Dr. ஜாகிர் நாயக்கை திட்டாதீர்கள் பாகம் 4

பின் லாடன் பற்றி ஆய்வு செய்ய 15 ஆண்டுகளாக ஜாகிர் நாயக்கிற்கு நேரம் கிடைக்கவில்லை

முன்னுரை:

பாங்களாதேஷில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, ஜாகிர் நாயக்கின் பெயர் செய்திகளில் அதிகமாக அடிபட்டுக்கொண்டு இருக்கின்றது. அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு இது தான்: ’ஜாகிர் நாயக் இஸ்லாமிய தீவிரவாதிகளை ஊக்குவிக்கிறார் அல்லது இவரது பேச்சுக்கள் தீவிரவாதிகளுக்கு உதவியாக இருக்கின்றது’ என்பதாகும்.

’பின்லாடன் தீவிரவாதியா அல்லது நல்லவரா என்று எனக்குத் தெரியாது’ என்று வெகுளித்தனமாக டாக்டர் ஜாகிர் நாயக் தம் இரு கைகளையும்  உயர்த்தி சரணடைந்துவிட்டார். இதே பதிலை ஜாகிர் நாயக் ஆதியிலிருந்து சொல்லிக்கொண்டு இருக்கிறார். இந்த பதிலுக்கு பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள் என்ன? என்பதை ஆய்வு செய்வது தான் இக்கட்டுரையின் நோக்கம்.  பின்லாடன் குறித்து ஜாகிர் நாயக் சொன்ன பதில் பற்றி ‘ஆய்வு செய்யக்கூடிய அளவிற்கு முக்கியமானதோ?’ என்ற சந்தேகம் நமக்கு எழலாம்.  ஒவ்வொரு இந்தியனும் கட்டாயமாக அறியவேண்டிய விவரம் இந்த பதிலில் உள்ளது.

இக்கட்டுரையின் தலைப்புக்கள்:

1) ’பின் லாடன் பற்றி எனக்குத் தெரியாது’ என்ற பதில்

2) ஏன் IRF இன்னும் பின் லாடன் பற்றி ஆய்வு செய்யவில்லை?

3) இஸ்லாமின் பெயரை கெடுக்கிறார் என்று கருதப்படும் நபரைப் பற்றி ஏன் இன்னும் ஜாகிர் நாயக் 15 ஆண்டுகள் ஆகியும் ஆய்வு செய்யாமல் இருக்கிறார்?

4) முஸ்லிம்கள் அடுத்து என்ன செய்யவேண்டும்?

முடிவுரை


1) ’பின் லாடன் பற்றி எனக்குத் தெரியாது’ என்ற பதில்

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக உலகின் பல நாடுகளுக்கு பயணம் செய்து, பல மேடைகளில் இஸ்லாம் பற்றி பேசி வருபவர் டாக்டர் ஜாகிர் நாயக் ஆவார்கள். இவரது பேச்சுத்திறமையை முஸ்லிம்கள் அதிகமாக மெச்சிக்கொள்வார்கள். குர்-ஆனிலிருந்து மட்டுமல்ல, இதர மத வேதங்களிலிருந்தும் பல மேற்கோள்களை மனப்பாடமாகச் சொல்லக்கூடியவர் ஜாகிர் நாயக் அவர்கள்.

கீழ்கண்ட மூன்று தொடுப்புக்களில் ஜாகிர் நாயக் அவர்கள் இவ்விதமாக‌ பதில் சொல்லியுள்ளார்:

அ) நான் பின் லாடன் பற்றி ஆய்வு செய்யவில்லை.

ஆ) எனக்கு அவரைப் பற்றித் தெரியாது.

இ) ஊடகங்கள் சொல்லும் செய்திகளை வைத்துக்கொண்டு என்னால் அவரைப் பற்றிய என் கருத்தைச் சொல்லமுடியாது.

ஈ) குர்-ஆனின் படி ஒருவரைப் பற்றி ஆய்வு செய்யாமல் கருத்தைச் சொல்லக்கூடாது.

எ) எனவே, பின்லாடன் ஒரு தீவிரவாதி என்றோ அல்லது நல்லவர் என்றோ எனக்குத் தெரியாது.

வீடியோ ஆதாரம் 1: பின் லாடன் பற்றி, 2016 ஜுலை மாதத்தில் அவர் சௌதியிலிருந்து கொடுத்த பதில் (ஆங்கிலம்):

https://www.youtube.com/watch?v=5-7K2rzXj70  

வீடியோ ஆதாரம் 2: இந்த வீடியோ 2010ம் ஆண்டு, மார்ச் 21ம் தேதி யுடியூபில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. NDTV டீவியில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மக்கள் கூடியிருக்கும் அவையில், தனக்கு பின் லாடன் பற்றி தெரியாது என்ற அதே பதிலை அளித்துள்ளார் ஜாகிர் நாயக் (ஆங்கிலம்).

https://www.youtube.com/watch?v=9uA5rQk9pK0

வீடியோ ஆதாரம் 3: இந்த வீடியோவில் அவர் உருதுவில் பதில் அளிக்கிறார். தாலிபான் மற்றும் பின் லாடன் பற்றி கேள்வி கேட்டபோது, இதே பதிலை இன்னும் பல விவரங்களோடு பதில் அளித்துள்ளார் ஜாகிர் நாயக்.

https://www.youtube.com/watch?v=c9R-NZV9TKs

2) ஏன் IRF இன்னும் பின் லாடன் பற்றி ஆய்வு செய்யவில்லை?

ஜாகிர் நாயக்கின் மேற்கண்ட பதில் பற்றி முஸ்லிம்களில் சிலர் இவ்விதமாக சொல்லக்கூடும்:

‘அவர் சொன்ன பதில் உண்மை தானே. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்ற திருக்குறளுக்கு இணங்க, ஆய்வு செய்யாமல் ஒருவர் தம் கருத்தை சொல்லக்கூடாது என்று அவர் சொன்னது வரவேற்கத்தக்கது தானே!’

மெய்ப்பொருள் காணாமல், வெறுமனே கருத்தைச் சொல்வது ஆபத்தானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், ஜாகிர் நாயக் இந்த பதிலைச் சொன்னது தான் ஆச்சரியம்! ஏன் என்று கேட்பவர்கள் கீழ்கண்ட விவரங்களை கவனியுங்கள், அதன் பிறகு ’ ஏன்  ஜாகிர் நாயக்கின் பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை’ என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.

1) திரு ஜாகிர் நாயக் ஒரு மருத்துவர் (MBBS), மேலும் 25 ஆண்டுகளுக்கு மேலாக உலகமனைத்திலும் பயணம் செய்து, பல தரப்பட்ட மக்களோடு பேசுகின்றவர், இஸ்லாம் பற்றிய சந்தேகங்களை தீர்க்கிறார் (இவர் கல்லியில் கில்லி விளையாடும் சுட்டிப்பையன் அல்ல). இவருடைய மதிப்பே தனி, இதனை முஸ்லிம்கள் ஆமோதிப்பார்கள்.

2) IRF (Islamic Research Foundation) இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையை துவக்கி அதன் தலைவராக 1991ம் ஆண்டிலிருந்து இருக்கிறார்.

3) பீஸ் டீவி என்ற டீவியை துவக்கி அதன் மூலம் இஸ்லாமை உலகமனைத்திலும்  பரப்பிக்கொண்டு இருக்கிறார்.

4) இப்படிப்பட்ட மிகப்பெரிய பின்னணியைக் கொண்ட இவரும், இவரது ஆராய்ச்சி அறக்கட்டளையும், ஏன் பின் லாடன் பற்றிய ஆய்வை இது வரை செய்யவில்லை? குறைந்த பட்சம் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட ஆண்டிலிருந்து கணக்கெடுத்தாலும், கடந்த 15 ஆண்டுகளாக ஏன் ஆய்வு செய்யவில்லை?

IRF கட்டாயம் பின் லாடன் பற்றி ஆய்வு செய்யவேண்டியது அவசியமா?

இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை துவக்கப்பட்டதின் நோக்கம், இஸ்லாமிய தாவா செய்யவே தவிர, உலக வர்த்தக மையத்தை தாக்கியவர் என்று அடையாளம் காட்டப்பட்டவர் பற்றி ஆய்வு செய்வதற்கல்ல? என்று முஸ்லிம்கள் கேட்கலாம்.  

முஸ்லிம்களே! உங்களுக்கு அதிகமாக அறியாமை உள்ளது. பின் லாடன் யார்? அவரது இயக்கத்தின் நோக்கமென்ன? என்று அடையாளம் காணவேண்டியது முஸ்லிம்களின் தலையாய கடமையாகும்? ஏன் என்று கேட்டால், பின்லாடன் தன்னை ஒரு முஸ்லிம் என்றுச் சொல்லி தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதினாலும், பல அப்பாவி மக்களை கொல்வதின் மூலமாகவும், இஸ்லாமுக்கு அவப்பெயரை கொண்டு வந்திருக்கிறார்.  இஸ்லாமுக்கு உண்டான இந்த அவப்பெயரை நீக்கவேண்டும் என்பது IRFன் கடமையல்லவா? இஸ்லாமின் தூய்மையை நிலை நாட்டுவதற்கு ஆய்வு செய்வது IRFன் பொறுப்பில்லையா?

எனவே, IRF நிச்சயம் அவர் யார் என்பதை அடையாளம் காணவேண்டும், உலக மக்களுக்கு முக்கியமாக இந்தியர்களுக்கு அவரைப் பற்றிய உண்மையை தெரிவிக்கவேண்டும்.

இஸ்லாமிய‌ ஆராய்ச்சி அறக்கட்டளை இந்த ஆய்வைச் செய்யாத பட்சத்தில், பின் லாடனுக்கும், இந்த அறக்கட்டளைக்கும்  ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது, இதனால் தான் IRF  தன் ஆய்வின் முடிவை வெளியே சொல்லாமல் மறைக்கிறது  என்று மக்கள் நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது?

3) இஸ்லாமின் பெயரை கெடுக்கிறார் என்று கருதப்படும் நபரைப் பற்றி ஏன் இன்னும் ஜாகிர் நாயக் 15 ஆண்டுகள் ஆகியும் ஆய்வு செய்யாமல் இருக்கிறார்?

இஸ்லாமிய  ஆராய்ச்சி அறக்கட்டளை, பின் லாடன் யார் என்று இதுவரை ஆய்வு செய்து தெரிந்துக்கொள்ளாதது முதலாவது குற்றமாகும். இரண்டாவது குற்றம் ஜாகிர் நாயக் செய்வது. அதாவது சில மணி நேரம் செலவிட்டு,  பின் லாடன் பேசிய வீடியோக்களை பார்த்தாலே போதும் அவர் யார் என்று புரிந்துவிடும். ஆனால், ’இதோ இஸ்லாமை வளர்க்க வந்துவிட்டேன், ஆய்வு செய்ய வந்துவிட்டேன்’ என்றுச் சொல்லக்கூடிய ஜாகிர் நாயக் அவர்களுக்கு, இஸ்லாமுக்கு அவப்பெயரை கொண்டு வந்துகொண்டு இருந்த பின் லாடன் பற்றி ஆய்வு செய்ய சில மணித்துளிகள் இல்லையாம்! எப்படியெல்லாம் மக்களை ஏமாற்ற பார்க்கிறார் இந்த மருத்துவர் என்று பாருங்கள்!

25 ஆண்டுகளாக இஸ்லாமிய தாவா செய்வதாக காட்டிக்கொள்ளும் இவரிடம், ஒரு மணி நேரம் இந்த ஆய்விற்காக கிடைக்கவில்லையா? பின் லாடன் பற்றிய சில ஆய்வுக் கட்டுரைகளை இணையத்தில் படிக்க இவரிடம் நேரமில்லையா? எப்படிப்பட்ட வெளிவேஷம் பாருங்கள்.

இந்தியாவில் பல இஸ்லாமிய குழுக்கள், பின் லாடன் தீவிரவாதி என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், இந்த மருத்துவரோ, வெளிப்படையாக பின் லாடன் ஒரு தீவிரவாதி என்றுச் சொல்ல மறுக்கிறார். காரணம் என்னவாக இருக்கும்?

ஒருவேளை சௌதி அரேபியாவிலிருந்து IRF ஆய்விற்காக வரும் பெட்ரோல் பணத்தோடுக் கூட, பின் லாடன் பற்றி எதையும்  பேசக்கூடாது? ஆய்வு செய்து உண்மைகளை உலகிற்குச் சொல்லக்கூடாது என்ற துண்டு சீட்டும் வருகிறதா?

பல ஆண்டுகளாக பாடிய பல்லவியையே ஏன் பாடிக்கொண்டு இருக்கிறார் இவர்? ‘ஆய்வு செய்யவில்லை, ஆய்வு செய்யவில்லை’ என்று சொல்லும் இவரிடம் ‘எப்போது ஆய்வு செய்வீர்கள்’ என்று யாராவது கேட்டதுண்டா? இந்தியாவில் இருக்கும் இதர இஸ்லாமிய குழுக்களுக்கு ஆய்வு செய்ய நேரம் கிடைக்கும் போது, இவருக்கு மட்டும் ஏன் நேரம் கிடைக்கவில்லை?

IRF பல கோடி பெட்ரோல் பணத்தை செலவிட்டு ஆய்வு செய்யத் தேவையில்லை. இணையத்தில் உலாவரும் அல்கெய்தா வெளியிட்ட செய்திகளை, வீடியோக்களை ஒரு மணிநேரம் பார்த்தாலே போதும் பின் லாடன் யார் என்பதை புரிந்துக்கொள்ளலாம். ஒட்டு மொத்த இந்தியர்களுக்கு தன் வார்த்தைகளால் காதுகுத்த முடிவு செய்துவிட்டார் ஜாகிர் நாயக்! அவர் குத்தும் போது நாமும் அமைதியாகவே இருந்துவிட்டு வந்துக்கொண்டு இருக்கிறோம்.

ஆய்வு செய்து பதில் அளிக்கும் படி குர்-ஆன் சொல்லியுள்ளதாம், எனவே CNN, BBC போன்ற சானல்களில் வரும் செய்திகளை இவர் நம்பமாட்டாராம்! உடனே,  பத்திரிக்கையாளர் சிரித்துக்கொண்டு, மிகவும் கேவலமான தோரணையில், ’நீங்கள் அல் ஜஜீரா போன்ற இஸ்லாமிய சானல்களில் வரும் செய்திகளையும் நம்புவதில்லையா?’ என்று கேட்கிறார். இவர் தன்னைப் பற்றிச் சொல்லும் போது ‘நான் ஆராய்ச்சி செய்பவன் (I am a man of Research)’ என்றுச் சொல்கிறார். (மேற்கண்ட வீடியோ தொடுப்புக்களில் இரண்டாவது தொடுப்பைப் பாருங்கள்).

ஆராய்ச்சி சிகாமணி ஜாகிர் நாயக் அவர்களே! ஆராய்ச்சி செம்மலே! பல ஆண்டுகளாக அதாவது 2016 ஜூலை  வரை பின்லாடன் பற்றி ஏன் நீங்கள் ஆராய்ச்சி செய்யவில்லை? பின் லாடன் பற்றி நீங்கள் ஆராய்ச்சி செய்யக்கூடாது என்று உங்கள் கரங்களை யாராவது கட்டி வைத்திருக்கிறார்களா? அல்லது உங்களுக்கே ஆய்வு செய்ய விருப்பமில்லையா? அல்லது சொந்த குடும்ப நபரை காட்டிக்கொடுப்பது எப்படி? என்று நினைத்து அமைதியாக இருக்கிறீரா? சொந்த குடும்பம் என்று நான் சொன்னது, இவரும் அவரும் ஒரே 'இஸ்லாமை' சார்ந்தவர்கள் என்பதால் தான்.

ஆராய்ச்சிக்கு என்று ஒரு அறக்கட்டளை, ஆனால் ஆராய்ச்சி செய்யாது. நான் ஆராய்ச்சி நாயகன் என்று பேசுவார், ஆனால், ஆராய்ச்சி செய்யமாட்டார். இந்தியர்களே! நம் தலை எழுத்தைப் பார்த்தீர்களா?

4) முஸ்லிம்கள் அடுத்து என்ன செய்யவேண்டும்?

ஜாகிர் நாயக் ஒரு முஸ்லிம். பின் லாடன் ஒரு முஸ்லிம். பின் லாடன் இந்து மதத்திற்கோ, கிறிஸ்தவத்திற்கோ தம் செயல்களால் அவப்பெயரை கொண்டுவரவில்லை, இஸ்லாமுக்கு அவப்பெயரை கொண்டு வந்துக்கொண்டு இருந்தார். இஸ்லாமில் இருந்துக்கொண்டு, இஸ்லாமை வளர்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, இஸ்லாமுக்கு நன்றி விசுவாசம் காட்டாமல், ஜாகிர் நாயக் பின்லாடனை ஆதரிக்கும் படி பேசுகிறார். இதற்கு யார் பொறுப்பேற்பது? முஸ்லிம்கள் தான் தங்கள் தரப்பிலிருந்து ஜாகிர் நாயக்கிற்கு பாடம் கற்பிக்கவேண்டும், அவரை புறக்கணிக்கவேண்டும்.

ஜாகிர் நாயக் ஒரு புகழ்பெற்ற இஸ்லாமிய சொற்பொழிவாளர், அவர் மூலமாக அனேக முஸ்லிம்கள் தவறான வழியில் செல்ல வாய்ப்பு உண்டு. எனவே, முஸ்லிம்கள், தாங்கள் செய்த ஆய்வை ஜாகிர் நாயக்கிற்கு அனுப்பி,  நீங்களும் ஆய்வு செய்து உங்கள் முடிவைச் சொல்லுங்கள் என்று கேட்கவேண்டும். நாங்கள் சொன்னால் அவர் கேட்கமாட்டார் என்று நீங்கள் சொல்வீர்களென்றால், ’இஸ்லாமுக்கு அவப்பெயரை கொண்டு வருபவர்களில் உங்களுக்கும் பங்கு உண்டு’ என்று அர்த்தமாகின்றது.

கடந்த 15 ஆண்டுகளாக, ’எனக்கு தெரியாது, நான் ஆய்வு செய்யவில்லை’ என்ற ஒரே பதிலை அவர் சொல்லிக்கொண்டு இருக்கிறார். இவர் சொல்வது எப்படி உள்ளதென்றால், ‘இவரிடம் எயிட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடி என்று சொன்னது மாதிரியும், ஆப்ரிக்கா காடுகளில், இன்னும் இதர உலக காடுகளுக்குச் சென்று சரியான மூலிகைகளை கண்டுபிடித்து, ஆராய்ச்சி செய்து  மருந்தை கண்டுபிடிக்கும் படி இவரிடம் கேட்டுக்கொண்டது போலவும் உள்ளது’. ஆய்வு செய்யும் வரை பின் லாடன் யார் என்று பதில் சொல்லமாட்டாராம்? சரி, எப்போது ஆய்வு செய்வீர்கள்? என்று கேட்டால் பதிலைக் காணவில்லை.

மருத்துவத்துக்கு படித்து, இஸ்லாமிய நாடுகள் கொடுக்கும் விருதுகளைப் பெற்று, 2000க்கும் அதிகமான மேடைகளை தன் வார்த்தைகளால் வசியம் செய்து, பாமர மனிதன் முதற்கொண்டு, மேதாவிகள் வரையுள்ளவர்களிடம் உரையாடும் இந்த உலக புகழ்பெற்ற சொற்பொழிவாளர் தனக்கு இன்னும் ’பின் லாடன் யார் என்று தெரியாது’ என்றுச் சொல்வது அடிமுட்டாள் தனமாகும். இதனை கேட்டுக்கொண்டு நாமும் சும்மா இருக்கிறோம் பாருங்கள்,  இது அதை விட மிகப்பெரிய அறிவீனமாகும்.  முஸ்லிம்களே! விழித்துக்கொள்ளுங்கள்.

’கழிவறைகளைக் கட்டி பயன்படுத்துங்கள்’ என்று இந்திய அரசாங்கம் சொல்லும் அளவிற்கு நம் நாட்டில் ஆரோக்கியம் பற்றிய அறியாமை உள்ளது பாருங்கள், அதைவிட கேவலமான அறியாமையில் முஸ்லிம் சமுதாயம் உலகமனைத்திலும் இருக்கிறது. முஸ்லிம் சமுதாயம் விழித்துக் கொள்ளாதவரை இப்படிப்பட்ட அனேக ஜாகிர் நாயக்குகள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள். கஹாங் சோச் ஹை, வஹாங் சௌசாலே.

முடிவுரை

ஒரு இஸ்லாமிய மேதாவி, எனக்கு பின்லாடன் பற்றி தெரியாது என்றுச் சொல்வது கேவலம். இது முஸ்லிம்களையும், இதர மக்களையும் ஏமாற்றும் ஒரு தந்திரம். இதன் விளைவு? தீவிரவாதிகளாக மாறலாம் என்று விரும்பும் முஸ்லிம்கள் இளைஞர்களுக்கு இவருடைய இப்படிப்பட்ட பதில்கள் ஒரு வரப்பிரசாதம். பின் லாடன் ஒரு தீவிரவாதி என்று உலக மகா அறிஞர் சொல்லவில்லை, அதுவும் ஊடகங்கள் கேட்டாலும் சொல்லவில்லை, அப்படியானால் என்ன அர்த்தம்? குர்-ஆனின் படி, ஹதீஸ்களின் படி, பின் லாடன் ஒரு ஹீரோவாக இருக்கிறார் என்பது தான் அர்த்தம், என்று மூளைச் சலவை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் நினைப்பார்கள். இதன் அறுவடையை இன்று நாம் கண்டுக்கொண்டு இருக்கிறோம், ஐஎஸ் என்ற தீவிரவாத இயக்கத்தோடு சேர்ந்து சண்டையிட, நம் இந்திய முஸ்லிம் வாலிபர்கள்  வீட்டையும் நாட்டையும் விட்டு, சென்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

இவருடைய பதில்களை மேலோட்டமாக கேட்கும் போது, தீவிரவாதிகளை இவர் ஆதரிப்பதைப்போல தெரியாது. ஆனால், குர்-ஆனின் சாயம் பூசி, ஒரு சில உதாரணங்களைச் சொல்லி, இவர் சொல்லும் பதில்களை கூர்ந்து கவனித்தால், இவர் தாலிபான், அல்கெய்தா போன்ற தீவிரவாதிகளை வெளிப்படையாக ஆதரிப்பதை காணலாம் (மேலே கொடுத்த மூன்றாவது உருது வீடியோவை முழுவதுமாக பாருங்கள்).

பின் லாடன் பல வீடியோக்களில் தோன்றி, தன் செயல்களை விவரிக்கும் போது, அதைப் பார்த்துவிட்டு, ஜாகிர் நாயக் ‘இவர் ஒரு தீவிரவாதி என்று அறிவதற்கு தேவையான ஆதாரங்கள் எனக்கு கிடைக்கவில்லை’ என்றுச் சொல்வது, புரியாத புதிராக உள்ளது. ஒருவேளை இவரும் அவரும் முஸ்லிம்கள் என்பதால், ’மலர்களைப் போல்  அண்ணன் (லாடன்) உறங்குகிறார், தம்பி (நாயக்) வாழவைப்பான் என்று கனவு கண்டார்’ என்ற பாசமலரின் சகோதரப்பாசம் காரணமாக இருக்குமோ! அல்லாஹ் நோஸ் த பெஸ்ட்.

75 அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு DVD வெளியிட்டார்களாம், அதில் சில அரபியர்கள் உலக வர்த்தக மையம் தாக்குதலை செய்யமுடியாது என்றுச் சொன்னார்களாம், அதனை ஜாகிர் நாயக் நம்புவாராம், ஆனால், பின் லாடனே சுயமாக சொன்னதை நம்பமாட்டாராம்! என்னே ஞானம்! (ஆனால், அதே 75 அமெரிக்க விஞ்ஞானிகள், இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் அல்ல என்று சொல்வார்களானால், அதனை இவர் ஏற்றுக்கொள்வாரா!?!). ஒரு வெள்ளைத்தோல் இஸ்லாமுக்கு சாதகமாக பேசினால், அவருக்கு முஸ்லிம்கள் விருது கொடுப்பார்கள், ஆனால் அதே வெள்ளைத்தோல் ஆய்வு செய்து, இஸ்லாமுக்கு எதிராக பேசினால், அவருக்கு சமாதி கட்டுவார்கள் இவர்கள்.

25 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய சொற்பொழிவுகளை உலகமனைத்திலும் செய்துவரும் ஜாகிர் நாயக், எனக்கு பின் லாடன் பற்றித் தெரியாது என்றுச் சொல்வதை நாம் கேட்டு நம்பினால், அவரது செருப்பை நாமே குனிந்து கழற்றி, நாமே நம் தலையில் அடித்துக் கொள்வதற்கு சமமாகும். இனி மேலும் நம்மில் யாராவது அப்படி அடித்துக்கொள்ள தயாராக இருக்கிறோமா?


Dr. ஜாகிர் நாயக்கிற்கு கொடுக்கப்பட்ட இதர மறுப்புக்கள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்