையையும், என் செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடுவாயாக. மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா! நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும் மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை. இறைவா! நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும் பம்ரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.

d) என்னிடம் பாவம் இல்லாமல் இல்லை, மன்னித்திடு:

பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6399

அபூ மூஸா அல் அஷ்அரீ(ரஹ்) அவர்கள்கூறினார்:

நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தித்துவந்தார்கள். அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ, அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ ஹஸ்லீ, வ ஜித்தீ, வ கத்தயீ, வ அம்தீ, வ குல்லு தாலிக்க இந்தீ.

(பொருள்: இறைவா! என் குற்றங்களையும் என் அறியாமையையும், என் செயல்களில் நான் மேற்கண்ட விரயத்iயும், மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக! இறைவா! நான் விளையாட்டாகச் செய்ததையும், வினையாகச் செய்ததையும், தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றேச் செய்ததையும் மன்னித்திடுவாயாக! இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை.)

இந்த பாவமன்னிப்பின் ஜெபத்தில் அவர் "பாவம்" என்பதற்கு வேறு ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார். அவர் "தன்ப்" என்ற வார்த்தைக்கு பதிலாக "க்ஹடிய – khati’a" என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்.

இஸ்லாமிய கலைக் களஞ்சியம் (The Encyclopedia of Islam [9]) "க்ஹடிய – khati’a" என்ற வார்த்தையின் பொருளை கீழ்கண்டவாறு விவரிக்கிறது:

"Moral lapse, sin, a synonym of dhanb. The root means "to fail, stumble", "make a mistake", "of an archer whose arrow misses the target".

"நற்குண குறைபாடு, பாவம், 'தன்ப்' என்ற வார்த்தைக்கு சுமமானது". இதன் மூல வார்த்தையின் பொருள் "தவறுவது, தடுமாறுவது", "தவறு செய்வது", "குறி தவறிய அம்பை எய்தவன்" என்பவைகளாகும்.

முஹம்மது தன்னுடைய விண்ணப்பத்தில் (ஜெபத்தில்), பாவத்தின் அனைத்து விதங்களையும் அங்கீகரிக்கிறார்:

அதாவது:

  • தீய செயல்கள்,
  • தவறுகள்,
  • தெரியாமல் செய்த தவறுகள்,
  • பிழைகள்,
  • தற்செயலாக செய்த பிழைகள்,
  • வேண்டுமென்றே தெரிந்தே செய்த பாவங்கள்,
  • கடந்த கால பாவங்கள்,
  • எதிர்கால பாவங்கள் மற்றும்
  • பெரிய பாவங்கள்

என்று அனைத்து விதமான பாவங்கள் பற்றியும் கூறுகிறார். இந்த செயல்கள் அனைத்தும் வெறும் சிறிய "தவறுகள்" அல்ல, அதற்கு பதிலாக இவைகள் அனைத்தும் "தண்டனைக்கு உகந்த பாவங்கள்" ஆகும், இதனை முஹம்மதுவின் விண்ணப்பத்தை கவனித்தால் புரிந்துக்கொள்ளலாம்.

முஹம்மது ஒரு பாவி என்று அவரே அங்கீகரித்து விட்டார். அவர் செய்த பாவ மன்னிப்பின் விண்ணமானது, அவர் தன்னுடைய பாவத்தின் தீவிரத்தை அறிந்திருக்கிறார் என்பதை நமக்கு காட்டவில்லையா? அல்லாஹ் பாவங்கள் செய்யும் மனிதர்களை தண்டிக்கிறார் என்பதை அறிந்திருந்தார், அதனால் தான் அவர் பாவமன்னிப்பிற்காக அல்லாஹ்விடம் வேண்டினார். தன்னுடைய குற்றங்களுக்காக நரகத்தில் எரிய முஹம்மது விரும்பவில்லை.

கேள்வி 262: ஹதீஸ்களில் விஞ்ஞான பிழைகள் உண்டா? நிலவு பிளந்த அற்புத்தத்தை முஹம்மது செய்தாரா?

பதில் 262: சந்திரன் பிளக்கப்பட்டதைப் பற்றி முஸ்லிம் ஹஹீஸில் பதிவுசெய்யப்பட்டுள்ள விவரங்கள்:

5395. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நான் இறைவனின் தூதர் என்பதற்கு) நீங்கள் சாட்சிகளாக இருங்கள்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. 

மேலும் பார்க்க: ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்கள்: 5396,  5397, 5398, 5399, 5400

இந்த ஹதீஸ்களை மேலோட்டமாக படிக்கும் போதும், அவைகளில் தவறுகள் இருப்பதை காணமுடியும்.

கேள்விகள்: 

  • யாரிடம் முஹம்மது “(நான் இறைவனின் தூதர் என்பதற்கு) நீங்கள் சாட்சிகளாக இருங்கள்” என்று கூறினார்?  முஹம்மதுவின் தோழர்கள் ஏற்கனவே அவரை நபி என்று நம்பிவிட்டார்களே! அவர்களிடம் ஏன் மறுபடியும் நீங்கள் சாட்சிகளாக இருங்கள் என்று கேட்கிறார்?
  • சந்திரனின் விட்டம் எவ்வளவு என்று இந்த ஹதீஸை அறிவித்த அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் என்பவருக்குத் தெரியுமா?
  • சந்திரன் இரண்டாக பிளந்து ஒரு துண்டு ஹிரா மலைக்கு மேற்பகுதியில் காணப்பட்டதாம், இன்னொரு துண்டு ஹிரா மலைக்கு கீழ்பகுதிக்கு சென்றதாம். 
  • பூமியில் அளவில் நான்கில் ஒரு பாகம் சந்திரனின் அளவு ஆகும் (27%).
  • சந்திரனின் விட்டம் 1737 கிலோ மீட்டராகும்.
  • பூமியில் நின்றுக்கொண்டு சந்திரனை பார்ப்பவர்கள் (அக்கால அரேபியர்கள்), சந்திரனின் அளவு நம் இரண்டு கைகளால் பிடிக்கக்கூடிய அளவிற்கு இருக்கும் ஒரு பந்து போல என்று நினைத்துக்கொண்டு மேற்கண்ட ஹதீஸை சொல்லியுள்ளார்கள். ஆனால், 1737 கிமீ விட்டம் கொண்ட  ஒரு பந்தை இரண்டாக பிளந்தால், அதன் பின்னால், ஹிரா மலையென்ன, அரேபியாவின் பாதி அப்படியே மறைந்துவிடும். 

மேற்கண்ட ஹதீஸ் ஒரு பொய்யான ஹதீஸ் என்பது இதிலிருந்து நமக்குத் தெரிகின்றது. ஒருவர் கனவு கண்டால், அதில் மேற்கண்ட விதமாக பார்த்தார் என்றுச் சொன்னால், அதனை ஏற்கலாம், ஏனென்றால் கனவில் (கற்பனைப்போன்று) எல்லாம் சாத்தியம். ஆனால், இங்கு நாம் ஆய்வு செய்துக்கொண்டு இருப்பது, உண்மையான நிலவு இரண்டாக பிளந்தது பற்றியதாகும். எனவே, முஹம்மது சந்திரனை பிளந்து அற்புதம் செய்தார் என்பது பொய்யான கூற்று மேலும், குர்-ஆனின் போதனைக்கு எதிராக ஒன்று.

கேள்வி 263: ஷியா முஸ்லிம்கள் எத்தனை ஹதீஸ் தொகுப்புக்களை பின்பற்றுகிறார்கள்

பதில் 263: சன்னி முஸ்லிம் பிரிவினர் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் என்று "ஆறு தொகுப்புக்களை" வைத்துள்ளார்கள் என்பதை வேறு ஒரு பதிலில் கண்டோம் (புகாரி, முஸ்லிம், நஸயி, அபூதாவுத், திர்மிதி, இப்னு மாஜா).

இதே போன்று ஷியா முஸ்லிம்கள் தங்களுக்கென்று நான்கு ஹதீஸ் தொகுப்புக்களை அதிகாரபூர்வமானதாக கருதுகிறார்கள். இதனை “அல்-குதுப் அல்-அர்பா (al-Kutub al-ʾArbaʿah)”  என்பார்கள். குதுப் என்றால் புத்தகங்கள், அர்பா என்றால் நான்கு என்று பொருள்.

அவைகள்: (நூல், தொகுத்தவர், எண்ணிக்கைகள்)

  1. கிதாப் அல்-காஃபி  (முஹம்மது இப்னு யாகூப் அல்-குலேனி அல்-ராசி, 16,199)
  2. மன் லா யஹதுருஹு அல்-ஃபாகிஹ் (முஹம்மது இப்னு பாபாவே, 9,044)
  3. தஹ்திப் அல்-அஹ்கம் (ஷேக் முஹம்மது துசி, 13,590)
  4. அல்-இஸ்திப்சர் (ஷேக் முஹம்மது துசி, 5,511)

மூலம்: https://en.wikipedia.org/wiki/The_Four_Books

கேள்வி 264: முதலில் எழுதப்பட்டவைகள் எவை? ஹதீஸ்களா அல்லது முஹம்மதுவின் சீரா என்கின்ற வாழ்க்கை சரிதை நூல்களா?

பதில் 264:

ஸஹீஹ் ஹதீஸ்களான புகாரி, முஸ்லிம் தொகுப்புக்களை விட இப்னு இஷாக்கின் சீரா (வாழ்க்கை சரித்திரம்) தான் முந்தையது.

இப்னு இஷாக் - முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரம்

முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை முதன் முதலாக தொகுத்து எழுதிய இப்னு இஷாக் என்பவர், ஹிஜ்ரி 85ல் பிறந்தவர். இவருடைய சரித்திரம் தான் சஹீஹ் ஹதீஸ்களை விட முந்தையது. ஆனால், முஸ்லிம்கள் இவரது சரித்திரத்தை ஆதார பூர்வமானதாக கருதமாட்டார்கள், ஏனென்றால், சில தர்மசங்கடமான விவரங்கள், இந்த சரித்திரத்தில் இருப்பதினால் தான் (உதாரணத்திற்கு, சாத்தானின் வசனங்களை முஹம்மது அல்லாஹ்வின் வஹியாக சொன்ன நிகழ்ச்சியைச் சொல்லலாம்).

படம்: இப்னு இஷாக்கின் மற்றும் ஹதீஸ்களின் காலவரிசை

ஹிஜ்ரி 100க்குள் இப்னு இஷாக்கின்  பிறப்பு, ஹிஜ்ரி  200க்குள்  புகாரியின் பிறப்பு. முஸ்லிம்கள் இப்னு இஷாக்கின் சரித்திரத்தை ஆதாரமாக எடுத்துக் கொண்டு இருந்திருந்தால், இன்னொரு 100 ஆண்டுகளில் நுழைந்த பொய்களை தவிர்த்து இருந்திருக்கலாம். 

(குறிப்பு:இப்னு இஷாக்கின் சரித்திரம், புத்தகமாக நம்மிடம் இப்போது இல்லை, ஆனால், அவரது மாணவர்களாகிய இப்னு இஷாம், மற்றும் தபரி போன்றவர்கள், அவரது புத்தகத்திலிருந்து பல மேற்கோள்களை சுட்டிக் காட்டியுள்ளார்கள். அவைகளை வைத்துத் தான், இப்னு இஷாக்கின் சரித்திர விவரங்கள் கிடைத்துள்ளன.)

கேள்வி 265: அல்லாவிற்கு 99 பெயர்கள் உள்ளன என்றுச் சொல்லும் ஹதீஸ் எது?

பதில் 265: புகாரியிலும், முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பிலும் இரண்டு ஹதீஸ்கள் கிடைத்துள்ளன.

ஸஹீஹ் புகாரி எண்கள்: 6410 & 7392

புகாரி எண் 6410. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான - பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி எண் 7392. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: நிச்சயமாக அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது - நூற்றுக்கு ஒன்று குறைவான - பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கத்தில் நுழைவார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) 'அஹ்ஸா' எனும் சொல்லுக்கு 'மனனமிடல்' என்று பொருள்.

ஸஹீஹ் முஸ்லிம் எண்கள்: 5198 & 5199

முஸ்லிம் எண் 5198. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்குத் தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கம் செல்வார். மேலும், அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("அவற்றை மனனமிட்டவர்" என்பதைக் குறிக்க "மன் ஹஃபிழஹா" என்பதற்குப் பகரமாக) "மன் அஹ்ஸாஹா" என இடம்பெற்றுள்ளது.

முஸ்லிம் எண் 5199. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்குத் தொண்ணூற்று ஒன்பது (நூற்றுக்கு ஒன்று குறைவான) பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கம் நுழைவார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

முஸ்லிம்கள்/கிறிஸ்தவர்கள் சிந்திக்க சில கேள்விகள்:

  1. அல்லாஹ்வின் 99 பெயர்களை மனனம் செய்தால் சொர்க்கம் செல்ல அனுமதி கிடைத்துவிடுமா?
  2. முஸ்லிம்கள் சொர்க்கம் செல்வதற்கு ஐந்து வேளை வாழ்நாள் முழுவதும் தொழுவதும், தான தர்மங்கள் செய்வதும், மற்ற காரியங்களைச் செய்வதும் தேவையில்லை தானே?
  3. கிறிஸ்தவர்களே! எங்கேயாவது பைபிளில் "இந்த வசனங்களை அல்லது தேவனின் பட்டப்பெயர்களை மனப்பாடம் செய்யுங்கள், அப்போது பரலோகம் நிச்சயம்" என்று சொல்லப்பட்டுள்ளதா?
  4. முஸ்லிம்களே! இந்த ஹதீஸில் முஹம்மது சொல்லியுள்ளவைகள்(99 பெயர்களை மனனமிட்டவர் சொர்க்கம் நுழைவார்), குர்‍ஆனின் மற்றும் இஸ்லாமின் இதர சட்டங்களுக்கு எதிராக உள்ளதல்லவா?

கேள்வி 266: ஹதீஸ்களை தொகுத்தவர்கள் யார்? (முஹம்மதுவா? சஹாபாக்களா?)

பதில் 266: ஹதீஸ்களை முஹம்மது தொகுக்கவில்லை, சஹாபாக்கள் கூட தொகுக்கவில்லை. முஹம்மதுவிற்கு 200 ஆண்டுகளுக்கு பிறகு வந்த முஸ்லிம்கள் தொகுத்தார்கள்.

கேள்வி 267: இப்னு இஷாக்கின் "ஸீரத் ரஸூல் அல்லாஹ்" புத்தகத்தை எங்கு வாங்கலாம்?

பதில் 267: 

ஹதீஸ்களுக்கு முன்பாக எழுதப்பட்ட ஸீரத் ரஸூல் அல்லாஹ் சரித்திர புத்தகத்தை கீழ்கண்ட அமேஜான் தளத்தில் வாங்கலாம்:

இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ள கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கவும்:

கேள்வி 268: முஹம்மதுவின் காலத்தில் ஒரு கிறிஸ்தவன் முஸ்லிமாக மாறி, முஹம்மதுவின் வஹியை எழுதுபவனாக இருந்து, மறுபடியும் இஸ்லாமை விட்டுவிட்டதாகச் சொல்கிறார்களே, இதைப் பற்றிய ஹதீஸ் இருந்தால் கொடுக்கமுடியுமா?

பதில் 268: கீழ்கண்ட ஹதீஸை படிக்கவும்:

நூல் புகாரி எண்: 3617

3617. அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் கிறிஸ்தவராக இருந்தார். பிறகு, அவர் இஸ்லாத்தைத் தழுவினார். 'அல்பகரா' மற்றும் 'ஆலு இம்ரான்' அத்தியாயங்களை ஓதினார். அவர் நபி(ஸல்) அவர்களுக்காக (வேத வெளிப்பாட்டை) எழுதி வந்தார். அவர் (மீண்டும்) கிறிஸ்தவராகவே மாறிவிட்டார். அவர் (மக்களிடம்) 'முஹம்மதுக்கு, நான் அவருக்கு எழுதித் தந்தைத் தவிர வேறெதுவும் தெரியாது' என்று சொல்லிவந்தார். பிறகு அல்லாஹ் அவருக்கு மரணத்தையளித்தான். அவரை மக்கள் புதைத்துவிட்டனர். ஆனால் (மறு நாள்) அவரை பூமி துப்பிவிட்டிருந்தது. உடனே, (கிறிஸ்தவர்கள்), 'இது முஹம்மது மற்றும் அவரின் தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களைவிட்டு ஓடி வந்துவிட்டதால் அவரின் மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டுவிட்டார்கள்' என்று கூறினார். எனவே, அவருக்காக இன்னும் அழகாக ஒரு புதை குழியைத் தோண்டினர். (அதில் புதைத்த பின்பு) மீண்டும் பூமி அவரை (வெளியே) துப்பி விட்டிருந்தது. அப்போதும், 'இது முஹம்மது மற்றும் அவரின் தோழர்களுடைய வேலைதான். நம் தோழர் அவர்களைவிட்டு வந்துவிட்ட காரணத்தால் அவரைத் தோண்டி எடுத்து மண்ணறைக்கு வெளியே போட்டுவிட்டனர்' என்று கூறினர். மீண்டும் அவர்களால் குழியை அவருக்காகத் தோண்டி அதில் அவரைப் பூமி அவரை முடிந்த அளவிற்கு மிக அழமான குழியை அவருக்காகத் தோண்டி அதில் அவரைப் புதைத்தனர். ஆனால், அவரை பூமி மீண்டும் துப்பி விட்டிருந்தது. அப்போதுதான் அது மனிதர்களின் வேலையல்ல. (இறைவனின் தண்டனை தான்) என்று புரிந்து கொண்டனர். அவரை அப்படியே (வெளியிலேயே) போட்டுவிட்டனர்.

முஹம்மதுவிற்கு பிறகு எழுதப்பட்ட கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்று.

கேள்வி 269: ஹதீஸ்களில் இந்தியா பற்றி ஏதாவது விவரங்கள் உள்ளன?

பதில் 269: ஒரு குறிப்பிட்ட இந்திய குச்சிக்கு மருத்துவ குணம் உள்ளது என்று முஹம்மது கூறியதாக, ஹதீஸ்கள் உள்ளது.

நூல் புகாரி 5692, 5713, 5715 & 5718:

5692. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன. அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். (மார்புத் தசைவாதத்தால் ஏற்படும்) விலா வலிக்காக அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படும்.

என உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) அறிவித்தார்.

கேள்வி 270: "கஜ்வா ஈ ஹிந்த்(Ghazwa-e-Hind - Battle of India)" என்ற  பெயரில் முஹம்மது “இந்தியாவின் மீது முஸ்லிம்களின் யுத்தம்” பற்றி முன்னறிவித்தார் என்று சொல்கிறார்களே, இது என்ன?

பதில் 270: சன்னி முஸ்லிம்களின் ஆறு ஹதீஸ்களில் ஒன்றான "நஸயி" என்ற ஹதீஸ் தொகுப்பில் "இந்தியாவை முஸ்லிம்கள்" வெல்வார்கள் என்று முஹம்மது கூறியதாக ஹதீஸ் வருகிறது.

இது பலவீனமான ஹதீஸ்(Da'if) என்று கீழ்கண்ட தொடுப்பும், சில முஸ்லிம்களும், இது உண்மையான ஹதீஸ் என்று வேறு சிலறும் கூறுகிறார்கள்.

41) Chapter: Invading India

It was narrated that Abu Hurairah said:

"The Messenger of Allah (ﷺ) promised us that we would invade India. If I live to see that, I will sacrifice myself and my wealth. If I am killed, I will be one of the best of the martyrs, and if I come back, I will be Abu Hurairah Al-Muharrar." [1] [1] Al-Muharrar: The one freed (from the Fire).

நாங்கள் இந்தியா மீது படையெடுப்போம் என்று அல்லாஹ்வின் தூதர் (ﷺ) எங்களுக்கு வாக்குறுதி அளித்தார். அதைப் பார்க்க நான் வாழ்ந்தால், நானும் எனது எனது செல்வத்தையும் தியாகம் செய்வேன். நான் கொல்லப்பட்டால், நான் தியாகிகளில் மிகச் சிறந்தவனாக இருப்பேன், நான் அந்த போரில் வெற்றிப்பெற்று திரும்பி வந்தால், நான் (அபு ஹுரைரா) அல் முஹர்ராக இருப்பேன்(நெருப்பிலிருந்து - நரகத்திலிருந்து விடுபட்டவானாக இருப்பேன்).

  • Grade : Da'if (Darussalam)
  • Reference : Sunan an-Nasa'i 3173
  • In-book reference : Book 25, Hadith 89
  • English translation : Vol. 1, Book 25, Hadith 3175

தேதி: 16th May 2020


2020 ரமளான் தொடர் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள் பக்கம்