2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்! உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?

உமருக்கும் அவரது தம்பிக்கும் இடையே நடைப்பெற்ற முந்தைய கடிதபரிமாற்றத்தை படிக்க இங்கு சொடுக்கவும்.

இந்த கடிதம் 3வது கடிதமாகும்.

அன்பான அண்ணன் உமர் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்கள் கடிதம் கண்டேன், படித்தேன் என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்து தூரமாக வீசிவிட்டேன். நான் சொல்வது உங்களுக்கு புரிகின்றதா? நீங்கள் இப்போது சிந்தித்துக்கொண்டு இருப்பது சரி தான், எனக்கு ஐஎஸ் பற்றி முழு விவரமும் தெரிந்துவிட்டது. நேற்றுவரை நான் ஐஎஸ் பற்றி அதிகமாக ஆய்வு செய்யாமல் இருந்துவிட்டேன், உங்கள் கடிதத்தை படித்ததும், அவர்கள் பற்றிய முழு விவரங்களையும் அறிந்துக் கொண்டேன். 

உங்களுக்கு ஒரு நற்செய்தி, நான் உண்மையாகவே சில வாரங்களுக்கு பிறகு, சிரியாவிற்குச் செல்லலாம் என்று எண்ணியிருந்தேன், ஐஎஸ் குழுவுடன் சேர்ந்து அல்லாஹ்விற்கு தொண்டு செய்யலாம் என்று விரும்பினேன், ஆனால், இப்போது உண்மையை நான் முழுவதுமாக அறிந்துக்கொண்டேன். அவர்கள் செய்வது இஸ்லாமுக்கு எதிரானது என்பதை முழுவதுமாக அறிந்துக் கொண்டேன்.  அவர்கள் இஸ்லாமின் எதிரிகள் ஆவார்கள், அவர்கள் இஸ்லாமுக்கு இழுக்கு என்பதை அறிந்துக் கொண்டேன்.  இதர இஸ்லாமியர்களை பிடித்து, துன்புறுத்தி, பெண்களை அடிமைப்படுத்துகிற இவர்கள் உண்மையாகவே முஸ்லிம்கள் இல்லை. 

சும்மா சொல்லக்கூடாது, உங்கள் கடிதம் எனக்கு ஆரம்பத்தில் வேதனையை கொடுத்தாலும், கோபத்தை கொண்டு வந்தாலும், ஐஎஸ் பற்றிய அறியாமையை அது போக்கிவிட்டது. முதலாவதாக, உங்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், அடுத்தது என்ன? 

என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள், ஆனால், இன்னும் உங்கள் கண்களில் உத்திரம் அல்லது பெரிய கட்டை உள்ளதே, அதை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?

ஐஎஸ் பற்றி நீங்கள் சொன்னது உண்மையாக இருந்தது என்பதற்காக, எங்கள் இறைத்தூதர் பற்றியும், இஸ்லாமின் கலிஃபாக்கள் பற்றியும் நீங்கள் சொன்னவைகளை ஏற்றுக் கொள்ளமுடியாது. 

நான் நேர்மையாக நடந்துக் கொண்டேன், அதே போல நீங்களும் நேர்மையாக நடந்துக் கொள்ளுங்கள். இஸ்லாமை விமர்சிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு செயல்படுதை நிறுத்திக்கொள்ளுங்கள். இஸ்லாமின் ஆரம்ப கால சரித்திரங்களை படித்துப் பாருங்கள். தற்கால முஸ்லிம்களிடத்தில் நீங்கள் குறைகளை கண்டுபிடிக்கலாம், ஆன்மீக குளறுபடிகளை பார்க்கலாம், ஆனால், இறைத்தூதரோடு இருந்து அவரோடு வாழ்ந்த நபித்தோழர்கள், மற்றும் அவரைக் கண்டு, அவரிடமிருந்து இஸ்லாமையும், இஸ்லாமிய ஆன்மீகத்தையும் கற்றவர்களிடத்தில் நீங்கள் எந்த பிழைகளையும் காணமுடியாது. இதனை ஒரு சவாலாகவே நான் உங்களுக்கு முன்பாக வைக்கிறேன்.

என்னை இஸ்லாமிய ஆரம்ப கால நூல்களை படிக்கச் சொல்வதை விட்டுவிட்டு, முதலாவது நீங்கள் படித்துப் பாருங்கள். 

முக்கியமாக, இறைத்தூதரை கண்டவர்களாகிய அவரது தோழர்கள், குடும்ப நபர்கள், உறவினர்கள் போன்றவர்கள் பற்றிய ஒரு சிறிய ஆய்வையாவது நீங்கள் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நபித்தோழர்கள் ஒவ்வொருவரின் நற்பண்புகள் பற்றிய விவரங்களை சேகரித்து, நான் உங்களுக்கு  சுருக்கமாக எழுதி அனுப்புகிறேன். அப்போது தான் உங்களுக்கு இஸ்லாமின் உண்மைநிலை புரியும், தற்காலத்தில் வாழும் முஸ்லிம்களைக் கண்டு இஸ்லாமின் தரத்தை நிர்ணயிப்பது சரியானது அல்ல.

தம்பி, கிறிஸ்தவர்களை பார்க்காதே, கிறிஸ்துவைப் பார், அவரது சீடர்களைப் பார், ஆரம்ப கால ஆதித்திருச்சபையை பார் என்று நீங்கள் அடிக்கடி சொல்லுவீர்கள் அல்லவா? அது போல, தற்கால இஸ்லாமியர்களைப் பார்க்காதீர்கள், ஆரம்ப கால இஸ்லாமியர்களைப் பாருங்கள் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன். 

உங்கள் கடிதத்தில் நீங்கள் ”இஸ்லாமிய இறையியல் தான் வன்முறைக்கு காரணம்” என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். உங்களின் இந்த நிலைப்பாடு தவறானது என்பதை நான் நிருபிக்கிறேன். இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கம் என்பதை உங்களுக்கு புரியும்படி, உங்களுக்கு நான் போதனைச் செய்வேன், காத்துக்கொண்டு இருங்கள். 

உங்களை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.

இப்படிக்கு,

உங்கள் தம்பி

சௌதி அரேபியா

தேதி: 18 ஜூன் 2015


மேற்கண்ட கடிதத்திற்கு உமரின் சுருக்கமான  பதில்.

எனதருமை தம்பிக்கு,

உன் அண்ணன் உமரின் வாழ்த்துதல்கள்.

உன் கடிதம் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு முஸ்லிம் வாயிலிருந்தும் ஒரு கிறிஸ்தவனுக்கு நற்செய்தி கிடைக்குமா? ஆம், எனக்கு அந்த நற்செய்தி என் தம்பி மூலமாக கிடைத்தது, என் தம்பி, எந்த ஒரு தீவிரவாத குழுவோடும் இனி இணையமாட்டான். இந்த விஷயம் எனக்கு நற்செய்தியாக இருக்கிறது. நம் குடும்பமும் இதனை அறிந்தால், மிகவும் சந்தோஷப்படுவார்கள்.

அடுத்தபடியாக, நீ முன் வைத்த சவாலை நான் மகிழ்ச்சியாக ஏற்கிறேன். ஆரம்ப கால இஸ்லாமிய நடபடிகளை நாம் இரண்டு பேரும் இணைந்து படிப்போம், ஆய்வு செய்வோம். உண்மையாகவே, நீ சொல்வது நிருபிக்கப்பட்டால், அதாவது ஆரம்ப கால முஸ்லிம்கள் அன்புடனும், நட்புடனும், அமைதியாக வாழ்ந்திருந்தால், இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கம் என்று அவர்கள் நிருபித்திருந்தால், நான் அதனை உலகிற்கு அறிவிக்க தயங்கமாட்டேன்.

அதற்கு முன்பாக, உன் ஆன்மீக தேடலின் பசியை சிறிது ஆற்றலாம் என்று எண்ணி கீழ்கண்ட ஒரு தொடுப்பை தருகிறேன். ஒரு முறை படித்துப் பார்.

இயேசுவின் அரசும் முஹம்மதுவின் அரசும் (ISIS இஸ்லாம் அங்கீகரிக்கும் ஒன்றா?) பாகம் - 1

இப்படிக்கு,

உன் அண்ணன்

உமர்.

தேதி: 18 ஜூன் 2015


உமரின் ரமளான் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்